சனி, 10 செப்டம்பர், 2022

இயக்குநர் பாரதிராஜாவை நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

tamil .samayam.com :  தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாதவர் இயக்குநர் பாரதிராஜா. அவரது நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படம் வெளியாகி அவரது நடிப்புக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது. அந்தப் படத்தில் நடிகர் தனுஷின் தாத்தாவாக நடித்திருந்தார் பாரதிராஜா. இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் தொற்று உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், குணமடைந்து அவர் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியதையொட்டி இன்று நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர் கே.என்.நேரு, கவிப்பேரரசு வைரமுத்து, பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

அம்மாவை போலவே முதல் உரையாற்றிய மன்னர் சார்லஸ்!
முன்னதாக, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்து முதலமைச்சர் ஸ்டாலின், பாரதிராஜா மனைவியை தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார். தற்போது பாரதிராஜா நலம் பெற்று இல்லம் திரும்பியதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனிடையே, மருத்துவமனைக்கு பணம் செலுத்த முடியாமல் இருக்கிறார் பாரதிராஜா என்ற தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவல் முற்றிலும் தவறானது என அவரது மகன் மனோஜ் விளக்கமளித்தார். தயவுசெய்து அதுபோன்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனவும், தங்களுடைய சொந்த பணத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

“கடுமையான நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, சுய நினைவு இழந்து மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் முழுமையாக பழைய உற்சாகத்துடன் இருக்கிறார். வயது மூப்பு காரணமாக நோய் எதிர்ப்பு திறன் குறைபாடால் இது போன்று தொற்றுகள் ஏற்படுவது இயல்பு. மருத்துவத்திற்கு பாரதிராஜா முழுமையாக ஒத்துழைத்தால் எளிமையாக அவரை குணப்படுத்த முடிந்தது. இன்று வீடு திரும்பினாலும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்.” என எம்.ஜி.எம்., மருத்துவமனை நுரையீரல் மருத்துவ நிபுணர் சாமிகண்ணு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: