புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் அனுபவத்தொடர் – 9
நள்ளிரவில் மீண்டும் ஒரு பயணம்!
முதலில் சைக்கிள் திருநெல்வேலிச் சந்தியிலிருந்து மேற்கு நோக்கித் திரும்பியது. எனவே காங்கேசன்துறை வீதியிலிருந்த கொக்குவில் நோக்கிச் செல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். தொடர்ந்து சென்ற சைக்கிள் நான் எதிர்பார்த்தபடியே யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைத் தாண்டி, புகையிரதப் பாதையைக் கடந்தது. மருத்துவ பீடத்தில் உடற் கூற்றியல் பேராசிரியையாக பணிபுரிந்த ரரஜினி திராணகமவை, இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த காலத்தில், புலிகள் பட்டப்பகலில் வீதியில் வைத்துத் துடிக்கப் பதைக்க சுட்டுப் படுகொலை செய்த அந்த இடத்தைக் கடந்த போது, எனது மனது மிகவும் சோகமாக மாறியது. அந்த மருத்துவ பீடத்துக்கு அருகாமையிலேயே வசித்து வந்த ராஜினியின் வீட்டுக்கு, நான் பல தடவைகள் சென்று உரையாடியிருக்கிறேன். யாழ் பல்கலைக்கழகத்தின் கணிதபீட விரிவுரையாளரும், எனது நீண்ட நாளைய நண்பருமான கலாநிதி கே.சிறீதரன,; ராஜினியை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார். பல போலித் தமிழ்ப் புத்திஜீவிகள் போலல்லாது, தமிழ் சமூகத்துக்கு உண்மை விசுவாசத்துடன் ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்பதற்காக, தனது உயிரையே துச்சமாக மதித்து வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் ராஜினி. லண்டனில் புலிகள் இயக்கத்தை தமிழர்கள் மத்தியில் அறிமுகம் செய்வதில் வேறு எவரும் ஆற்றாத பங்களிப்பை வழங்கிய ராஜினி, புலிகள் தவறான பாதையில் செல்கிறார்கள் எனக் கண்டதும் தனது விமர்சனங்களைத் துணிச்சலுடன் முன்வைத்தார். அதற்கு அவருக்கு புலிகள் வழங்கிய பரிசுதான் இந்த மரண தண்டனை! (மேலும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக