வியாழன், 8 செப்டம்பர், 2022

2024 இல் தேர்தலில் 63% ஓட்டுக்களை காங்கிரஸ் திமுக கூட்டணிபெறும்! ஸ்டாலின்-ராகுல் அதிரடி திட்டம்! ஆர்எஸ் பாரதியின் பேட்டி

tamil.oneindia.com  Nantha Kumar R  :   சென்னை: ராகுல்காந்தியின் யாத்திரை என்பது பாஜகவுக்கு ரொம்ப அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உள்ள 63 சதவீத ஓட்டை ஒன்றாக திரட்ட தான் முதல்வர் ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் இணைந்துள்ளனர்'' என கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் குறித்து திமுகவின் ஆர்எஸ் பாரதி புள்ளிவிபரங்களோடு எடுத்து கூறியுள்ளார்.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை உயர்த்தவும், வரும் தேர்தல்களில் வெற்றி பெறவும் அக்கட்சி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதனால் கட்சியை பலப்படுத்தும் பணியில் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்ரா'என்ற இந்திய ஒற்றுமை நடைபயணம் துவங்க உள்ளது.

குமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம்
இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியில் துவங்கி 150 நாட்களுக்கு பிறகு பல்வேறு மாநிலங்களை கடந்து காஷ்மீரை சென்றடைகிறது. இதற்காக நேற்று ராகுல்காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தார். இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு 19 ஆண்டுகளுக்கு பிறகு சென்றார். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் ராகுல்காந்தி மலர்தூவி வணங்கினார். 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு சிறிது நேரம் அங்கு அமர்ந்து அமைதியாக தியானம் செய்தார்.

துவங்கிய நடைப்பயணம்
பின்னர் அங்கிருந்து மீண்டும் காரில் சென்னைக்கு ராகுல் காந்தி திரும்பினார். அதன்பிறகு காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானத்தில் ராகுல்காந்தி திருவனந்தபுரம் புறப்பட்டார். திருவனந்தபுரம் விமான நிலையம் சென்ற ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதன்பிறகு ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வந்தார். அங்கும் அவருக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் நுழைவு வாயிலில் இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணத்தை முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

அதிர்ச்சியில் பாஜக
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணம் பற்றி சென்னையில் திமுக கட்சியின் அமைப்பின் செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறியதாவது: பாரத் ஜோடோ யாத்திரை என்பது பாஜகவுக்கு ரொம்ப அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது. மோடி 37 சதவீத ஓட்டுக்கள் வாங்கி தான் பிரதமராக வந்தார். இதனால் 63 சதவீத ஓட்டுக்கள் என்பது மோடிக்கு எதிர்ப்பாக வந்துள்ளது.

ஓரணியில் திரட்டும் ராகுல்-ஸ்டாலின்
இந்த 63 சதவீத ஓட்டையும் ஓன்றாக திரட்ட தான் முதல்வர் ஸ்டாலின், ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளனர். இதன் துவக்கம் தான் கன்னியாகுமரியில் துவங்கி உள்ளது. இது 2024ல் மிகப்பெரிய மாற்றத்தை மத்தியில் உருவாக்குவதன் ஆரம்பமாக கன்னியாகுமரி நடைப்பயணம் உள்ளது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் பங்கு பெரியளவில் இருக்கும்.


ஸ்டாலினின் நோக்கமே இதுதான்..
மோடிக்கு எதிர்ப்பாக இருக்கும் 63 சதவீதஓட்டுகளை ஓரணியில் திரட்டி கொண்டு வருவதை தான் முதல்வர் ஸ்டாலினின் நோக்கமாக உள்ளது. இதனை பல மேடைகளில் அவர் கூறியுள்ளார். அனைத்து கட்சி தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். அதோடு அனைத்து கட்சி கூட்டத்தில் அதனை தான் வலியுறுத்தி வருகிறார்'' என்றார்.

கருத்துகள் இல்லை: