வியாழன், 7 ஜூலை, 2016

சென்னைக்கு அருகே கி.மு. 30,000 - கி.மு. 10,000 வரை மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்

சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள்கடந்த ஆண்டில் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்ட வகைகளும் கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் கிடைத்ததையடுத்து, இந்த இடம் ஆகழ்வாராய்ச்சி செய்வதற்கான இடமாகத் தேர்வுசெய்யப்பட்டு, இந்த ஆண்டில் அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது.

பட்டறைப் பெரும்புதூரில் உள்ள ஆனைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய இடங்களில் மொத்தம் 12 ஆய்வுக் குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வில் 200க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
''மனிதர்கள் வாழ்ந்து வந்ததற்கான சான்று''கற்காலம் (கி.மு. 30,000 - கி.மு. 10,000) முதல் மனிதர்கள் வாழ்ந்ததற்கான மண் அடுக்கச் சான்றுகளும் இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்க காலம் ஆகியவற்றின் எச்சங்களும் இங்கே கிடைத்திருப்பதால், கற்காலத்தில் துவங்கி தற்போதுவரை இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக மனிதர்கள் வாழ்ந்து வந்தததாகக் கொள்ள முடியும் என தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குனர் ஆர். சிவானந்தம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
இந்த அகழாய்வில் குறிப்பிடத்தக்க பொருட்களாக, பழங்கற்காலத்தைச் சேர்ந்த இரு பக்க முனையுடைய கத்தி, புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடாரிகள், சாம்பல் நிற மண்பாண்ட ஓடு, ரோமானிய மட்பாண்ட வகையான ரௌலட் மட்பாண்ட ஓடு, 23 உறைகளைக் கொண்ட உறை கிணறு ஆகியவற்றை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். tamil.bbc.com

கருத்துகள் இல்லை: