புதன், 9 அக்டோபர், 2024

சாம்சங் தொழிலாளர்கள் கைது: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

 dinamani.com  :  சாம்சங் விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளா்கள்,  ஊதிய உயர்வு, தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.


அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அமைச்சா்கள் டி.ஆா்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோா் அடங்கிய குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைத்தாா்.

இந்தக் குழுவினா் சாம்சங் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கம் அமைப்பதைத் தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சாம்சங் இந்தியா சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல்துறை இன்று அதிரடியாகக் கைது செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,

'தொழிற்சங்கத்தை பதிவு செய்ய சிஐடியூ சங்கம் கடிதம் அளித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாம்சங் நிறுவனம் கடிதம் அனுப்பியது. நீதிமன்றத்தில் உள்ள இந்த விவகாரத்தில், நீதிமன்றம் என்ன முடிவு கூறினாலும் அதனை அரசு செயல்படுத்தும்.

அரசியல் கட்சிகள் அனுமதியின்றி போராடினால் எப்போதும்போல காவல்துறை கைது செய்து, பின்னர் விடுவிப்பது வாடிக்கையானது. அதேபோலதான் காவல்துறையினருடன் மோதலில் ஈடுட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தொழிலாளர்கள் மீது எந்த அடக்குமுறையும் இல்லை. அவர்களை விரோதமாகவும் பார்க்கவில்லை. பேச்சுவார்த்தை மூலமாக இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர அரசு தயாராக உள்ளது.

சிஐடியூ தொழிற்சங்கத்தை அரசு அங்கீகரிக்காது என எப்போதும் சொல்லவில்லை. அப்பகுதியில் இயங்கும் பல தொழிற்சாலைகளில் இந்த சங்கத்தை அரசு அங்கீகரித்துள்ளது.

இவ்விவகாரத்தில் சாம்சங் நிறுவனம், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அரசு தற்போது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

தொழிலாளர்களின் பல கோரிக்கைகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, போராட்டத்தைக் கைவிட வேண்டும்' என்றார்.

கருத்துகள் இல்லை: