வெள்ளி, 1 நவம்பர், 2024

Mr and Mrs Iyyar - அதிர்ச்சி வெள்ளத்தில் அள்ளுப்பட்டு கரை ஒதுங்கிய இரு மீன்கள்!

ராதா மனோகர்  Mr. and Mrs. Iyer வெளியான தேதி 19 July 2002!
இதை ஆஸ்கார் தெரிவுக்கு அனுப்பி இருக்கவேண்டும் என்று புகழ் பெற்ற இயக்குனர் கோவிந்த் நிஹலானி (Govind Nihalani wondered if Mr. and Mrs. Iyer could have been sent to the Oscars instead of the regular song-and-dance entries. Eventually, Film Federation of India, the apex organisation that sends the nation's official entries to the Oscars, did not find any film worth sending for the 76th Academy Awards)  இந்த படம் பற்றி கூறியிருக்கிறார்!
பிரபல டைம் பத்திரிகை உட்பட பல பத்திரிகைகளும் உலக திரைப்பட விமர்சகர்களும் மிஸ்டர் அன்ட் மிஸிஸ் அய்யர் பற்றி மிகவும் உயர்வாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஒன்றிய அரசின் ஆஸ்கார் தெரிவு குழுவின் பார்வையில் இது ஆஸ்கர் தெரிவுக்கு உரிய படமாக தெரியவில்லை
இது ஆங்கில படமாக இருப்பதை விட அதிகமாக தமிழ் வங்காளம் போன்ற மொழிகளை உள்ளடக்கிய பல் மொழித்திரைப்படமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவது உண்மைதான்.


குறிப்பாக சிறிய முதலீடுகளில் எவ்வளவு சிறந்த திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதற்கு இது ஒரு அடையாளம்.
பெருஞ்செலவில் தயாரிக்க படங்களோடு போட்டி போட்டுகொண்டு உலக டெலிவிஷன்களிலும் சிறிய படவிழாக்களிலும் கலந்து கொண்டு வசூலிலும் வெற்றி பெற்ற சிறந்த படைப்பு இது,
திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆசை உள்ள அனைவரும் இந்த படத்தை பல தடவை பார்க்கவேண்டும்.
இதன் கதை  அது செல்லும் பாதை  அதை காவிக்கொண்டு பயணிக்கும் பாத்திரங்கள்  அது செல்லும் கரடு முரடான  தெருக்கள் . எல்லாவற்றையும் தாண்டி ஒரு உயிரோட்டம் உள்ள சாதாரண மனிதர்களின் உள்ளே உறங்கி கிடைக்கும் உணர்வுகள்  என்று ஏராளமான விடயங்களை பற்றி மிக பெரிய வகுப்பு எடுத்திருக்கிறது மிஸ்டர் அன்ட் மிஸிஸ் அய்யர்! .

மீள்பதிவு :   mr and mrs iyer விபத்து போல வந்த உறவு பிரிந்தே போகவேண்டியதுதான்  நியதி!.
ஆனாலும்....
மிஸ்டர் அன்ட் மிசிஸ் அய்யர் மனித உணர்வுகளை அதிகமாகவே கிளறி பார்த்துவிட்டது!
கையில் குழந்தையுடன் ரயிலில் ஒரு பெண்.
அறிமுகமே இல்லாத ஒரு ஆண்.
ரயில் போகும் பாதையில்  ஒரு  கடுமையான போர்.
அதன் உஷ்ணம் இருவரையும் எங்கோ தள்ளி விடுகிறது,
தவிர்க்கவே முடியாத விதியின் சூறாவளியில் இருவரும்.
வருஷக்கணக்கில் நடக்கவேண்டிய விடயங்கள் ஓரிரு நாட்களிலேயே நடந்து விடுகிறது,
எந்த இடத்தில் எவர் எவரில் தங்கி நிற்கவேண்டிய சூழ்நிலை உருவாகியது
என்று கண்டு பிடிக்க முடித்த வேகத்தில் விதி முடிச்சு போட்டு விடுகிறது.

ஒரு பக்கம் பயங்கரத்தின் எல்லையே கண்டுவிட்ட திகில்.
வாழ்வின் இறுதி என்பதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பார்ப்பவர் எவரும் நிச்சயம் கதி கலங்கிதான் போவார்கள்.
இதற்கு மீனாட்சியும் ஸௌத்திரியும்(முஸ்லிம்) விதிவிலக்கா என்ன?
பாரம்பரிய கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்த ஆசார மீனாட்சியின் தலை எழுத்து சுதந்திர முற்போக்கு சிந்தனையுள்ள ஸௌத்திரியுடன்  வேறு வழியே இல்லாமல் சங்காத்தம் வைக்கவேண்டிய சூழ்நிலை.

பயந்து பயந்து அவனை தனது கணவன் என்று பொய்சொல்லி காப்பாற்றவேண்டிய கட்டாயம்.
கண்முன்னே கொடூரத்தை பார்த்து நடுங்கிப்போன மீனாட்சிக்கு ஸௌத்திரியின் நெருக்கம் கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு.
இவற்றை எல்லாம் ஏதோ இருவரின் சொந்த வாழ்க்கையை பார்ப்பது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது.

ஒருவர் ஒரு கதா பாத்திரத்திரமாகவே மாறி அதை வாழ்ந்து காட்டுவது என்பது திரையில் அபூர்வமாகதான் காணமுடியும்,

அற்புத நடிகர்களின் திறைமைக்கு சரியான களம் அமைத்து கொடுக்க கூடிய கதை அதை சரியாக கையாள கூடிய திறமை உள்ள கதாசிரியர் வசன கர்த்தா இயக்குனர் எல்லாம் ஒரு உன்னத ஸ்தானத்தில் இத்திரைப்படத்தில் அமைந்து இருக்கிறது.

ஒரு கட்டத்தில் மீனாட்சியும் ஸௌத்திரியும் ஒரு கணவன் மனைவி அல்லது காதலர்கள் போல பார்பவர்கள் தங்களை அறியாமலேயே நம்ப தொடங்கி விடுவார்கள்.
ஆனால் எந்த காட்சியிலும் சரி வசனத்திலும் சரி அப்படி ஒன்றுமே ரொமான்டிக்காக காட்டப்படவே இல்லை.

மாறாக உண்மையான வாழ்க்கை என்றால் அதில் துன்பம் சோதனை கோபம் வெறுப்பு பின்பு சமாதானம் ஆறுதல் போன்ற உணர்வுகள்தான் அலைமோதும.
 இதில் அப்படித்தான் காட்டப்படுகிறது, இந்த யதார்த்தமே ஒரு கட்டத்தில் அவர்களை மிகவும் நெருக்கம் கொள்ள செய்து விடுகிறது,

அவர்களின் இந்த நெருக்கம் சரியா தவறா என்பது அல்ல பிரச்சனை
அது அந்த கதா பாத்திரங்களின் பிரச்சனையாகும்.
படத்தை பார்ப்பவர்கள் அந்த பாத்திரங்களில் உறவு சிக்கல்களை தாண்டி வெகுதூரம் இலகுவாக சென்றுவிடுவார்கள்.
அது இந்த திரைப்படத்தின் இன்னொரு பெரிய வெற்றி.
ஒரு திரைப்படத்தின் அழகு அல்லது இலக்கணம் என்ற ரீதியில் இந்த கத்தி மேல் நடக்கும் சமாசாரத்தை அழகாக மிகவும் அற்புதமாக காட்டி உள்ளார்கள்
அவர்கள் பிரியும் பொழுது அவர்களின் கண்களில் கண்ணீரை காட்ட முடியாத சூழ்நிலை.
ஒரு பக்கம் கணவன், மறுபக்கம் தன்கணவன் என்று கூறி கொலைக்களத்தில் இருந்து தான் காப்பாற்றி கொண்டு வந்த ஸௌத்திரி.
இல்லாத ஊருக்கு போகும் வழி என்று அறிந்தே இருவரும்  மனதை பரஸ்பரம் பறிகொடுத்து பின்பு  பிரியும் சோகம் இதுவரை இந்திய சினிமா காணாதது.

அந்த இருநாட்களில் வாழ்வின் பார்க்க கூடாத பக்கங்களை எல்லாம் பார்த்த அதிர்ச்சி,
அந்த அதிர்ச்சி வெள்ளத்தில் அள்ளுப்பட்டு கரை ஒதுங்கிய இரு மீன்கள்.......Mr and Mrs Iyyar  

கருத்துகள் இல்லை: