திங்கள், 1 நவம்பர், 2010

புலிகளுக்கு வைக்கப்படும பொற,மீண்டும் நோர்வே பற்றிய செய்திகள்

நோர்வேயுடன் நெருங்கும் இலங்கை; புலிகளுக்கு வைக்கப்படும் பொறியா?
 -கே.சஞ்சயன்
மீண்டும் நோர்வே பற்றிய செய்திகள் ஊடகங்களில் அடிபடத் தொடங்கியுள்ளன.
கடந்த செப்டெம்பர் மாத நடுப்பகுதியில், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்ற நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நோர்வே பிரதமர் ஜீன்ஸ் ஸ்ரோல்ரென்பேர்க் மற்றும் அந்த நாட்டு அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
இதன் பின்னரே நோர்வே பற்றிய செய்திகள் இலங்கை ஊடகங்களில் இடம் பிடிக்கத் தொடங்கின.
இலங்கையுடனான உறவுகளைப் புதுப்பிக்கும் நோக்கில் எரிக் சொல்ஹெய்மை கொழும்புக்கு வருமாறும் இந்தச் சந்திப்பின் போது  அழைப்பு விடுத்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இதையடுத்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் கொழும்பு வருவதற்கு  எரிக் சொல்ஹெய்ம் இணங்கியுள்ளார்.
இது இப்படியிருக்க, இன்னொரு பக்கத்தில் இலங்கையில் மேற் கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் தோல்வி கண்டது ஏன் என்பது குறித்து தனியார் முகவர் அமைப்பு ஒன்றின் மூலம் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது நோர்வே.
இந்தநிலையில், நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்துள்ள கோமின் தயாசிறி போன்றவர்கள், நோர்வேயே சமாதான முயற்சிகள் முறிந்து போனதற்குப் பிரதான பொறுப்பாளி என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் சட்டத்தரணி கோமின் தயாசிறி, அளித்த சாட்சியத்தில் எரிக் சொல்ஹெய்ம் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாகவும்- அவரை, இலங்கைக்கு வேண்டப்படாதவராக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த சிலரும் அவ்வாறே கூறியிருந்தனர்.1990களின் இறுதியில் விடுதலைப் புலிகளுக்கும் அரசபடைகளுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்திருந்த கட்டத்தில் தான், நோர்வே சமாதான முயற்சிகளில் கால் வைத்தது. அப்போது நோர்வேயின் சமாதான முயற்சிகள் உடனடி வெற்றி காணவில்லை.
சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் சமாதானப் பேச்சுகளுக்கோ அல்லது போர் நிறுத்தத்துக்கோ தயாராக இருக்கவில்லை.
ஆனால், அதற்குப் பிறகு வந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் சமாதானப் பேச்சு, போர்நிறுத்தம் என்று இறங்க, நோர்வேயின் முயற்சிகள் பலன் கொடுக்கத் தொடங்கின.
போரில் அரசபடைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளும், பொருளாதார நெருக்குவாரங்களுமே அத்தகைய முடிவுக்கு அரசாங்கத்தை இட்டுச் சென்றன. இதை நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த பல மூத்த இராஜதந்திரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆரம்பத்தில், போர்நிறுத்தத்தை உருவாக்கினால் போதும், பேச்சுக்களை தொடங்கி தீர்வு காணலாம் என்றே நோர்வே நினைத்திருந்தது.
ஆனால், போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் தான் அதை நடைமுறைப்படுத்துவது, அதனால் ஏற்படும் பிரச்சினைகளை எப்படிச் சமாளிப்பது என்பன எந்தளவுக்குச் சிக்கலானது என்று நோர்வேக்குப் புரிந்தது.
சுமார் நான்கு வருடகாலப் போர்நிறுத்தம் 2006இல் முறிந்து போக அரசாங்கம் போரைத் தீவிரப்படுத்தி புலிகளையே இல்லாமல் செய்து விட்டது.
போர்நிறுத்த காலத்தில் இடம்பெற்ற, அதற்குச் சவாலாக பல சம்பவங்களும், சமாதான முயற்சிகளைக் குழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளுமே நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகள் குழம்பிப் போகக் காரணமாக இருந்தன.
சமாதான முயற்சிகளில் நோர்வே அனுசரணையாளராக மட்டுமே இருந்தது. அதற்கு மத்தியஸ்தர் என்ற அங்கீகாரம் கூடக் கிடைக்கவில்லை.
இந்த சமாதான முயற்சிகளில் முக்கிய பங்காளரான புலிகளும் அரசதரப்பும் அதற்கேற்றவாறு நடந்து கொண்டனவா என்பது முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயம்.
போர்நிறுத்த உடன்பாட்டை முறித்து, சமாதானப் பேச்சுக்களை குழப்புவதற்கென்று பல சக்திகள் கங்கணம் கட்டி நின்றன.
அதற்காக எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டன; ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்தைப் போல வேறெங்கும் உள்ள தூதரகங்கள் இத்தனை எதிர்ப்புப் போராட்டங்களைச் சந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.
அந்தளவுக்கு சமாதான முயற்சிகளுக்குக் குறுக்கே பல தடைக்கற்கள் போடப்பட்டன.
இதன் விளைவாக சமாதான முயற்சிகளில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒருவரை ஒருவர் நம்பிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
அவையெல்லாம் ஒன்று சேர்ந்ததன் விளைவே போர்நிறுத்தம் முறிந்தது; சமாதான முயற்சிகள் சீர்குலைந்தன.
இதில் தனியே புலிகளோ அல்லது அரசதரப்போ அல்லது நோர்வேயோ காரணமல்ல. எந்தவொரு தரப்பினையாவது தனியே கூண்டிலேற்றுவது முறையற்றது.
நோர்வேயின் தனியார் முகவர் அமைப்பு ஆரம்பிக்கவுள்ள விசாரணைகளில் இதற்கான காரணங்கள் ஓரளவுக்கேனும் தெரியவரும் என்பது வெளிப்படை.
ஏனென்றால், இந்த விடயத்தில் நோர்வே திறந்த மனதுடன் தமது பக்க நியாயங்களைச் சொல்லும் என எதிர்பார்க்கலாம்.
அதேபோல இலங்கை அரசாங்கமும் அந்த நியாயங்களை முன்வைக்கத் தயாராகவே இருக்கும் போலத் தெரிகிறது.
ஏனென்றால் ஐ.நா. பொதுச்செயலர் நியமித்த நிபுணர்குழுவை நிராகரித்தது போல இதை அரசாங்கம் நிராகரிக்கவில்லை. எனவே இந்த விசாரணையை இலங்கை அரசும் ஏற்றுக் கொள்ளும்.
அதேபோல நோர்வேயின் விசாரணையின் போது புலிகள் தரப்பில் புலம்பெயர் சமூகத்தினரும் சாட்சியங்களை முன்வைக்கும் சாத்தியங்கள் உள்ளன.
எனவே இந்த விடயத்தில் ஓரளவுக்கேனும் நியாயமான அறிக்கை ஒன்றை எதிர்பார்க்கலாம்.
இந்தநிலையில், இலங்கை அரசாங்கம் எரிக் சொல்ஹெய்மை கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்க, கோமின் தயாசிறி அவரை வேண்டப்படாதவராக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
சட்டத்தரணி கோமின் தயாசிறி 2006ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற பேச்சுக்களில் இலங்கை அரசின் சார்பில் கலந்து கொண்ட குழுவில் ஆலோசகராக இருந்தவர்.
அவர் அப்படிக் கூறியிருந்தாலும் இலங்கை அரசாங்கம் இப்போது நோர்வேயுடன் பகைமை பாராட்டும் நிலையில் இல்லை. நடந்து முடிந்ததை மறந்து விட்டு நடக்கப் போவதைப் பார்க்கலாம் என்ற ரீதியில் நெருங்கிச் செல்லவே விரும்புகிறது.
உலகில் உள்ள பணக்கார நாடுகளில் நோர்வேயும் ஒன்று. அது இலங்கையின் சமாதான முயற்சிகளுக்காகச் செலவிட்ட நிதி சுமார் 100 மில்லியன் குரோனர்.
அதைவிட அதிகமாக இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக நோர்வே அள்ளிக் கொடுத்திருக்கிறது. குளங்களின் அபிவிருத்தி, மீன்பிடி அபிவிருத்தித் திட்டங்களில் நோர்வே அதிகமான பங்களிப்பை வழங்கியுள்ளது.
அதைவிட சமூக அபிவிருத்தித் திட்டங்களிலும் நோர்வேயின் பங்களிப்பு அதிகமானது. சமாதான முயற்சிகளின் தோல்விக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நிலையில் ஒரு இடைவெளி ஏற்பட்டுள்ளது.
சமாதான முயற்சிகளுக்கான அனுசரணையாளர் பொறுப்பிலிருந்து நோர்வேயை நீக்குவதாக இலங்கை அரசே அறிவித்தது. ஆனால் இப்போது இலங்கைக்கு நோர்வேயிடம் இருந்து பல காரியங்கள் ஆக வேண்டியுள்ளன
தொழில்துறை முதலீடுகளைப் பெறுவதற்கும், அபிவிருத்தித் திட்டங்களுக்கும் நோர்வேயின் உதவியைப் பெறவும் அரசாங்கம் விரும்புகிறது.போரின் முடிவுக்குப் பிந்திய மீள்கட்டுமானத்தில் நோர்வேயை பங்கேற்க வைப்பது அரசாங்கத்தின் திட்டம். அதற்காகவே இந்த நெருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் எந்தத் தடைவேலியும்  கிடையாது என்று கூறியுள்ளார்.
இது நோர்வேயை புதிய முகத்துடன் இலங்கையில் அறிமுகம் செய்து கொள்ள வைக்கும் முயற்சியாகவே தெரிகிறது.
எரிக் சொல்ஹெய்ம் போன்ற முன்னர் பழகிய முகங்கள் இப்போது வேறொரு முகத்துடன் இலங்கைக்கு வரப் போகின்றனர்.
முன்னர் அவர்களின் தேவையும் வருகையும் சமாதானத் தேடலுக்குரியதாக இருந்தன.
ஆனால், இப்போது அவர்களின் வருகையும் தேடலும் பொருளாதார நலன்களைக் மையப்படுத்தியதாக இருக்கப் போகின்றன.
இது தனியே இலங்கைக்கு மட்டுமான பொருளாதார நன்மைகளைக் கருத்தில் கொண்டதாக இருக்காது. மாறாக, நோர்வேயின் நன்மைகளையும் உள்ளடக்கியதாகவே இருக்கப் போகிறது. இதன் பின்னால் இன்னொரு விவகாரமும் இருக்கிறது.
நோர்வேயில் தான் நெடியவன் போன்ற புலிகளின் சில முக்கிய தலைவர்கள் இருக்கின்றனர்.
இவர்களால் பெரிதாக எதையும் செய்ய முடியாது என்ற போதும் புலிகளின் எச்சத்தை இல்லாமல் செய்து விடுவதற்கு இவர்களும் இலங்கை அரசுக்குத் தேவை. அதற்கு நோர்வேயுடன் நெருங்கிப் போவது தான் இலங்கை அரசுக்கு உள்ள வழி.
நன்றி: தமிழ் மிரர்

கருத்துகள் இல்லை: