மேற்கத்திய நாடுகளின் புதிய தாராளவாத பொருளாதார கொள்கைகளை
நிராகரித்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய சாவேஸின் அரசியல்
வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள உழைக்கும்
மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவையாக விளங்கியது.
வெனிசுவேலா
அதிபர் ஹியூகோ சாவேஸ் தனது 58வது வயதில் செவ்வாய்க் கிழமை உள்ளூர் நேரம்
மாலை 4.25 மணிக்கு தலைநகர் கேரகாஸில் உயிரிழந்தார். சாவேஸ் 1998ம் ஆண்டு
முதல் தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள சுமார் 3 கோடி
மக்கள் வசிக்கும் வெனிசுவேலாவின் அதிபராக 14 ஆண்டுகளாக பணியாற்றினார்.சாவேஸின் இறுதி ஊர்வலம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும். துணை அதிபர் நிக்கோலஸ் மடுரோ இடைக்கால அதிபராக பதவி வகிப்பார். அடுத்த 30 நாட்களில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும்.
முன்னாள் இராணுவ அதிகாரியான சாவேஸ் 1998ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நாட்டு அதிபரானார். அன்று முதல் எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் 4வது இடத்தில் இருக்கும் வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை மக்கள் நலத்துக்கு பயன்படுத்தும் திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தினார். 1998ல் புதிய அரசியல் சட்டத்தை ஏற்படுத்த வழி வகுத்தார். பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து அதிக ராயல்டி வசூலித்து அதன் மூலம் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மூன்று வேளை சத்துணவு வழங்கும் திட்டம், நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ வசதிகள், குடும்பத்துக்கு உழைக்கும் பெண்களுக்கு ஓய்வூதியம் போன்றவற்றை செயல்படுத்தினார். குழந்தை பேறின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கையும் குழந்தைகளிடையே ஊட்டச் சத்துக் குறைவும் பெருமளவு குறைந்தன.
19ம் நூற்றாண்டின் வெனிசுவேலா சுதந்திர போராட்ட வீரர் சைமன் பொலிவாரின் நினைவாக பொலிவாரிய புரட்சி என்று அழைக்கப்படும் சாவேஸின் சீர்திருத்தங்களை பன்னாட்டு பெருநிறுவனங்களும், அவர்கள் சார்பான ஊடகங்களும், கலகக் காரர்களும் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். 2002ல் இராணுவ கலகம், 2007ல் நிலச் சீர்திருத்தங்களுக்கான கருத்துக் கணிப்பில் தோல்வி, தொடர்ச்சியான எதிர் பிரச்சாரம் என்று பல வகையான தாக்குதல்களை மக்கள் துணையுடன் முறியடித்தார் ஹியூகோ சாவேஸ்.
அமெரிக்க ஏகாதிபத்திய விரிவாக்கத்தை முறியடிப்பதற்கு தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதில் சாவேஸ் முன்னணி வகித்தார். உலகின் பிற பகுதிகளில் அமெரிக்காவால் சுரண்டப்படும் மூன்றாம் உலக நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதை தனது வெளியுறவுக் கொள்கையின் சிறப்பு அம்சமாக வைத்திருந்தார்.
ஜூன் 2011ல் சாவேஸூக்கு புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 2012 அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் 54 சதவீதம் வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
மேற்கத்திய நாடுகளின் புதிய தாராளவாத பொருளாதார கொள்கைகளை நிராகரித்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய சாவேஸின் அரசியல் வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவையாக விளங்கின.
(கீழே வரும் பத்திகள் புதிய ஜனநாயகத்தின் கட்டுரையிலிருந்து எடுத்தாளப்பட்டவை)
மக்கள் நலன், சுயசார்பு, அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பு எனும் உயர்ந்த நோக்கங்களைக் கொண்ட அதிபர் சாவேஸ், வரம்புக்குட்பட்ட சில சீர்திருத்தங்களை மேற்கொண்ட போதிலும், அவரது கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கான அரசியல் கட்சி அவருக்கு இல்லை. அவரால் உருவாக்கப்பட்ட “”ஐந்தாவது குடியரசு இயக்கம்” என்ற கட்சியானது ஆரம்ப நிலையிலேயே உள்ளது. அதுவும் சந்தர்ப்பவாதசட்டவாத சக்திகளைக் கொண்டதாகவே உள்ளது.இந்த அடிப்படையில் சாவேஸின் மரணத்தை பரிசீலிப்பது சரியானது. தனி நபராக அவர் கொண்டுள்ள முயற்சிகள் மேலிருந்து அரசு மூலம் செய்யப்படும் சில சீர்திருத்த நடவடிக்கைகளாக பலவீனமாக இருக்கின்றன. அந்த பலவீனத்தை வெல்வது எது என்பதுதான் சாவேஸின் மரணத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். vinavu.com
அதிபர் சாவேஸ் தேர்தல் மூலம் பதவிக்கு வந்துள்ளாரே தவிர, அந்நாட்டின் ஆளும் வர்க்கங்களான ஏகாதிபத்தியவாதிகளும் தரகு முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் வீழ்த்தப்படவில்லை. அவர்களது சொத்துக்கள் நட்ட ஈடின்றிப் பறிமுதல் செய்யப்படவுமில்லை. இந்த ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் வகையில் கட்டியமைக்கப்பட்டுள்ள அரசு எந்திரம் தூக்கியெறியப்பட்டு புரட்சிகர வர்க்கங்கள் தமது அதிகாரத்தை நிறுவவுமில்லை. மக்கள் போராட்டங்களால் தற்காலிகமாக ஆளும் வர்க்கங்கள் பின்வாங்கிக் கொண்டுள்ளனவே தவிர, அவற்றின் அதிகாரமும் பொருளாதார பலமும் ஆதிக்கமும் வீழ்த்தப்படவில்லை. கிராமப்புற விவசாயிகளும் நகர்ப்புற ஏழைகளும் அதிபர் சாவேசுக்கு ஆதரவாக உள்ள போதிலும் அவர்கள் புரட்சிகரவர்க்கப் போராட்ட அமைப்புகளில் அணிதிரட்டப்படவில்லை.
இத்தகைய சூழலில்தான் அதிபர் சாவேஸ் தனது வரம்புக்குட்பட்ட அதிகாரத்தைக் கொண்டு மக்கள் நலன் கொண்ட சில சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி, அதனை “”21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்” என்றழைத்தார். அப்போதைய கருத்துக் கணிப்புத் தேர்தலில் அவர் தோல்வியுற்றதும், அவரது சோசலிசம் பொய்த்துப் போய்விட்டதாக ஏகாதிபத்தியவாதிகளால் எள்ளிநகையாடப்படுகிறது. ஏறத்தாழ ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடந்ததைப் போல, இக்கருத்துக் கணிப்புத் தேர்தல் மூலம் வெற்றி பெற்றுள்ள ஏகாதிபத்தியவாதிகள், அடுத்த கட்டத் தாக்குதலைத் தொடுக்க ஆயத்தமாகி விட்டனர். சாவேசின் வரம்புக்குட்பட்ட சீர்திருத்தங்களைக் கூட செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அருகி வருகின்றது. இயல்பாகவே சோசலிசத்தின்பால் ஈர்க்கப்பட்ட வெனிசுலாவின் உழைக்கும் மக்கள், ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட அதிபர் சாவேசின் சோசலிசக் கொள்கைகளும் திட்டங்களும் செயலிழந்து விட்டதைக் கண்டு அதிருப்தியுற்று, சோசலிசம் என்றாலே வெறுப்பாக பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சோசலிசம் என்பது பாட்டாளி வர்க்கக் கட்சியால் தலைமை தாங்கப்படும் பாட்டாளி வர்க்கப் புரட்சியில் மலர்வதேயின்றி, தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வருவதல்ல. அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்பட்ட ஏகாதிபத்தியவாதிகள், தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் சொத்துக்களையும், உரிமைகளையும் பறித்து, உழைக்கும் மக்கள் தமது சர்வாதிகாரத்தைச் செலுத்தி அதிகாரம் செய்வதுதான் சோசலிசமே அன்றி, சுரண்டும் வர்க்கங்களுக்கு ஜனநாயகம் பன்மைவாதம் அளிப்பதல்ல. பாட்டாளி வர்க்க சித்தாந்தமோ, பாட்டாளி வர்க்கப் புரட்சியோ, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமோ இல்லாமல் சோசலிசத்தை நிறுவ முடியாது; தனிநபரின் உயர்ந்த நோக்கங்களால் சோசலிசத்தைக் கட்டியமைக்கவும் முடியாது. இந்த உண்மைகளை உலகிற்கு உணர்த்திவிட்டு வெனிசுலாவும் அதிபர் சாவேசின் சோசலிசமும் மீள முடியாத நெருக்கடியில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக