வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பொதுசின்னம், பொதுவேட்பாளர் என்ற திட்டம்

சட்டசபையில் முதல்வருக்கும் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்துக்கும் ஏற்பட்ட மோதலால் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
ஏப்ரல் மாதம் 21-ம் தேதிக்குள் சங்கரன்கோவில் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் சங்கரன்கோவில் ஒன்றிய சேர்மன் முத்துச்செல்வியை வேட்பாளராக அறிவித்து தேர்தல் களத்தில் முந்திச் செல்கிறது, அ.தி.மு.க.
  உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது ம.தி.மு.க. பேரவையில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத ம.தி.மு.க. இந்தத் தேர்தலில் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபித்துக் காட்ட விரும்புகிறது. தொகுதிக்குள் முதன் முதலாக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
தி.மு.க. தரப்பில் ஆரம்பத்தில் தொய்வு இருந்த போதிலும், தற்போது வேகம் காட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். பொதுக்குழு முடிந்த மறுநாள் சென்னையில் நெல் லை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தி.மு.க. ஆட்சியை இழந்த போதிலும் நம்பிக்கையை தளரவிடாமல் களம் காணத் தயாராகி வருகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., இப்போது தனித்துவிடப்பட்டு இருக்கிறது. சட்டப்பேரவையில், ‘திராணி இருந்தால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுப் பாருங்கள்’ என்று முதல்வர் ஜெயலலிதா, சவால் விட்டுள்ளார். இதையடுத்து தே.மு.தி.க.வும் சங்கர ன்கோவில் தேர்தல் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க. சுமார் ஐந்தாயிரம் வாக்குகளே பெற்றது. அதுவே 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் பத்து சதவிகிதமாக உயர்ந்து இருந்தது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில், சங்கரன்கோவில் தொகு திக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் பத்து சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. அதோடு அ.தி.மு.க. அணியில் இருந்த கம்யூனிஸ்டுகளும் இவர்களோடு இணக்கமாக இருந்து வருவது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொகுதியைப் பொறுத்தவரையில் பார்வர்டு பிளாக், புதிய தமிழகம் இரண்டு கட்சிகளும் தவிர்க்க முடியாத சக்திகளாக இருக்கின்றன. 2006-ம் ஆண்டு தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சின்னத்தில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி, 8 ஆயிரம் வாக்குகளை வாங்கியுள்ளது. அதே தேர்தலில் கார்த்திக் தலைமையிலான பார்வர்டு பிளாக் கட்சி 10 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளது. எனவே, இவர்கள் இருவரையும் தங்கள் கூட்டணிக்குக் கொண்டு வர ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தீவிரம் காட்டுகி ன்றன. புதிய தமிழகம் கட்சி தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இப்போதைக்கு மூன்று அணிகளாக எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பது ஆளும் கட்சிக்கு லாபம். இதனை நன்கு உணர்ந்துள்ள இடதுசாரிகள், எதிர்க்கட்சிகளை ஒரு ங்கிணைக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்து இருக்கிறது. சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர் ஏ.எம்.கோபு, மணிவிழா நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி சென்னையில் நடந்தது. அ.தி.மு.க., தி.மு.க.வைத் தவிர மற்ற கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனை தங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறார்கள் இடது சாரிகள்.

பொது வேட்பாளராக தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த ம.தி.மு.க. சார்பில் தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு, ஈழப் பிரச்னையில் கருணாநிதியை கடுமையாக வைகோ விமர்சிப்பதால் தி.மு.க. இதற்கு சம்மதிக்காது என்றே சொல்கிறார்கள். விஜயகாந்தையும் காங்கிரஸ் கட்சியையும் கூட்டணியில் வைத் துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கும் எண்ணமும் தி.மு.க.வுக்கு இருக்கிறது. இந்த முயற்சியில் கருணாநிதியின் மகள் செல்வியும் முக்கிய பங்கு வகிக்கிறார். வைகோவும் விட்டுக் கொடுக்கும் மனநிலையில் இல்லை என்றே சொல்கிறார்கள். இந்நிலையில் காம்ரேடுகள் புதிய திட்டத்தோடு களம் இறங்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

அவர்களின் திட்டம் இதுதான். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது. அவர் எந்த கட்சி சின்னத்திலும் போட்டியிடாமல் எல்லோருக்கும் பொதுவான சின்னத்தில் போட்டியிட வைத்து, அவரை அனைவரும் ஆதரிப்பது. வேட்பாளரை அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து தேர்வு செய்வது. வேட்பாளர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவராகவோ அல்லது தொகுதியில் செல்வாக்கான நபராகவோ அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராகவோ இருக்கலாம். இந்த மூன்று நிபந் தனைகளின் அடிப்படையில் அனைத்து எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

பொதுசின்னம், பொதுவேட்பாளர் என்ற திட்டம் எந்த அளவுக்கு சாத்தியம் என்பது போகப்போகத்தான் தெரியும்.



இடைத்தேர்தல் ஸ்பெஷலிஸ்ட் அழகிரி திருச்சி இடைத்தேர்தலில் ஒதுங்கியே இருந்தார். ஆனால், சங்கரன்கோவில் இடைத்தேர்தலை தலைமையேற்று நடத்த திட்டமிட் டுள்ளார். ஆனால், இதற்காக தி.மு.க. சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தை ஸ்டாலின் புறக்கணித்துள்ளார். தேர்தல் பிரசாரத்துக்கு அவர் போகமாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஒருவேளை பொதுவேட்பாளர் கான்செஃப்ட் தோற்றுப்போய் தி.மு.க. போட்டியிட்டால், இடைத்தேர்தலில் யார் பெஸ்ட் என்பதை ஒப்பிட சரியாக இருக்கும் என்று தி.மு.க.வினர் பேசிக்கொள்கிறார்கள்.

- ச.கோசல்ராம்
thanks kumudam +sankaranarayanan buffalo

கருத்துகள் இல்லை: