சனி, 9 ஜூலை, 2016

சித்ரவதையை ரசிக்கும் தமிழ் சினிமா எப்போது மாறும்?

theekkathir.in :சில ஆண்டுகளுக்கு முன்னதாக வெளிவந்தது 7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படம். அந்த திரைப்படத்தில் கதாநாயகன் துரத்தி துரத்தி கதாநாயகியான சோனியா அகர்வாலை காதலிப்பார். கதாநாயகன் கிருஷ்ணா வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றுவார். பல பெண்களை பாலியல் கண்ணோட்டத்துடன் இம்சை அளிக்கும் நபர். பால் பூத் வரிசையில் நிற்கும் முதியவர்களிடம் தனக்கு சேர்த்து பால் வாங்க வேண்டும். இல்லாவிட்டால் அவருடைய மகளையும் மனைவியையும் கரெக்ட் பண்ணுவேன் என்று மிரட்டல் விடுத்து அவர்களை தனது தேவைகளை நிறைவேற்ற வைக்கும் அளவுக்கு கேவலமான நபர்.  ஆனால் பல சமயங்களில் கதாநாயகியை விரட்டி விரட்டி காதல் என்ற பெயரில்  துன்புறுத்துவதை தாங்க முடியாமல் கதாநாயகியால் பொறுக்கி என்று திட்டப்பட்டாலும் கதாநாயகனை ஒரு கட்டத்தில் அவர் காதலிக்க தொடங்கி விடுவார்.
பெண்ணின் மனதை தொட்டு என்ற படத்தில் கதாநாயகன் பிரபு தேவா கல்லூரியின் மைதானத்தில் கதாநாயகியை தூணில் கட்டி வைத்து கன்னத்தில் அறைந்தவுடன் அவர் மீது கதாநாயகிக்கு காதல் பிறக்கும்.

குணா படத்தில் மனநோயாளியாக நடிக்கும் கமல் கதாநாயகியை கடத்திச் சென்று காதலிக்க வைப்பார்.

இதற்கெல்லாம் மேலாக கேவலமான பீப் பாடலை பாடிய சிம்பு, வல்லவன், மன்மதன், தம் மற்றும் ஒஸ்தி என அவர் நடித்த எந்த படங்களிலும் அவர் துரத்தாத கதாநாயகியே கிடையாது. அவர் எந்த கதாநாயகியையும் போடி வாடி என்று அழைக்காமலும் இருந்ததில்லை. ஆனால் அவர் மீது நமது கதாநாயகிகளுக்கு காதல் ஊற்றெடுக்கும்.

இதற்கு எந்த அளவும் குறையாத அளவில் தனுஷ் படங்களில் கதாநாயகியை துரத்துவதையும் அவரை மரியாதையின்றி போடி வாடி என்று அழைப்பதும் ஒரு கலையாகவே மாற்றி இருப்பார். அந்த பெண் அடுத்தவரின் காதலியாக இருந்தாலும் (குட்டி -திரைப்படம்) அவரை விடாமல் துரத்தி அடிபணிய வைத்து கதாநாயகிகளை உருகி காதலிக்க வைத்துவிடுவார்.

;பெண்கள் சித்ரவதையாக நினைத்தாலும் அவர்கள் பொறுக்கி என்ற திட்டினாலும் அவர்களை விடாமல் துரத்தி கேவலமான முறையில் ஈவ் டீசிங் செய்து காதலிப்பது கமல், ரஜினி எனத் தொடங்கி சூர்யா(வாரணம் ஆயிரம் என்ற படத்தில் கதாநாயகியை துரத்திக் கொண்டு அமெரிக்கா வரை சென்று விடுவார் அங்கே அவரை காதலிக்கவும் வைத்து விடுவார்)- விஜய், சிம்பு, தனுஷ் என பட்டியல் எழுத முடியாதபடி நீளுகிறது

;ஆனால் ஆணாதிக்க பார்வையில் வேறுவகையான கொடூரமான சித்தரிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. மிக அரிதாக தனது காதல் விருப்பத்தை தெரிவிக்கும் பெண்கள் மிக மோசமான வில்லிகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீலாம்பரிகளாகவும் (படையப்பா)இல்லாவிட்டால் திமிர் பிடித்த பெண்ணாக தீ வைத்து கொளுத்திக் கொண்டு சாவதாக (ஷிரியா ரெட்டி, திமிர் படத்தில்)படைக்கப்படுவார்கள்.

இதன் நோக்கம், பெண்கள் தங்களின் விருப்பங்களைத் தெரிவித்தால் அவர்கள் இப்படித்தான் திமிர் பிடித்தவர்களாக மட்டுமே இருப்பார்கள் என்பது போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவது. அதன் மூலம் ஆழ்மனதில்  ஆணாதிக்கம் உறைந்து கிடக்கும் ஒரு சராசரியான ஆணின் மனதில் ஒரு பயத்தை உருவாக்குவதுதான். இதில் அவர்கள் எப்போதுமே வெற்றி கண்டுள்ளார்கள்.

இன்றைக்கு புதிதாக வந்திருக்கும் சில  இளைய தலைமுறை இயக்குநர்கள் நீங்கலாக பெரும்பாலும் ஆணாதிக்கம்  நிரம்பி வழியும் இடமாக தமிழ்த் திரைப்படங்கள் உள்ளன.  ஒரு சில விதிவிலக்குகள் தவிர்த்து பெரும்பாலான இயக்குநர்களின் பார்வையும் இதே போன்றே அமைந்துள்ளதுதான் வேதனை 

 திரைப்படங்களில் பெண்கள் மீதான வன்முறை என்பது மிகச்சாதாரணமாக பெண்களையே ஏற்றுக்கொள்ள வைக்கிற, அதை ரசிக்கிற நிலைக்கும் எப்போதோ கொண்டு வந்துவிட்டனர் என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.

 பெண் என்பவர் அறிவும் மனமும் உணர்ச்சிகளும் நிறைந்த ஒரு மனிதப்பிறவி அல்ல; வெறும் சதைப்பிண்டம்தான்;  அனுபவித்து விட்டு தூக்கி எறியப்படும் மோகப்பொருள் என்ற உள்ளார்ந்த அர்த்தத்தை கொண்ட பிகர் என்ற வார்த்தையை ஒரு  பெண்ணையே ரசித்து கூற வைப்பதும், அது மட்டுமின்றி பாலியல் இச்சைக்கு மட்டும்தான் பெண் என்பதைக்குறிக்கும் ஐட்டம், மேட்டர் என்பதையும் பெண்களையே (துப்பாக்கி) கூற வைத்த பெருமையும் நமது மகா கனம் பொருந்திய தமிழ் சினிமா இயக்குநர்களையே சாரும். எனவே எவன்டி ஒன்னை பெத்தான், என் கையில் செத்தான், அடிடா அவளை போன்ற எண்ணற்ற பாடல்களில் மட்டுமல்ல பெண்கள் குறித்த வார்த்தைகளையே இழிவாக பயன்படுத்தி அவற்றை சமூகத்தில் புழக்கத்திற்கும் கொண்டு வந்து விட்டனர்.

எனவே பெண்கள் காதலிக்க மறுத்தால் அவர்கள் மீது ஆசிட் வீசுவது அரிவாளால் வெட்டுவது என்பது வினோதினிகளோடும் சுவாதிகளோடும் முடிந்து விடும் என்று மட்டும் எண்ணி விட வேண்டாம். கோடம்பாக்கத்தில் பெண்களைப் பற்றி இது போன்ற பார்வை கொண்ட இயக்குநர்கள் எப்போதோ  இதற்கான விதைகளை ஊன்றி விட்டனர் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

பெண்ணின் விருப்பம் ஒரு பொருட்டே அல்ல; அவர்கள் வெறுத்தாலும் அவர்களை உளவியலாகவும் பயமுறுத்தியும் அடித்து துன்புறுத்தியும் பணிய வைக்க முடியும் என்பதை சுவாதியின் கொலையாளிக்கு கற்பித்தது  திரைப்படம் என்ற கூர்மையான ஊடகமே.

பெண்களை பகடி செய்வதும் துரத்துவதும் வார்த்தைகளால் வதைப்பதும் எனத் தொடங்கி பின்னர் அவள் படிந்து அவனின் வாழ்க்கையில் வந்த பின்னர் என்ன சித்ரவதை செய்தாலும் கணவரையே ஏற்றுக் கொண்டு அவனின் லட்சியங்களுக்கு பாடுபடுவது (மயக்கம் என்ன?) என்பதாகவே திரைக்கதை அமைக்கப்படுவது எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் பெண்ணை மரியாதையாகப் பார்க்கிற ஒரு இளம் தலைமுறையை உருவாக்க உதவும்.;– சேது

கருத்துகள் இல்லை: