BBC News தமிழ் - சௌதிக் பிஸ்வாஸ் : கடந்த அக்டோபர் மாதம், அமெரிக்காவின் சுங்கம் மற்றும் குடியேற்ற அமலாக்கத்துறை அங்குள்ள இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் தாய்நாட்டிற்கே திருப்பி அனுப்பியது. இதுபோன்று இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது சாதாரண விமானம் அல்ல, இது மிகப்பெரிய அளவில் மக்களை வெளியேற்றப் பயன்படும் விமானம். இந்த ஆண்டு மட்டுமே பல முறை பல நூற்றுக்கணக்கான பயணிகளுடன் இந்த விமானம் இயக்கப்பட்டது. அமெரிக்காவில் வாழ சட்டப்பூர்வ அடிப்படையை ஏற்படுத்திக் கொள்ளாத இந்தியர்கள் இந்த விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.அமெரிக்க அதிகாரிகளைப் பொறுத்தவரை சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த விமானம் பஞ்சாபில் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால் நாடு கடத்தப்பட்டவர்களில் அதிகமானோர் பஞ்சாபை சேர்ந்தவர்கள் என்பதால் விமானம் அங்கே தரையிறக்கப்பட்டது. நாடு திரும்பியவர்களில் யார் யார் எந்தெந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான முழுமையான தகவல்கள் கிடைக்கவிலை.
செப்டம்பரில் நிறைவடைந்த அமெரிக்காவின் 2024ஆம் நிதியாண்டில், ஆயிரம் இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் துணைச் செயலாளர் ராய்ஸ் பெர்ன்ஸ்டைன் முர்ரே தெரிவித்தார்.
“அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருக்கும் இந்தியர்களை வெளியேற்றும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. மெக்சிகோ, கனடா வழியாக சட்டவிரோத வழிகளில் நாட்டிற்குள் நுழைய முற்படும்போது அதிகாரிகளால் இவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதும் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக,” முர்ரே கூறுகிறார்.
ஒரே ஆண்டில் 10 லட்சம் குடியேறிகளை அமெரிக்கா வெளியேற்றுவது சாத்தியமா? டிரம்ப் முன்னுள்ள சவால் என்ன?
அமெரிக்க பொருளாதாரத்தில் குடியேறிகளின் பங்கு என்ன? அவர்கள் இல்லையென்றால் என்ன ஆகும்?
உலக அகதிகள் தினம்: அகதிகள், புலம் பெயர்ந்தோர், குடியேறிகள், தஞ்சம் கோரிகள் என்ன வேறுபாடு?
அமெரிக்காவில் இருந்து அதிக அளவில் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதோடு, வரலாற்றிலேயே, புலம் பெயர்ந்தவர்களை அதிகளவில், நாடு கடத்த டிரம்ப் உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில், டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் எப்படி அவர்களைப் பாதிக்கும் என்ற கவலை அதிகரித்து வருகிறது.
அக்டோபர் 2020இல் இருந்து 1,80,000 இந்தியர்களை வடக்கு மற்றும் தெற்கு எல்லையில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வர முயன்றபோது அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
“தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளைவிட இந்தியர்கள் குறைந்த அளவில் இருக்கின்றனர். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில், மேற்கத்திய நாடுகளைச் சாராமல் அமெரிக்காவில் நுழைய முயன்று, எல்லைப் பாதுகாப்புத் துறையினரால் தடுத்த நிறுத்தப்பட்ட, பெரிய குழுவினராக இந்தியர்கள் உள்ளனர்” என்று வாஷிங்டனை சேர்ந்த சிந்தனைக் குழுவான நிஸ்கனேன் மையத்தின் புலம்பெயர் ஆய்வாளர்களான கில் குவேரா, சினேகா புரி ஆகியோர் தெரிவித்தனர்.
பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில், 2022ஆம் ஆண்டு தகவல்களின்படி, 7,25,000 இந்தியர்கள் சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவில் இருந்துள்ளது தெரிய வந்தது. மெக்சிகோ மற்றும் எல் சால்வடோரை தொடர்ந்து அமெரிக்காவில் அதிகளவில் புலம்பெயரும் மூன்றாவது நாட்டினராக இந்தியர்கள் உள்ளனர். அமெரிக்காவின் மக்கள் தொகையில் 3% ஆகவும், வெளிநாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கையில் 22% ஆகவும் அங்கீகரிக்கப்படாத முறையில் புலம் பெயர்ந்தவர் இருப்பதாக அந்தத் தரவுகள் கூறுகின்றன.
இந்தத் தரவுகளைக் கொண்டு குவேரா, புரி ஆகியோர், இந்தியர்கள் சட்டவிரோதமாகப் புலம்பெயரும் நிகழ்வு அதிகரித்திருக்கிறது என்பதை அறிய முடிவதாகத் தெரிவித்தனர்.
அதிகமாக அமெரிக்காவுக்குள் நுழைய முற்படும் இந்திய ஆண்கள்
, மெக்சிகோ மற்றும் எல் சால்வடோரை தொடர்ந்து அமெரிக்காவில் அதிகளவில் புலம் பெயரும் மூன்றாவது நாட்டினராக இந்தியர்கள் உள்ளனர்.
இதில் ஒரு முக்கியமான காரணத்தை அவர்கள் பட்டியலிடுகின்றனர். அதில் முதலாவது, இவர்கள் யாரும் குறைவான வருவாயைக் கொண்ட பிரிவினர் இல்லை. ஆனால் குறைவான கல்வித் தகுதி அல்லது ஆங்கிலத்தில் பேச முடியாமல் போகும் காரணங்களால் அவர்களால் சுற்றுலா விசா அல்லது மாணவர் விசாக்களை பெற இயலவில்லை.
இதற்குப் பதிலாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்தியா மதிப்பில் சுமார் 84 லட்சம்) பணம் செலுத்தி எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் அல்லாத இடங்கள் வழியாக, மிக நீண்ட கடினமான பாதைகளில் இவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இதற்காக மக்கள் தங்கள் நிலங்களை விற்றோ அல்லது கடன் வாங்கியோ இங்கு வர முற்படுகிறார்கள். அமெரிக்காவில் புலம் பெயர்ந்தவர்களுக்கான நீதிமன்றத் தகவல்களின்படி 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து வந்த புலம்பெயர்ந்தவர்களில் அதிகமானோர் 18 முதல் 34 வயது வரை இருக்கும் ஆண்கள்தான் என்று தெரிவித்துள்ளது.
இரண்டாவதாக, இந்தியர்களுக்கு கனடா வழியாக அமெரிக்காவுக்குள் வருவது மிகவும் எளிதானதாக உள்ளது. ஏனென்றால் இந்தியர்களுக்கான விசிட்டர் விசா வழங்குவதற்கான கால அளவு வெறும் 76 நாட்கள் மட்டுமே (அமெரிக்காவில் விசா வழங்க ஓராண்டுக் காலம் வரை ஆகலாம்).
வெர்மான்ட் மாகாணம் மற்றும் நியூயார்க், நியூ ஹேம்ப்ஷயர் ஆகிய மாகாணங்களில் உள்ள சில மாவட்டங்களை உள்ளடக்கிய ஸ்வான்டன் செக்டார் வழியாக, இந்த ஆண்டு ஜூனில் மட்டும் 2,715 இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக இந்தியர்கள் எல் சால்வடோர் அல்லது நிகரகுவா வழியாக மெக்சிகோவிற்கு வந்து, அங்கிருந்து தெற்கு எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் வரை இந்தியர்கள் விசா இல்லாமலே எல் சால்வடோ்ருக்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மக்களின் எண்ணிக்கையே அதிகம்
சமீபத்திய ஆய்வு முடிவுகள் 18 - 35 வயதில் இருக்கும் இந்திய ஆண்களே அதிக அளவில் அமெரிக்காவுக்குள் சட்டத்திற்குப் புறம்பாக நுழைய முற்படுவதாகக் கூறுகின்றன.
“அமெரிக்கா- மெக்சிகோ எல்லையைவிட அமெரிக்கா- கனடா எல்லையில் பாதுகாப்பு குறைவாகவே இருக்கும். இந்தப் பாதை நிச்சயம் பாதுகாப்பாக இருக்குமா என்பது உறுதியில்லை என்றாலும், தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் இருப்பதைப் போன்று இந்தப் பாதையில் குற்றவாளிக் குழுக்கள் செயல்படுவதில்லை," என்று குவேராவும் புரியும் கூறுகின்றனர்.
மூன்றாவதாக, சீக்கிய மதத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா போன்றவற்றில் இருந்துதான் அதிகளவில் மக்கள் புலம்பெயர்கின்றனர்.
அங்கு உள்ளவர்கள் பல காலங்களாகக் கடல் கடந்து புலம்பெயர்ந்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோதியின் மாநிலமான குஜராத்தில் இருந்தும் மக்கள் வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக அதிக அளவில் புலம்பெயர்கிறார்கள். வேலையின்மை, விவசாய இழப்புகள், பிரச்னைக்குரிய போதைப் பொருள் விவகாரங்கள் ஆகிய சவால்களை அந்த மாநிலம் எதிர்கொண்டு வருகிறது.
கடல் கடந்து புலம்பெயர்வது, பஞ்சாபில் உள்ளவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்கு ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.
சமீபத்தில் 120 பேரைக் கொண்டு நவ்ஜோத் கௌர், ககன்பிரீத் கௌர், லாவ்ஜித் கௌர் ஆகியோர் நடத்திய ஆய்வில் வெளிநாடு செல்பவர்களில் 56%, 18 முதல் 28 வயதில், இடைநிலைக் கல்வித் தகுதியுடன் புலம் பெயர்வது தெரிய வந்துள்ளது. இதற்குத் தேவைப்படும் நிதியைத் திரட்ட அமைப்பு சாராக் கடன்களைப் பெற்று, பிறகு அங்கு சென்று வீட்டிற்குப் பணம் அனுப்புகின்றனர்.
காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம், தங்களுக்கென்று தனி நாடு கேட்டுப் போராடுவது பதற்றத்தை அதிகரித்துள்ளது. "இது இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் தாங்கள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுவதாக அவர்கள் அஞ்சுகின்றனர். இந்தக் கூற்று உண்மையோ, பொய்யோ, ஆனால் அவர்கள் தஞ்சம் கோரி வெளிநாடு செல்வதற்கு இந்த அச்சம் ஒரு காரணமாக உள்ளது," என்கிறார் புரி.
குடும்பங்களாகப் புலம் பெயரும் இந்தியர்கள்
சீக்கிய மதத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா போன்ற இடங்களில் இருந்துதான் அதிகளவிலான மக்கள் புலம்பெயர்கின்றனர்.
ஆனால் புலம்பெயர்வதற்கான துல்லியமான காரணத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலான ஒன்று.
“பல்வேறு காரணங்களுக்காகச் சென்றாலும், நல்ல வருமானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புதான் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. அதேவேளையில், தங்கள் உறவினர் அமெரிக்காவில் இருப்பதாகச் சொல்லப்படுவதில் ஏற்படும் பெருமைக்காகவும் சிலர் இதைச் செய்கின்றனர்,” என்கிறார் புரி.
பலர் குடும்பங்களாக எல்லை தாண்ட முயல்கின்றனர். 2021ஆம் ஆண்டு தனிப்பட்ட நபர்கள் அதிகளவில் இரண்டு எல்லைகளிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இப்போது 16- 18% பேர் குடும்பத்துடன் தடுக்கப்பட்டுள்ளனர்.
இது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். 2022ஆம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த 11 பேரைக் கொண்ட ஒரு குடும்பத்தில் நால்வர் கனடிய எல்லையில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல முற்பட்டபோது, எல்லைக்கு வெறும் 12 மீட்டர்களே இருந்தபோது, கடும்பனியில் உறைந்து இறந்து போனார்கள்.
வெர்மான்ட் பல்கலைக்கழகத்தின் புலம்பெயர் மற்றும் நகர்ப்புற ஆய்வுகள் குறித்த அறிஞரான பாப்லோ போஸ், “அமெரிக்காவில் இருக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளே பெரும்பாலான இந்தியர்கள் அங்கு செல்ல முற்படுவதற்கு முக்கியக் காரணம்" என்கிறார்.
மேலும், "அந்த நகரங்களில் முறைசாரா பொருளாதாரத்தில் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, குறிப்பாக நியூ யார்க், பாஸ்டன் போன்ற பெரிய நகரங்களில் இது பெருமளவில் உள்ளது,” என்றார்.
கனடிய எல்லையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்
இந்தியர்கள் அமெரிக்க கனவை துரத்திச் செல்வது ஏன்?
படக்குறிப்பு, கடந்த 2022ஆம் ஆண்டு, 11 பேரைக் கொண்ட ஒரு குடும்பத்தில் நால்வர் கனடிய எல்லையில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல முற்பட்டபோது, கடும்பனியில் உறைந்து இறந்து போனார்கள்.
இந்தியர்கள், வெர்மான்ட் மற்றும் அப்ஸ்டேட் நியூயார்க் ஆகிய பகுதிகளில் வசிப்பதில்லை என்பதைத் தான் மேற்கொண்ட நேர்காணல்களின் வாயிலாகத் தெரிந்துகொண்டதாகக் கூறுகிறார் போஸ்.
அவர்கள், எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு விரைவாக வேறு நகரங்களுக்குச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார். இப்படிச் செல்பவர்கள் வீட்டு வேலை, உணவக வேலை போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
இது கூடிய விரைவில் இன்னும் கடினமாகப் போகிறது.
புலம்பெயர்தல் துறையின் மூத்த அதிகாரி டாம் ஹோமன் வரும் ஜனவரி மாதம் டிரம்பின் ஆட்சியில் எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பார்.
“வடக்கே அமெரிக்காவின் கனடாவுடன் பகிர்ந்துகொள்ளும் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு அதிகரிக்கப்படும். ஏனென்றால் அந்த வழியாகத்தான் அதிகளவில் சட்டவிரோதமான புலம்பெயர்தல் நடைபெறுகிறது. இது நாட்டிற்குப் பெரிய பாதுகாப்பு பிரச்னையாகும்,” என்று தெரிவித்தார் டாம்.
“இதைத் தொடர்ந்து கனடாவும் தனது எல்லை வழியாக அமெரிக்காவிற்கு சட்டவிரோதமான முறைகளில் உள்நுழைவதைத் தடுக்க கட்டுபாடுகளை விதிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படி நடந்தால் இந்தியர்கள் எல்லைகளில் தடுத்து நிறுத்தப்படுவது குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது,” என்று புரி கூறுகிறார்.
எது எப்படியிருப்பினும், அமெரிக்கா சென்று நல்லதொரு வாழ்வை வாழ வேண்டுமென்ற கனவு மக்களிடம் சிறிதும் குறையவில்லை. அந்தக் கனவை அடைவதற்கான பாதை எவ்வளவு கடினமாக இருந்தலும், அடைந்தே தீர வேண்டுமென்ற உறுதியுடன் அவர்கள் இருக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக