கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் சவடாலேந்திர மோடியாக நாட்டை வலம் வந்து வாயில் சுட்ட வடையை மக்களுக்குப் பரிமாரிய 56 இன்சு அப்பர் பாடி, தற்போது மௌனேந்திர மோடியாக மாறி மன்மோகன் சிங்கையே வெட்கப்பட வைத்துள்ளது. எனினும், சிரங்கு பிடித்தவன் கை அடங்காதல்லவா? எனவே அவ்வப்போது தனது செப்டிக் டேன்க் மூடியைத் திறந்து நாட்டை நாற வைத்து மகிழும் பழக்கத்தை தொடர்கிறார் திருவாளர் மோடி.
பீகார் மாநில சட்ட மன்ற தேர்தல் தான் பாரதிய ஜனதாவின் சமீபத்திய குறி. இந்த தேர்தலில் எப்படியாவது வென்று தில்லியில் கிடைத்த செருப்படியின் வலியை மறக்க தனது ரத கஜ துரக பதாதிகளைக் களமிறக்கி விட்டுள்ளது பா.ஜ.க. அதில் மோடிதான் முதலில் நிற்கிறார்.
கடந்த மாதம் 25-ம் தேதி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, தனது வருகையை எதிர்ப்பதன் மூலம் பீகாரின் வளர்ச்சியை நிதிஷ் தடுக்கப் பார்க்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். ”நான் கெட்டவன் என்றால், என் முகத்தில் அறைந்திருக்கலாம் அல்லது கழுத்தை நெறித்திருக்கலாம் – ஆனால் ஒரு முழு மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்கலாமா? இது தான் ஜனநாயகமா?” என்று கொந்தளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய மோடி, முன்னர் ஒருமுறை தன்னை விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்த லாலு பிரசாத் யாதவ், தனக்கு வைத்திருந்த உணவையெல்லாம் தின்று விட்டார் என்று மழலையர் பள்ளி பிரச்சினைகளையெல்லாம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நிதிஷ் குமாரின் மரபணுவில் ஏதோ கோளாறு இருப்பதாக தெரிவித்தார்.
மோடியின் கோமாளித்தனமான உளறல்கள் சமூக வலைத்தளங்களில் நார் நாராக கிழித்து தொங்கவிடப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நிதிஷ் குமார் மரபணு விஷயத்தைக் கையிலெடுத்தார். வார்த்தை விளையாட்டின் நுணுக்கங்களும், சவடால் அரசியலின் அடிப்படைகளும் இந்தி பெல்டின் பழைய ‘சோசலிஸ்டு’ பாரம்பரிய அரசியல்வாதிகளான லாலுவுக்கும் நிதிசுக்கும் அத்துப்படி என்பதால் காவி கும்பலே பீதியுற்றுப் போகும் வகையில் அவர் இந்த விவகாரத்தை கையாண்டு வருகிறார்.
மோடியின் சவடாலை மொத்த பீகார் மாநில மக்களின் தன்மானத்திற்கு நேர் எதிராக நிப்பாட்டிய நிதிஷ், குஜராத்தி பனியா சேட்டுகள் தெனவெட்டாக, பீகார் மக்களின் கவுரத்தின் மேல் பான்பராக் போட்டு துப்பி விட்டதாக பிரச்சாரத்தை முன்னெடுத்தார். மோடியின் திமிர் பேச்சு நடுத்தர வர்க்க பீகாரிகளிடையே ஆத்திரத்தை கிளப்பி விட்டிருப்பதை உணர்ந்த நிதிஷ், அடுத்த கட்டமாக 50 லட்சம் பீகாரிகளிடம் கையெழுத்தும் மரபணு மாதிரிகளையும் பெற்று மோடிக்கு அனுப்பி வைப்பதாக பீதியூட்டியுள்ளார்.
ஜூலை 25-ம் தேதி நடந்த பிரச்சார கூட்டம் மண்ணைக் கவ்விய நிலையில், மீண்டும் கடந்த ஒன்பதாம் தேதி கயாவில் அடுத்த பிரச்சார கூட்டத்திற்கு வந்துள்ளார் மோடி. இக்கூட்டத்தில் பேசும் போது, சிறைக்குச் சென்றவர்களெல்லாம் அங்கிருந்து தீய விசயங்களையே கற்று வருகிறார்கள் என்று லாலு பிரசாத் யாதவை குறிவைத்து தாக்கியுள்ளார். ’இடுப்புக்கு கீழ்’ தாக்குவதில் வல்லவரான லாலு, “அப்படியென்றால், மோடிக்கு முன்பாக அதே கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதாவின் தலைவர் அமித் ஷா பல மாதங்கள் சிறையில் இருந்து கற்றுக் கொண்ட தீய விசயங்கள் எவையெவை என்று கேட்டுச் சொல்லுங்கள்” என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார்.
பீகாரை எப்படியாவது வென்றாக வேண்டும் என்கிற ஆவேசத்தில் இந்துத்துவ கும்பல் தமது தலைமை உற்சவ மூர்த்தியைக் களமிறக்கியுள்ள நிலையில், அவர் கலந்து கொண்டு இரண்டு பிரச்சாரக் கூட்டங்களுமே கேலிக் கூத்தாக முடிந்துள்ளது. மோடியின் உரையை வரிக்கு வரி நோண்டித் துருவி சமூக வலைத்தளங்களில் பகடி செய்து வரும் நிலையில், பீகார் சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பாசிஸ்டுகள் கோழைகள் மட்டுமின்றி கோமாளிகளும் கூடத் தான் என்பதை ஹிட்லர் தொட்டு பல சந்தர்பங்களில் வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது – அந்த வரிசையில் பாரதத்தின் பங்களிப்பான மோடி ஒளி வீசிப் பிரகாசிக்கிறார். பாசிஸ்டுகளின் கோமாளித்தனங்களையும் கொணஷ்டைகளையும் மாத்திரம் வைத்து அவர்களை மதிப்பிடுவது தவறு.
ஏற்கனவே உலகமயமாக்கத்தின் மரணக் குழி அருகே இந்த தேசமே தள்ளாடி வரும் நிலையில் அதை உள்ளே தள்ளி குழியை மூடும் வேலையை மோடி பார்த்து வருகிறார்.
மக்கள் இப்போது மோடியின் மாயையில் இருந்து விடுபட்டு கேலியாய்ச் சிரிக்கத் துவங்கியுள்ளனர் – ஆனால், விரையில் இந்தக் கேலிச் சிரிப்பு ஆத்திரமாய் மாறும். அப்போது மோடியும் பரிவாரங்களும் குப்பைக் கூடையில் தூக்கி எறியப்படுவார்கள் vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக