வெள்ளி, 9 செப்டம்பர், 2022

பரந்தூர் விமான நிலையம்: கிராம மக்களை அச்சுறுத்துவது அரசுக்கு அவப் பெயரையே ஏற்படுத்தும்- மார்க்சிஸ்ட் எச்சரிக்கை

மாலை மலர் :  மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
புதிய விமான நிலையங்கள், சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது, மக்களை வசிப்பிடங்களிலிருந்து இடம்பெயரச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னால் அத்தகைய திட்டங்கள் அத்தியாவசியமானதுதானா? என அரசு ஒருமுறைக்கு பலமுறை ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வுகள் அடிப்படையில் திட்டங்கள் அவசியம் என முடிவு செய்தால், முழுமையான வெளிப்படைத் தன்மையோடு, திட்ட அறிக்கை, சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை உள்ளிட்டவைகளை சட்ட ரீதியில் பெற்று அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட மக்களிடம் கலந்துரையாடல் நடத்தி முழுமையான ஒப்புதலை பெற்ற பின்பே திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் ஏற்கனவே உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒன்றிய மோடி அரசாங்கம் அடிமாட்டு விலைக்கு விற்று வருகிறது.

அவ்வாறே தமிழகத்தில் கட்டமைக்கப்படும் விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தும் எதிர்காலத்தில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் ஆபத்தும் உள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களையும், விளை நிலங்களையும், மக்கள் வாழ்வாதாரங்களையும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கபளீகரம் செய்வது உலகம் முழுவதும் நடந்து கொண்டுள்ளது.

இவைகளையெல்லாம் கவனத்தில் கொண்டு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இந்நிலையில், சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்காக பரந்தூர், கொடகூர், வளந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 4800 ஏக்கர் நிலம் எடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே சுட்டிக்காட்டியவாறு ஒரு திட்டம் செயல்படுத்துவதற்கான சட்டரீதியான கடமைகளை மேற்கொள்ளாமல், பெயரளவிற்கான கருத்துக் கேட்பு கூட்டங்களை அவசர கதியில் நடத்திவிட்டு விமான நிலைய பணிகளை துவங்க உள்ளதாக தெரிகிறது.

இந்த நடைமுறை நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறு குடியமர்த்தல், மறுவாழ்வு சட்ட விதிகளுக்கு முரணானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழக அரசின் இத்தகைய அணுகுமுறை அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டங்களுக்காக பிறந்த மண்ணை விட்டு மக்களை வெளியேற்றுவது, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பது மட்டுமின்றி, உணர்வுப்பூர்வமான பிரச்சனையும் ஆகும்.

மேலும் சம்பந்தப்பட்ட கிராமங்களில் போலீஸ் முகாம் அமைத்து மக்களுடைய அன்றாட நடவடிக்கைகளை முடக்குவது, அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளும் அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும்.

எனவே, தமிழக அரசு பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக வெளிப்படைத் தன்மையுடன், திட்ட அறிக்கை, சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை போன்றவைகளை தயாரித்த பின்னர் பொதுமக்களிடம் முறையான கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறு குடியமர்த்தல், மறுவாழ்வு சட்ட விதிகளுக்கு உட்பட்டு திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

சட்டப்படி விவசாயிகள் கேட்கும் முழுமையான இழப்பீடு வழங்குவதுடன் நிலமற்ற விவசாயத் தொழிலாளிகள், சிறு-குறு விவசாயிகள், அரசு புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்பவர்கள், நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்துவது, வேலை உத்தரவாதம் உள்ளிட்டு அனைத்தையும் உறுதி செய்திட வேண்டும்.

மேலும், கிராமங்களில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: