மதுரை மேயர் பதவிக்கு தனது ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கவுஸ் பாட்ஷாவை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. ஆனால் திமுக தலைவர் கருணாநிதியோ, முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கத்தை நிறுத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.இதனால் 'டக் ஆப் வார்' தொடங்கியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான முன் நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளுமே தீவிரமாகியுள்ளன. மேயர் பதவிக்கு இந்த முறை நேரடித் தேர்தல் நடைபெறவுள்ளதால் முக்கிய மாநகராட்சிகளில் முக்கிய வேட்பாளர்களை நிறுத்தும் வேலைகளில் கட்சிகள் இறங்கியுள்ளன.சென்னை மேயர் பதவிக்கு முதல் ஆளாக பாமக சார்பில் சீட் கேட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி. இந்த நிலையில் மதுரை மேயர் பதவிக்கு போட்டியிட தனது ஆதரவாளர் கவுஸ் பாட்ஷாவை களம் இறக்கியுள்ளார் அழகிரி. அழகிரியின் உத்தரவுப்படி பாட்ஷாவும் மாவட்ட கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்துள்ளார்.
ஆனால் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு பாட்ஷாவுக்கு சீட் தர விருப்பமில்லையாம். மாறாக மாநில வக்கீல் அணியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான பொன். முத்துராமலிங்கத்தை மேயர் பதவிக்குப் போட்டியிட வைக்க அவர்கள் ஆதரவாக உள்ளனர்.
இதனால் திமுக வட்டாரத்தில் டக் ஆப் வால் தொடங்கியுள்ளது. இதில் வெல்லப் போவது அழகிரியா அல்லது கட்சித் தலைமையா என்ற சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மீண்டும் மா.சுப்பிரமணியனே போட்டியிட விரும்புகிறார். அவருக்கு மு.க.ஸ்டாலினின் மகத்தான ஆதரவு இருப்பதால் அவருக்கே சீட் கிடைக்கலாம் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக