யாழ். பழைய பூங்கா வளாகத்தை ஆக்கிரமித்து அங்கு கட்டடங்களை அமைப்பதில் அரச திணைக்களங்கள் ஆர்வமுடன் செயற்பட்டு வருகின்றன. பழைய பூங்காவுக்கு என வரையறுக்கப்பட்ட நிலம் 20 ஏக்கர் மட்டுமே. ஆனால், அரச திணைக்களங்களிடம் இருந்து 90 ஏக்கர் நிலத்துக்கான கேள்விகள் வந்து குவிந்துள்ளன என்று அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
யாழ். குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களில் ஒன்றான பழைய பூங்காவையும் அங்கு நிற்கும் நூற்றாண்டு காலப் பழமை வாய்ந்த மரங்களையும் தேசியச் சொத்தாகக் கருதிப் பாதுகாக்க வேண்டும் என்று சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இதற்கு மாறாக ஏற்கனவே பழைய பூங்காவில் அரச அதிபருக்கான உத்தியோகபூர்வ இல்லமும் ஆளுநர் மாளிகையும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றால் ஏற்கனவே பூங்காவின் உயிரியல் சூழலில் குலைவுகள் ஏற்பட்டுள்ளன என்று சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் பூங்காவை ஆக்கிரமித்து மேலும் பல கட்டடங்களை அங்கு அமைப்பது அதனைச் சிதைப்பதற்கே வழிவகுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். நகரத்தின் நுரையீரல் மாதிரி இருக்கும் பழைய பூங்காவைப் பாழாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
"நகரம் முழுவதும் கட்டக்காடாகக் கிடக்கையில் பழைய பூங்காவில் மட்டுமே பழைமையான மரங்கள் உள்ளன. நகரின் வளிச் சுத்திகரிப்புக்கு அவையே கணிசமான பங்கை வழங்குகின்றன. அப்படி இருக்கையில் அவற்றை அழிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கான அலுவலகக் கட்டடம் அமைக்க பூங்காவில் 4 பரப்புக் காணி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட காணிகளைத் தவிர வேறு காணி எதனையும் அரச திணைக்களங்களுக்கு ஒதுக்கும்படி தன்னை நிர்ப்பந்திக்க வேண்டாம் என்று அரச அதிபர் இமெல்டா சுகுமார் திணைக்களத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
"எனக்கு முன்னர் பதவி வகித்த அரச அதிபர்களில் 59 பேர் பழைய பூங்காவின் காணிகளைப் பாதுகாத்துள்ளனர். அண்மையிலேயே அதற்குள் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. நான் அரச அதிபராக இருந்திருந்தால் அவற்றைக்கூட வழங்கி இருக்க மாட்டேன்'' என்று அரச அதிபர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி யாழ். செயலகத்தில் நடைபெற்ற தேசிய நீர்வழங்கல் சபையின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். "பழைய பூங்காவை என்ன தேவைக்கு, எப்படிப் பயன்படுத்தலாம் என்று பல தசாப்தங்களுக்கு முன்னரே அரச அதிபர் ஒருவர் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளார். இன்றும் அங்கு சில பழைய கட்டடங்கள் இருக்கின்றன. அவற்றை இடித்து அகற்றுவதற்கோ அந்த இடங்களில் புதிய கட்டடங்களை அமைப்பதற்கோ எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது'' என்று தெரிவித்தார் அரச அதிபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக