வியாழன், 28 நவம்பர், 2024

1970 களில் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய விஷ ஊசி கொலைகள் - பணம் பறித்த கும்பல் சிக்கியது எப்படி?

 BBC News தமிழ்  -முரளிதரன் காசிவிஸ்வநாதன்   : விஷ ஊசி கொலைகள்: ஹவாலா, கருப்புப் பண முதலைகளை கொன்று பணம் பறித்த கும்பல் சிக்கியது எப்படி?
 ராமநாதபுரம் சிறுவயல் பகுதியைச் சேர்ந்த வடிவேலன் செட்டியார், சென்னையில் உள்ள 'ஹோட்டல் - து - பிராட்வே'வில் தங்கியிருந்தார்
சென்னையில் 1970களின்போது அதிக பணம் வைத்திருந்த பலரும் ஊசி போட்டுக் கொல்லப்பட்டு, அவர்களிடமிருந்து பணமும் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன.
'விஷ ஊசி கொலைகள்' என்று அழைக்கப்பட்ட இந்தக் கொலைகளைச் செய்த ஆசாமிகள் யார், அவர்கள் என்ன ஆனார்கள்?
தமிழகத்தை அதிர வைத்த ஒரு கொலை வழக்கின் வரலாறு.


போலி ஐ.பி.எஸ். அதிகாரியாகவோ, சி.பி.ஐ அதிகாரிகளாகவோ நடித்து பணம் பறிக்கும் நபர்கள் கைதாகும் தகவல்கள் இப்போதும் ஊடகங்களில் வெளியாகின்றன. அதிகாரிகள் என்று சொல்லி இந்த காலகட்டத்திலேயே பலரை ஏமாற்ற முடிகிறது என்றால், 50 ஆண்டுகளுக்கு முன்பு கேட்கவும் வேண்டுமா?

ஆனால், 1970களில் இப்படி ஏமாந்தவர்கள் பணத்தை இழந்ததோடு, கொடூரமாக கொல்லவும்பட்டனர். இவர்களைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட முறைதான், தமிழ்நாட்டை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சுங்கத்துறை அதிகாரி வேடத்தில் வந்த கொலையாளிகள்

 நினைவு திரும்பாமலேயே இரண்டு நாட்களுக்குப் பிறகு இறந்துபோனார் செட்டியார்.

கடந்த 1970ஆம் ஆண்டு அக்டோபர் மாதம். ராமநாதபுரம் சிறுவயல் பகுதியைச் சேர்ந்த வடிவேலன் செட்டியார், சென்னையில் உள்ள 'ஹோட்டல் - து - பிராட்வே'வில் தங்கியிருந்தார். அவர் கைவசம் சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் இருந்தது.

அந்த காலகட்டத்தில் ஒன்றரை லட்சம் என்பது மிகப் பெரிய தொகை. ஆனால், அது அன்னியச் செலாவணி சட்டத்தை மீறி சம்பாதித்த பணம். பணத்தோடு பத்திரமாக ஊருக்குக் கிளம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் செட்டியார்.

அந்த நேரத்தில் திடீரென சுங்கத் துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு சிலர் அவரது அறைக்குள் புகுந்தனர். அன்னியச் செலாவணி மோசடி தொடர்பாக அவரை விசாரிக்க வேண்டுமெனக் கூறி, ஹோட்டல் வாசலில் நின்றுகொண்டிருந்த காரில் ஏற்றினர்.

செல்லும் வழியில், சில மாத்திரைகளைத் தந்து வலுக்கட்டாயமாக செட்டியாரைச் சாப்பிடச் சொன்னார்கள். பிறகு அவரிடமிருந்து ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை எழுதி வாங்கினார்கள். சிறிது நேரத்தில் செட்டியார் மயங்கிவிட அவரிடமிருந்த பணம், கைக்கடிகாரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, செங்கல்பட்டு அருகில் ஒரு கிராமத்தில் அவரை வீசிவிட்டுச் சென்றனர்.

மயங்கிக் கிடந்த அவரை அடுத்த நாள் காலையில்தான் சிலர் பார்த்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நினைவு திரும்பாமலேயே இரண்டு நாட்களுக்குப் பிறகு இறந்துபோனார் செட்டியார்.

செங்கல்பட்டு காவல்துறை இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து, இறந்தவரை அடையாளம் காணும் பணிகளைத் தொடங்கியது. சட்டைக் காலரில் இருந்த லேபிளை வைத்து, சில நாட்களிலேயே இறந்தவர் வடிவேலன் செட்டியார் என அடையாளம் காணப்பட்டார். ஆனால், இதைச் செய்தவர்கள் யார், எப்படிச் செய்தார்கள் என்பது தெரியவில்லை.

படக்குறிப்பு, செங்கல்பட்டு காவல்துறை வழக்குப் பதிவுசெய்து, இறந்தவரை அடையாளம் காணும் பணிகளைத் தொங்கியது. ஆனால், இதை யார், எப்படிச் செய்தார்கள் எனக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

விஷ ஊசி கும்பல் உருவானது எப்படி?
டி.வி. வைத்தீஸ்வரன் ஒரு நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். மருந்தாளுனர் படிப்பை முடித்தவர். சில மருந்துகளைத் தயாரிக்கவும் தெரியும். சென்னை ஜார்ஜ் டவுனில் ஒரு மருந்துக் கடையையும் நடத்தி வந்தார். அத்தோடு, பெத்தடினுக்கு அடிமையான சில சினிமா நடிகர்களுக்கு அவற்றை விற்பதிலும் அவருக்கு நல்ல பணம் கிடைத்து வந்தது.

இந்த நிலையில், தாவூத் என்பவரின் பழக்கம் வைத்தீஸ்வரனுக்குக் கிடைத்தது. தாவூத் கடத்தல் பொருட்களை விற்று வந்தார். ஒரு தருணத்தில் வைத்தீஸ்வரனுக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. அப்போது தாவூத் ஒரு யோசனையைச் சொன்னார்.

அதாவது, கணக்கில் வராத கறுப்புப் பணம், தங்கம் வைத்திருப்பவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் என்ற போர்வையில் அணுகி, அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கலாம் என்றார். அது கறுப்புப் பணம் என்பதால் யாரும் புகார் சொல்ல முன்வர மாட்டார்கள் என்றார் தாவூத்.

இது வைத்தீஸ்வரனுக்கு நல்ல யோசனையாகப்பட்டது. கூடுதலாக சில ஆட்கள் இருந்தால் நல்லது என்று தோன்றியது. உடனே, தன் நண்பர்களான பார்த்தசாரதி, வேணுகோபால், அயூப்கான் ஆகியோரிடம் இந்தத் திட்டத்தைச் சொல்லி, ஒப்புக்கொள்ள வைத்தார் வைத்தீஸ்வரன். இதில் அயூப் கானுக்கு ஹோட்டல் - து - பிராட்வேவில் ரூம் பாயாக வேலை பார்த்து வந்த ஜாஃபருல்லா என்பவரோடு பழக்கம் இருந்தது.

அந்த ஹோட்டலில் சந்தேகத்திற்கிடமான வகையில் தங்குபவர்கள், பணம், தங்கத்துடன் தங்குபவர்களைப் பற்றிய தகவலை தன்னிடம் சொன்னால் நல்ல பணம் கிடைக்கும் என்றார் தாவூத். அதற்கு ஜாஃபருல்லா ஒப்புக்கொண்டார். அதே ஹோட்டலில் வேலை பார்த்து வந்த மஜீத் என்ற இன்னொருவரும் இவர்களோடு சேர்ந்துகொண்டார்.

அடுத்த சில ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டையே நடுங்க வைத்த அந்த ஏழு பேர் கும்பல் இப்படித்தான் உருவானது. இந்தக் கும்பலிடம் சிக்கிய முதல் நபர்தான் வடிவேல் செட்டியார்.

சுங்கத்துறை அதிகாரிகள் கையில் சிக்கிய ஒப்புதல் வாக்குமூலம்

 அளவுக்கு அதிகமாக பெத்தடின் ஏற்றப்பட்டதால் சிறிது நேரத்திலேயே நினைவிழந்தார் சாகுல் ஹமீது
அவர்களுக்கான அடுத்த இரை சில மாதங்களுக்குப் பிறகு சிக்கியது. அதாவது 1971 மார்ச் மாதத்தில் மலேசியாவை சேர்ந்த சாகுல் ஹமீது தன் உறவினர்களைப் பார்க்க சென்னைக்கு வந்திருந்தார்.

அவர் கைவசம் 55,000 ரூபாய் இருந்தது. விதி அவரை ஹோட்டல் - து - பிராட்வேவுக்குக் கொண்டு போய் சேர்த்தது. இவரை அடையாளம் கண்ட கும்பல், முன்பைப் போலவே மிரட்டி காரில் ஏற்றி இன்னொரு ஹோட்டலுக்கு கொண்டு போனார்கள்.

அவரிடமிருந்து உண்மையை வரவழைக்க, தங்களிடம் மருந்து இருப்பதாகவும் அதை அவருக்கு ஏற்றப் போவதாகவும் கூறி, பெத்தடினை ஊசி மூலம் சாகுல் ஹமீதுக்கு ஏற்றினர். அளவுக்கு அதிகமாக பெத்தடின் ஏற்றப்பட்டதால் சிறிது நேரத்திலேயே நினைவிழந்தார் சாகுல் ஹமீது. பிறகு அவரை ஒரு காரில் ஏற்றி சித்தூருக்குக் கொண்டு போனார்கள்.

அங்கே ஒரு ஆளில்லாத சாலையில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கவிட்டனர். அவரது கடிகாரம், பணத்தை எடுத்துக்கொண்டு அந்தக் கும்பல் அங்கிருந்து புறப்பட்டது.

முதல் முறை அடக்கி வாசித்தவர்கள் இந்த முறை சற்று படாடோபமாக செலவழித்தனர். இந்தக் கும்பலைச் சேர்ந்த வேணுகோபாலுக்கு தட்சிணாமூர்த்தி என்று ஒரு நண்பர் இருந்தார். அவர் சுங்கத்துறையில் ஆள் காட்டியாகச் செயல்பட்டு வந்தார்.

வேணுகோபால் திடீரென ஏகப்பட்ட பணத்தைச் செலவழிக்கவும், அவர் தங்கக் கடத்தலில் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகம் தட்சிணாமூர்த்திக்கு வந்தது. உடனடியாக சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார் அவர்.

சுங்கத்துறை அதிகாரிகள் வேணுகோபாலின் வீட்டை சல்லடையாகச் சலித்த போதும் தங்கம் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், வடிவேலன் செட்டியாரிடம் எழுதி வாங்கிய ஒப்புதல் வாக்குமூலம் அவர்கள் கையில் சிக்கியது. ஆனால், பெரிதாக அவர்களால் அந்தத் தருணத்தில் நடந்த சம்பவங்களை இணைத்துப் பார்க்க முடியவில்லை.

நண்பனையும் விஷ ஊசி போட்டு, எரித்துக் கொன்ற வேணுகோபால்

புகாரி தம்பியின் உடலை நிர்வாணமாக சித்தூருக்கு அருகில் தூக்கி வீசினர்.

ஆனால், தன்னை சுங்கத்துறையில் தட்சிணாமூர்த்திதான் சிக்க வைத்தார் என்பது வேணுகோபாலுக்குப் புரிந்தது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் முன்பைப் போலவே பழகிய வேணுகோபால், நண்பர்களுடன் பெங்களூருக்கு இன்பச் சுற்றுலா போய் வரலாம் என்று அழைத்தார். காரை வைத்தீஸ்வரனும் பார்த்தசாரதியும் மாற்றி மாற்றி ஓட்ட பிற நண்பர்கள் இன்னொரு காரில் பின்னால் வந்தனர்.

கார் சித்தூரை நெருங்கியதும் தட்சிணாமூர்த்திக்கும் பெத்தடின் ஊசி போடப்பட்டது. மயங்கியவரை ஒரு ஆளில்லாத இடத்தில் இழுத்துப் போட்டு தீ வைத்துக் கொளுத்தினார்கள்.

இதற்கிடையில் தன் மகனைக் காணவில்லை என்று தட்சிணாமூர்த்தியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல்துறையினரின் தேடுதலில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்தச் சம்பவம் 1971 ஜூலையில் நடந்தது. இதற்கிடையில் கண்ணன் என்பவர் இவர்களது கூட்டணியில் இணைந்தார்.

இதற்குப் பிறகு, பிராட்வே ஹோட்டலில் இருந்து யாரும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஒரு கடத்தல்காரனிடம் வேலை பார்த்த காதர் என்பவருடைய பழக்கம் அயூப் கானுக்குக் கிடைத்தது. அவர் வெளிநாட்டில் இருப்பவர்களுக்காக ஹவாலா வேலைகளைச் செய்து வந்தார்.

அவர்களிடம், வேணுகோபாலையும் பார்த்தசாரதியையும் சுங்கத்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி வைத்த அயூப் கான், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய தகவலைக் கொடுத்தால், பரிசு வாங்கித் தருவதாகச் சொன்னார்.

அப்படி சிக்கியவர்தான் காயல்பட்டணத்தைச் சேர்ந்த புகாரி தம்பி. 55,000 ரூபாய் பணத்துடன் தாம்பரத்திலிருந்து ராமேஸ்வரம் ரயிலில் ஏற முயன்றவர், இந்தக் கும்பலால் வளைக்கப்பட்டார். அதே பாணியில் பெத்தடின் ஏற்றி கொல்லப்பட்டு, பணம் திருடப்பட்டது.

அவரது உடலை நிர்வாணமாக சித்தூருக்கு அருகில் தூக்கி வீசினர். இவரைக் காட்டிக் கொடுத்ததற்காக காதருக்கு 10,000 ரூபாய் 'ரிவார்ட்' கொடுக்கப்பட்டது.

கொலையாளிகளுக்கு முடிவுரை நெருங்கியது எப்படி?

 பெரிதாக துப்புத் துலங்காத நிலையில், வழக்கு 1973 ஜனவரியில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது

அடுத்த பலி, காயல்பட்டணத்தைச் சேர்ந்த சாதிக் இப்ராஹிம். இவரும் ஹவாலா வேலையில் ஈடுபட்டிருந்தவர்தான். காதர் இவரைக் காட்டிக்கொடுக்க, அறுபதாயிரம் ரூபாய் பணத்துடன் எழும்பூரில் பேருந்து ஏற முயன்றவரை 'சுங்கத்துறை' அதிகாரிகளாகச் சென்ற பார்த்தசாரதியும் வேணுகோபாலும் வளைத்துப் பிடித்தனர்.

அதே பாணியில் பெத்தடின் ஏற்றப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு சாதிக் இப்ராஹிம் கொல்லப்பட்டார். ஆந்திர மாநிலத்தில் ஒரு மலையடிவாரத்தில் ஆடைகளைக் கழற்றிவிட்டு உடலுக்குத் தீ வைத்தனர். காதருக்கு வழக்கம் போல ரிவார்ட் கிடைத்தது.

காதருக்கு முகமது தம்பி என்ற ஆள் காட்டி நபரைத் தெரியும். முகமது தம்பியிடம், கடத்தல்காரர்களைக் காட்டிக் கொடுத்தால் நல்ல பணம் கொடுப்பதாகச் சொன்னார் காதர். அதன்படி தைக்காத் தம்பி என்ற தங்கக் கடத்தல்காரர் குறித்த தகவலைச் சொன்னார் முகமது தம்பி. இந்த விஷ ஊசி கும்பலின் முடிவுரை இங்குதான் தொடங்கியது.

தைக்கா தம்பி காரைக்காலைச் சேர்ந்தவர். 1972 அக்டோபர் 24ஆம் தேதி பத்தாயிரம் ரூபாய் பணத்துடன் சென்னையில் ஒரு லாட்ஜில் வந்து தங்கினார். இவர் தங்கம் வாங்க பெங்களூருக்கு செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து இந்தக் கும்பலைச் சேர்ந்த கண்ணன் தைக்கா தம்பியை பின்தொடர, கும்பலைச் சேர்ந்த மற்றவர்கள் முன்பே காரில் பெங்களூர் போய்ச் சேர்ந்தனர். தனது வேலைகளை முடித்துக்கொண்டு தங்க பிஸ்கட்டுகளுடன் பஸ் ஏற முயன்ற தைக்கா தம்பியை வளைத்தனர் 'சுங்க அதிகாரிகள்'.

முன்பைப் போலவே கார் - பெத்தடின் ஊசி - கொலை - ஆந்திராவில் சடலத்தை வீசியெறிவது எல்லாம் நடந்தது. ஆனால், எதிர்பாராத ஒரு விஷயமும் நடந்தது.

தைக்கா தம்பி காணாமல் போனதையடுத்து அவரது உறவினர்கள் சென்னை ஏழு கிணறு காவல்துறையில் புகார் அளித்தனர். பெரிதாக துப்புத் துலங்காத நிலையில், வழக்கு 1973 ஜனவரியில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

'சுங்கத்துறை அதிகாரிகளை' காட்டிக்கொடுத்த முகமது தம்பி

 வழக்கின் விசாரணை 1974 ஜூனில் துவங்கியது. 263 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

விசாரணையைத் தீவிரப்படுத்திய சிபிசிஐடி, சில நாட்களாக அவருடனேயே திரிந்த முகமது தம்பியை பிடித்து விசாரித்தது.

முகமது தம்பி, 'சுங்க அதிகாரிகளை' காட்டிக் கொடுத்துவிட்டார். முதல் கைது வைத்தீஸ்வரன். அதற்கடுத்து பார்த்தசாரதி, தாவூத், கோபாலன், லட்சுமணன், அயூப் கான், கண்ணன், மஜீத் என வரிசையாகக் கைதானார்கள். வேணுகோபால் மட்டும் தப்பிச் சென்று கிருஷ்ணகிரி சார்பு நீதிபதி முன்பு சரணடைந்து, ஒப்புதல் வாக்குமூலமும் அளித்தார்.

இந்த விவகாரம் செய்தித்தாள்களில் வந்தவுடன், தமிழ்நாடே இதைப் பற்றித்தான் பேசியது. 'பெத்தடின் ஊசி', மக்களின் பேச்சில் விஷ ஊசியாக மாறியது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மலேசியா, இலங்கை எனப் பல இடங்களிலிருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. கைதான நபர்களிடமிருந்து ரூபாய் நோட்டுகள், தங்க பிஸ்கெட்டுகள், நகைகள், வெள்ளிப் பொருட்கள் என மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.

குற்றப் பத்திரிகை 1973 அக்டோபரில் தாக்கல் செய்யப்பட்டது. முன்பே பார்த்தபடி வேணுகோபால் அப்ரூவராகிவிட்டார். வழக்கின் விசாரணை 1974 ஜூனில் துவங்கியது. 263 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கை கூடுதல் அமர்வு நீதிபதி எஸ். விஜயரங்கம் விசாரித்தார்.

வைத்தீஸ்வரன், பார்த்தசாரதி, லக்ஷ்மணன், கண்ணன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தாவூத், அயூப்கான், மஜீத், கோபால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மேல் முறையீட்டில் தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. தாவூத், அயூப்கான் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை 7 வருட கடுங்காவல் தண்டனையாக மாற்றப்பட்டது. மஜீதுக்கு ஐந்து வருடமாகவும் கோபாலுக்கு 2 வருடங்களாகவும் தண்டனை குறைக்கப்பட்டது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குடியரசுத் தலைவருக்கு முறையீடு செய்தனர். அதில் பல ஆண்டுகளாக முடிவெடுக்கப்படாத நிலையில், டி.வி. வைத்தீஸ்வரன் உள்ளிட்ட நால்வரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் விசாரித்த நீதியரசர் ஓ. சின்னப்பரெட்டி தலைமையிலான அமர்வு, தூக்கு தண்டனை குறித்து முடிவு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டதால் அவர்களது மனுவை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது விரைவில் முடிவெடுக்கப்படாவிட்டால், அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழும்போதெல்லாம் இந்த வழக்கு மேற்கொள் காட்டப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

கருத்துகள் இல்லை: