திங்கள், 6 பிப்ரவரி, 2012

சல்மான் ருஷ்டியும் தஸ்லிமா நஸ்ரினும்



1
சல்மான் ருஷ்டியின் The Satanic Verses நாவலைத் தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரினின் புத்தகம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டியால் கலந்துகொள்ள முடியவில்லை. வீடியோ கான்ஃபரன்ஸிங்கூட சாத்தியப்படவில்லை. அதே போல் தஸ்லிமா நஸ்ரின் எழுதிவரும் தொடர் சுயசரிதையின் ஏழாவது பாகமான Nirbasan (எக்ஸைல் என்று பொருள்) வெளியிடப்படக்கூடாது என்று கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். வேறு வழியின்றி அரங்குக்கு வெளியில் புத்தகம் வெளியிடப்பட்டது.
கொலை மிரட்டல்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் வாருங்கள் என்று சல்மான் ருஷ்டிக்கு காவல் துறையால் உத்தரவாதம் அளிக்கமுடியவில்லை (கொலை மிரட்டல்களை உற்பத்தி செய்தவர்களே அவர்கள்தாம் என்று சொல்லப்படுகிறது). தஸ்லிமா நஸ்ரின் புத்தக வெளியீட்டைத் தடுப்பவர்களையும் காவல் துறையால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமின்றி நடந்த சம்பவத்துக்கு அரசாங்கத்திடமிருந்து பொறுப்பான எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. மொத்தத்தில் இரு எழுத்தாளர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த இரு சம்பவங்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை முதலில் பார்ப்போம். எழுத்தாளர்கள் இருவரும் இஸ்லாமியர்கள். இவர்களை எதிர்ப்பவர்களும் இஸ்லாமியர்களே. ருஷ்டிக்கு இரானின் கொமேனியும் தஸ்லிமாவுக்கு வங்கதேச இஸ்லாமிய அமைப்பும் தடையுத்தரவும் கொலை உத்தரவும் பிறப்பித்தன. ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் இஸ்லாத்தின் இறைவனை நேரடியாகப் பகடி செய்தது. தஸ்லிமாவின் லஜ்ஜா இஸ்லாத்தின் பிற்போக்குத்தனங்களைக் கேள்விக்கு உட்படுத்தியது.
வங்கதேசத்துக்கு இன்று வரை தஸ்லிமா அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ருஷ்டி மீதான ஃபத்வா கொமேனியின் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது. ஓர் இந்தியப் பிரஜை என்னும் முறையில் ருஷ்டி எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம்; முன்அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை. ஆனால் வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லிமாவால், அவரது விருப்பத்துக்குரிய ‘இரண்டாவது வீடான’ கொல்கத்தாவுக்கு இன்று வரை வரமுடியவில்லை. மேற்கு வங்க அரசின் அனுமதியும் விசா நீட்டிப்பும் கிட்டவில்லை.
2
படைப்பாளிகளின் உரிமைகள் பறிக்கப்படுவது இங்கு புதிதல்ல. ஒரு புத்தக விமரிசனத்தின் அடிப்படையில் ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் ராஜிவ் காந்தி அரசால் அக்டோபர் 1988ல் தடை செய்யப்பட்டது. 1990கள் தொடங்கி எம்.எஃப். ஹுஸைனுக்கு இந்துத்துவ அமைப்புகளிடமிருந்து மிரட்டல்கள் வரத் தொடங்கின. அவரது ‘ஆபாசமான’ படைப்புகள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் அடியெடுத்து வைத்தால் போட்டிகள் நடைபெறாது என்று சிவ சேனா அக்டோபர் 2006ல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது. 2002 குஜராத் படுகொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட Parzania  என்னும் திரைப்படத்தை குஜராத் திரையரங்குகளில் திரையிடமுடியவில்லை. இந்தியாவில் பிறந்த கனடா எழுத்தாளரான ரோஹிந்தன் மிஸ்தரியின் Such a Long Journey  பம்பாய் பல்கலைக்கழகப் பாடப்பட்டியலில் இருந்து அக்டோபர் 2010ல் நீக்கப்பட்டது. தன் தாத்தா பால் தாக்கரேயை அவமானப்படுத்தும் வகையில் அந்நாவல் எழுதப்பட்டதாக உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா கருதியதாலும், பால் தாக்கரேயை அவமானப்படுத்துவது ‘மராத்தியர்களின் உணர்வை அவமானப்படுத்துவதற்குச் சமம்’ என்பதாலும் அந்நாவல் மாணவர்களுக்குத் தடை செய்யப்பட்டது.
அவ்வாறே, ஏ.கே. ராமானுஜனின் ராமாயணம் பற்றிய கட்டுரை டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டது. வெவ்வேறு வடிவில் 300 ராமாயணப் பிரதிகள் மக்களிடையே நிலவி வருவதைச் சுட்டிக்காட்டியதற்காக சங் பரிவார் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு அடிபணிந்து இந்தக் கட்டுரை விலக்கிக்கொள்ளப்பட்டது. காஷ்மிர் பற்றி அருந்ததி ராய் வெளியிட்ட கருத்துகளுக்காக அவர் அச்சுறுத்தப்பட்டார். Joseph Lelyveld  எழுதிய Great Soul, காந்தி பற்றிய ‘சர்ச்சைக்குரிய பகுதிகளைக் கொண்டிருந்ததால்’, நூல் விற்பனை குஜராத்தில் தடை செய்யப்பட்டது.
சித்தார்த்த தேப் எழுதிய இந்தியா குறித்த பயண-வரலாற்று நூலின் (The Beautiful and the Damned) முதல் அத்தியாயம் சில்சார் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. குப்தா எலெக்ட்ரிக் எஞ்சினியர்ஸ் என்னும் நிறுவனத்தைச் சேர்ந்தவரும் ஐ.ஐ.பி.எம் நிறுவனமும் இணைந்து தொடுத்த மானநஷ்ட வழக்கின் அடிப்படையில், முதல் அத்தியாயத்தை நீக்கி புத்தகம் அச்சிடப்பட்டது. அரிந்தம் சவுத்திரியின் வர்த்தக உலகை முன்வைத்து, புகழ், செல்வாக்கு, செல்வம் ஆகியவை இந்தியாவில் வளர்ந்த கதையை விவரிக்கும் அத்தியாயம் இது. தடையுத்தரவுக்குப் பிறகு முதல் அத்தியாயம் நீக்கப்பட்டுவிட்டதால் முன்னுரைக்குப் பிறகு நேராக 72ம் பக்கத்துக்குப் புத்தகம் நகர்ந்துவிடுகிறது.
ஜேம்ஸ் ஜாய்ஸ், டி.ஹெச். லாரன்ஸ், விளாதிமிர் நபகோவ், அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி ஆகியோரோடு தன்னை ஒப்பிட்டுள்ளார் சித்தார்த் தேப். ‘இவர்களுடைய படைப்புகளையும் என் புத்தகத்தையும் படைப்புரிமை ஒன்றிணைக்கிறது.  ஒரு எழுத்தாளர் அச்சமின்றி, தணிக்கைத் தடையின்றி, மிரட்டலின்றி தன் கருத்தைப் பதிவு செய்யும் உரிமை பற்றியது.’ மற்றொன்றையும் குறிப்பிடுகிறார் சித்தார்த் தேப். ‘சமகால இந்தியாவின் வரலாறு முழுமையாக உலகம் முழுவதிலும் கிடைக்கும்போது, இந்தியர்களுக்குப் பகுதியளவு மட்டுமே கிடைக்கிறது என்பது சோகமான முரண்நகை.’ அவர் தொடர்கிறார். ‘ஆனால் இதுவே இந்தியாவின் நிகழ்கால போக்கு பற்றி சில விஷயங்களைச் சொல்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்களையும் செல்வந்தர்களையும் பற்றி எவ்வளவுதான் ஆய்வுப்பூர்வமாக எழுதினாலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைத் தவிர்க்கவியலாது.’ தன் முன்னுரையை அவர் இவ்வாறு நிறைவு செய்கிறார். ‘…உண்மையைச் சொல்லவேண்டும் என்னும் முயற்சியில்தான் இந்நூலைத் தொடங்கினேன். 45 பக்கங்களை நீக்கியதன் மூலம் உண்மையின் ஒரு கை வெட்டப்பட்டுவிட்டாலும், மிச்சமுள்ள பக்கங்களில் போதுமான அளவுக்கு உண்மை நிறைந்துள்ளது என்றே நம்புகிறேன்.’
3
ஊடக தணிக்கை முறை குறித்து கபில் சிபல் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டது பரவலாக விவாதத்துக்கு உள்ளானது. கபில் சிபலின் கருத்துகளை அப்படியே ஏற்காவிட்டாலும், தணிக்கை முறை ஊடகங்களுக்குத் தேவை என்று புதிதாகப் பதிவியேற்றிருக்கும் பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு கூறியதும் விவாதத்துக்கு உள்ளானது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மூன்று தகுந்தமுறையில் கட்டுப்படுத்தப்படும் நிலையில், ஊடகத்துறை மட்டும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பது சரியல்ல என்றார் கட்ஜு.
ஏன் தணிக்கை அவசியம் என்பதற்கு கபில் சிபல் சரியான முறையில் விளக்கம் அளிக்கவில்லை. மன்மோகன் சிங்கையும் சோனியா காந்தியையும் ‘அவதூறு’ செய்யும் வண்ணம் இணையத்தில் பல படங்கள் உலாவிக்கொண்டிருக்கின்றன என்றார். பிறகு ‘மத உணர்வுகள் காயப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காகத் தணிக்கை தேவை’ என்றார். பிறகு, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தகுந்தமுறையில் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்றார். எதிர்ப்புகள் வலுத்ததும், ‘ஊடகம் தனக்கான ஒழுங்குமுறைகளை வகுத்துக்கொள்ளவேண்டும்’ என்று மட்டுமே தான் குறிப்பிட்டதாகச் சொல்லி வாதத்தை முடித்துக்கொண்டார்.
தணிக்கை முறை குறித்து இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அரபுலக எழுச்சி, ஆக்குபை வால்ஸ்ட்ரீட் என்று உலகம் தழுவிய அளவில் நடைபெறும் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் இணையத்தளம் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. ஒரே சமயத்தில் ஆளும் வர்க்கத்தின் பிரசாரக் கருவியாகவும் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் ஆயுதமாகவும் இணையத்தளம் திகழ்கிறது என்பதால் எங்கே, எப்படி, எத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது என்று தெரியாமல் அரசாங்கங்கள் குழம்பிக்கொண்டிருக்கின்றன. முதலாளித்துவம் தனக்கான சவக்குழியைத் தானே தோண்டிக்கொள்ளும் என்னும் மார்க்சிய உண்மையை இங்கே பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.
4
நாம் இருவகையான தணிக்கை முறைகளைப் பற்றி இங்கே உரையாடிக்கொண்டிருக்கிறோம். சட்டப்பூர்வமான தணிக்கை முறை. சட்ட விரோதமான தணிக்கை முறை. தன் நாட்டின் பிரஜைகள் எப்படிப்பட்ட படைப்புகளை நுகரலாம், ஊடகங்கள் எப்படிப்பட்ட செய்திகளை அளிக்கலாம் என்பதை ஓர் அரசு நிர்ணயம் செய்து, சில விஷயங்களைத் தணிக்கை செய்கிறது. அதன்படி பல்வேறு காரணங்களுக்காக ஒரு படைப்பு சட்டப்படி தணிக்கை செய்யப்படுகிறது. ஆபாசமான, வக்கிரமான படைப்புகள், வன்முறையைத் தூண்டும் படைப்புகள், தேசத்தை பிளவுபடுத்தும் படைப்புகள் என்று வகைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் அளவுகோல்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த அளவுகோல்களை மீறும் படைப்புகள் முழுமையாகவோ பகுதியளவிலோ தணிக்கை செய்யப்படும். இது முதல் வகை தணிக்கை முறை. உதாரணத்துக்கு, டி.ஹெச். லாரன்ஸின் Lady Chatterley’s Lover, நபகோவின் Lolita ஆகிய நாவல்கள், அதிலுள்ள ‘ஆபாச உள்ளடக்கம்’ காரணமாகத் தணிக்கை செய்யப்பட்டன.
இரண்டாவது வகை தணிக்கை முறை, சட்டவிரோதமானது. சல்மான் ருஷ்டியும் தஸ்லிமா நஸ்ரினும் எம்.எஃப். ஹுஸேனும் சட்டவிரோதமான தணிக்கை முறையையும் ஒடுக்குமுறையையும் சந்தித்தவர்கள். முறைப்படி இவர்களது படைப்புகள் தணிக்கை செய்யப்படவில்லை; தடை செய்யப்படவும் இல்லை. ஆனாலும், இவர்களுடைய படைப்பு சுதந்தரம் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் இந்துத்துவ மற்றும் இஸ்லாமிய மத பீடங்களும் அவர்களுடைய தீவிரவாத சித்தாந்தங்களும்தான். மாறாக, சித்தார்த்த தேபும் அருந்ததி ராயும் சட்டப்பூர்வமான தணிக்கையையும் ஒடுக்குமுறையையும் சந்தித்தவர்கள்.
இந்தியாவைப் பொருத்தவரை இந்துத்துவத் தீவிரவாத அமைப்புகள் அரசியல் செல்வாக்கு பெற்றவையாக இருப்பதால் அவர்களுக்கு ஒவ்வாத படைப்புகள் வெளிவருவதில்லை. வெளிவந்தாலும் பலவந்தமான முறையில் தணிக்கை செய்யப்படுகிறது. (அருந்ததி ராய்மீது சுமத்தப்பட்ட தேச விரோத வழக்கு ஓர் உதாரணம்). இஸ்லாமிய அமைப்புகளுக்கு அப்படிப்பட்ட செல்வாக்கு இல்லை என்றாலும் அவர்களுடைய எதிர்ப்புகளுக்கு அரசு பணிந்துபோவதற்குக் காரணம் இஸ்லாமிய சமூகத்தின் ஓட்டுகளைப் பெறுவதுதான். சல்மான் ருஷ்டி விவகாரத்திலும் தஸ்லிமா நஸ்ரின் விவகாரத்திலும் அரசு அமைதி காத்ததன் பின்னணி இதுவே.
ஒரு படைப்பாளிக்குக் கட்டற்ற சுதந்தரம் அளிக்கப்படவேண்டும் என்று கோருபவர்கள் சட்ட விரோதமான தணிக்கை முறையை மட்டுமல்ல, அரசின் சட்டப்பூர்வமான தணிக்கையும்கூட சேர்த்தே எதிர்க்கிறார்கள். எது ஆபாசம் என்பதை எப்படி நிர்ணயம் செய்வது? எது வன்முறை? எது மத வெறுப்பு? எது தேச நலனுக்கு விரோதமானது? அளவுகோல்களை யார் நிர்ணயிப்பது? ஏன் நிர்ணயிக்கவேண்டும்? எது தனக்கு வேண்டும் என்பதை நுகர்வோர்தான் தீர்மானிக்கவேண்டுமே தவிர அரசோ பிற அமைப்புகளோ அல்ல என்பது இவர்களுடைய வாதம். மேலும், இந்த இரு வகை தணிக்கை முறைகளுக்கும் இடையில் பெரும்பாலும் அதிக வித்தியாசம் இருப்பதில்லை என்பதையும் நாம் காண்கிறோம். ஆளும் வர்க்கத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிரான கருத்துகள் இரு வகைகளிலும் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன.
5
அனைவருக்குமான கருத்துச் சுதந்தரம் என்பது சாத்தியமா? யாரும் எதைப் பற்றியும் பகிரங்கமாக விமரிசனம் செய்யலாமா? எந்தவொரு சமூகத்திலும் இது சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. முதலாளித்துவ சமூகமாக இருந்தாலும் சரி, சோஷலிச, கம்யூனிச சமூகமாக இருந்தாலும் சரி. முறைப்படுத்தலும் கட்டுப்படுத்தலும் இல்லாத கருத்துச் சுதந்தரம் சாத்தியமில்லை. கவனிக்கப்படவேண்டிய விஷயம், இந்த முறைப்படுத்தல் யாருக்கு ஆதரவாக அல்லது எதற்கு எதிராக நிகழ்த்தப்படுகிறது என்பதைத்தான். உதாரணத்துக்கு, ஆக்குபை வால்ஸ்ட்ரீட் போராட்டத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? ஒபாமா அரசு ஒரு சதவீத பெரும் பணக்காரர்களை ஆதரிக்கிறதா அல்லது 99 சதவீத பிற அமெரிக்கர்களை ஆதரிக்கிறதா? இருவருடைய நலன்களும் கேள்விக்கு உள்ளாகும்போது, இருவருடைய நலன்களும் எதிரெதிராக நிறுத்தப்படும்போது, அரசாங்கம் யாருடைய நலனைத் தேர்ந்தெடுக்கிறது? ஆக, எந்த வர்க்கத்தின் பிரதிநிதியாக ஒரு அரசாங்கம் திகழ்கிறது என்பதைப் பொறுத்தே தணிக்கை முறையின் சரி, தவறுகளை நாம் விமரிசிக்க முடியும். இதன் பொருள், எதிர்க் கருத்துகளுக்கு இடம் கொடுக்கப்படக்கூடாது என்பதல்ல. இதுபற்றி பின்னர் விரிவாக உரையாடலாம்.
அலெக்ஸாண்டர் சோல்ஷனிஸ்டன், போரிஸ் பாஸ்டர்நாக் போன்றோரைச் சுட்டிக்காட்டி சோவியத் யூனியனில் படைப்பாளிகளின் கருத்துரிமை பறிக்கப்பட்டது என்று அலறும் அறிவுஜீவிகள் சல்மான் ருஷ்டியின் படைப்புரிமையையும் எம்.எஃப். ஹுஸைனின் படைப்புரிமையையும் ஒன்றுபோல் பாவிப்பார்களா? அவ்வாறு பாவிக்கவில்லை என்பதைத்தானே ஏ.கே. ராமானுஜனின் படைப்புரிமையும் அருந்ததி ராயின் கருத்து சுதந்தரமும் பறிக்கப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன?
6
சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் விவாதங்களில் கவனிக்கப்படவேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் ‘ஜனநாயகத்தின் தோல்வி’ பற்றிய கவலை.  இந்த இரு எழுத்தாளர்களின் படைப்பு சுதந்தரம் பறிக்கப்பட்டதன் மூலம், இந்தியாவின் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிட்டதாகப் பல படைப்பாளிகளும் அறிவுஜீவிகளும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்காக ‘இந்தியர்களாகிய நாம் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்’ என்று இவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
ஆனால், சல்மான் ருஷ்டியின் செயல்பாடுகளை மற்றொரு படைப்பாளியான தஸ்லிமா நஸ்ரினே ஏற்கவில்லை என்பதுதான் உண்மை. ஃபத்வா என்றதும் பயந்து முல்லாக்களிடம் மன்னிப்பு கேட்டு, இப்போது உயிருக்கு ஆபத்து என்றதும் இந்தியாவுக்கு வருவதைத் தள்ளிப்போட்ட சல்மான் ருஷ்டி உண்மையில் ஒரு ‘கோழை’ என்று விமரிசிக்கிறார் தஸ்லிமா நஸ்ரின். ஒரு வகையில் இது உண்மைதான். ருஷ்டியோடு ஒப்பிட்டால் தஸ்லிமா நஸ்ரினின் எழுத்துகள் கூர்மையானவை; சமூக அக்கறை மிக்கவை. இஸ்லாத்தை மட்டுமல்ல இந்து மதம், கிறிஸ்தவம் உள்ளிட்ட ஏனைய மதங்களில் உள்ள பிற்போக்குத்தனங்களைத் தொடர்ந்து காட்டமாக விமரிசித்துக்கொண்டிருக்கிறார் தஸ்லிமா. ருஷ்டியின் எழுத்துகளில் (நான் வாசித்தவரை) அத்தகைய சமூக நோக்கங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு படைப்பாளி சமூக அக்கறையுடன் மட்டும்தான் எழுதவேண்டுமா என்று எதிர்கேள்வி வரும். வேண்டியதில்லை என்று வைத்துக்கொண்டால், அத்தகையவர்களுக்காக எதற்காக நாம் அனைவரும் குரல் கொடுக்கவேண்டும்? சமூக அக்கறை இல்லாத ஒருவரது படைப்புகளை எதற்காக சமூகம் அக்கறையுடன் பரிசீலிக்கவேண்டும்?
சாதிய ஒடுக்குமுறைகளைத் தினம் தினம் சந்தித்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரச்னை இந்தியர்களின் பிரச்னை அல்ல. அது தலித் சமூகத்தின் பிரச்னை. நக்ஸலைட்டுகள் என்னும் பெயரில் பழங்குடிகள் வேட்டையாடப்படுவது இந்தியப் பிரச்னை அல்ல. அது பழங்குடிகளின் பிரச்னை. விடுதலை வேண்டி போராடும் காஷ்மிரிகளின் பிரச்னை, இந்தியப் பிரச்னை அல்ல. அது காஷ்மிரின் பிரச்னை. இவர்களுடைய பேச்சுரிமையும் எழுத்துரிமையம் கருத்துரிமையும் அதிகார வர்க்கத்தின் பூட்ஸ் கால்களுக்குக் கீழே நசுங்கி கிடக்கின்றன. ஆனாலும், சல்மான் ருஷ்டியால் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ளாமல் போனதைத்தான் நாம் நமது தேசிய அவமானமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுஜீவிகள் எதிர்பார்க்கிறார்கள்.
அது சாத்தியமில்லை. காரணம், எழுத்தாளர்கள் மக்களைக் காட்டிலும் மேலானவர்கள் அல்லர். மக்களுடைய உரிமைகளைக் காட்டிலும் மேலான உரிமைகளை அவர்கள் கோரமுடியாது. கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே!
0
மருதன்

கருத்துகள் இல்லை: