வியாழன், 13 ஆகஸ்ட், 2015

கோபிசெட்டிபாளையம்! சிறுமியை சிதைத்தவருக்கு ராஜ உபசாரம்! சிறுமிக்கு டார்ச்சர்.., போலீசின் அட்டுழியம்

கோபிசெட்டிபாளையம்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர், போலீசார் துணையுடன், காரில் வலம் வந்தார்; இவரால் கர்ப்பமாகி பாதிக்கப்பட்ட சிறுமியை, போலீசார் நடக்க வைத்து, கொடுமை செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே சிலேட்டர் அவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் தன்சீர், 30. இவருக்கு திருமணமாகி, மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். வீட்டுக்கு அருகே வசித்த, 15 வயது சிறுமியை, தன்சீர், அடிக்கடி மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது; இதனால், சிறுமிக்கு கர்ப்பமானார்.சிறுமி மீது தாக்குதல்:கடந்த, 7ம் தேதி இரவு, தன்சீர் மனைவி ரசீதா பானு, தன் கணவர் மீது வீண் பழி சுமத்துவதாக கூறி, சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், கோபி போலீசில் புகார் செய்தனர்.கட்சி பிரமுகர்கள் சிலர் தலையிட்டு, வழக்கு பதிவு செய்யவிடாமல் தடுத்தனர். ஆனால், சிறுமியை, நேற்று முன்தினம் இரவு முழுக்க, விசாரணை என்ற பெயரில் போலீசார்
அலை கழித்தனர்.


நடக்க வைத்து கொடுமை:

நேற்று அதிகாலை, 5:45 மணிக்கு, கன்னித்தன்மை பரிசோதனைக்காக, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்குப்பின், கோபி அரசு மருத்துவமனைக்கு, சிறுமியை நடந்தே அழைத்துச் சென்றனர். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட தன்சீரை கைது செய்து, மறைவான இடத்தில் வைத்திருந்து, நேற்று, ஆம்னி காரில், ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.எந்த இடத்திலும், தன்சீரை போட்டோ எடுக்க, போலீசார் அனுமதிக்கவில்லை.

இதுபற்றி, சிறுமியின் உறவினர்கள் கூறியதாவது:ஆரம்பம் முதல், எஸ்.ஐ., நாகலட்சுமி, சிறப்பு எஸ்.ஐ., பிரபுதாஸ், ஏட்டு திருநாவுக்கரசு ஆகியோர், தன்சீருக்கு அதிக கருணை காட்டியதுடன், வழக்குப்பதிவு செய்யாமல், பேச்சுவார்த்தையில் முடிக்கும்படி வலியுறுத்தினர்.


கரு கலைப்பு:

நேற்று அதிகாலை, பெற்றோர் அனுமதியின்றி, பெண் போலீஸ் ஒருவர், பால் இல்லாத டீயை, சிறுமிக்கு கொடுத்தனர். டீ குடித்த சிறுமிக்கு, சிறிது நேரத்தில், மாதவிலக்கு ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு குறைந்தபட்ச தண்டனை கிடைக்க, போலீசார் செய்த சதியாக இருக்கலாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


'சிறுமிக்கு நியாயம் கிடைக்கும்':

ஈரோடு எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி கூறியதாவது:நாளை (இன்று) காலை, ஈரோடு மகிளா நீதிமன்றத்தில், நீதிபதியின் தனி விசாரணை அறையில், சிறுமி, வாக்குமூலம் அளிக்கிறார். இதனடிப்படையில், சிறுமிக்கு, கண்டிப்பாக நியாயம் கிடைக்கும். பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்துச்செல்ல, வாகன வசதி செய்யாதது வருத்தத்துக்குறியது.இவ்வாறு, அவர் தெரிவித்தார் தினமலர்.com 

கருத்துகள் இல்லை: