Kavitha Bharathy : தமிழ்த்திரையுலகைப் புரட்டிப் போட்ட அன்னக்கிளி திரைப்படம் வெளியானது..
அன்னக்கிளி படத்தின் கதாசிரியர் ஆர்.செல்வராஜ் இதுவரைக்கும் நூறு படங்களுக்கும் மேல் எழுதியிருக்கிறார்.. அன்னக்கிளி தொடங்கி அலைபாயுதே வரை அதில் பாதிக்கும் மேல் பெருவெற்றிப்படங்கள்.. ஏறக்குறைய ஐம்பதாண்டு காலத்தில் ஆர்.செல்வராஜ் இடத்தை எந்த இலக்கியவாதியும் நெருங்கவில்லை..
ஆனால் திறமையான திரை எழுத்தாளர்கள் என்று பட்டியலிட்டால் சுஜாதா, பாலகுமாரன் என்று சொல்வார்களே தவிர ஆர்.செல்வராஜ் பெயரைச் சொல்லமாட்டார்கள்..
சமகாலத்தின் வெற்றிப்பட எழுத்தாளர்கள் விஜி, பாஸ்கர் சக்தி, பொன்.பார்த்திபன், தமிழ்ப்பிரபா பெயர்களை திரை எழுத்தாளர்களாகக் குறிப்பிடாமல் இருட்டடிப்புச் செய்வார்கள்..
தமிழ்த்திரை பேசத்தொடங்கிய காலம் தொடங்கி அண்மையில் வெளியான லப்பர்பந்து வரைக்கும் எடுத்துப் பாருங்கள்..
அந்தந்தப் படத்தின் தன்மைக்கேற்ப நுட்பமாகவோ, கொண்டாட்டமாகவோ, நகைச்சுவையாகவோ மக்கள் மறக்காத நாலு வசனமிருக்கும்
இப்படி மக்களைச் சென்றடைந்த
கூறுள்ள ஒரு வரியைக்கூட ஜெயமோகன் திரைப்படத்தில் எழுதியதில்லை
ஆனால் அவருக்கு மாபெரும் நட்சத்திர எழுத்தாளராக ஒளிவட்டம் பூட்டுவார்கள்
தற்போது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை
திரை எழுத்து வேறு, இலக்கியவாதிகள் வேறு.. ஜெயமோகன், எஸ்.ரா போன்றவர்களுக்கு திரைப்பட எழுத்தின் சூட்சுமம் துளியும் கைவரப் பெற்றதில்லை..
நம் இயக்குநர்கள் இலக்கிய மயக்கத்திலும், ஆர்வத்திலும் மேற்படி நாவலாசிரியர்களை எழுத வைத்துத் தோற்கிறார்கள்.. அவர்கள் எழுதியதில் எதாவது ஒன்றிரண்டு காட்சிகளோ, வசனங்களோ பாராட்டப்பட்டிருக்கலாம்.. அது அந்தப்படத்தின் இயக்குநரோ, உதவி இயக்குநரோ எழுதியதேயன்றி அந்த சம்பாவான்கள் எழுதியவையல்ல..
இந்த இலக்கியவாதிகள் தாங்கள் எழுதும் பிரபலமில்லாத இயக்குநர்களின் படத்தையோ, இயக்குநர்களையோ உயர்த்திப் பேச மாட்டார்கள்..
பல லட்சங்களை சம்பளமாக வாங்கிக் கொள்வார்கள், அதில் நடித்த நட்சத்திர நடிகரோடு கிடைத்த நட்பை சிலாகிப்பார்கள்.. ஆனால் திரைப்படத்திற்கு எழுதுவதை தங்கள் தகுதிக்கு இழுக்கு போலவே நடந்துகொள்வார்கள்
எனவே இயக்குநர்களே,
பிரபலம் கருதி இலக்கியவாதிகளைத் தேடாமல்
பொருத்தமான எழுத்தாளர்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்..
அல்லது புதிய எழுத்தாளர்களை உருவாக்குங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக