மின்னம்பலம் - Selvam : ஜம்மு, காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (அக்டோபர் 8) வெளியாகியுள்ளது. இதில் ஜம்மு, காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
அதேவேளையில், பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஹரியானா காங்கிரஸ் வசம் செல்லும் என்று தேர்தலுக்கு பிந்தைய பல கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், அதற்கு நேர் எதிராக ஹரியானாவில் 48 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில், ஹரியானாவில் பாஜக சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றிருப்பதாகவும், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், “ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிர்பார்க்காத ஒன்று. கள யதார்த்தத்திற்கு நேர் எதிராக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. ஹரியானா மாநில மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு எதிராக தேர்தல் முடிவுகள் வந்திருக்கிறது. தேர்தல் முடிவுகளை நிச்சயமாக எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
மூன்று மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையில் நடந்த குளறுபடி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக, ஹரியானா மாநிலத்தில் உள்ள எங்களின் சீனியர் தலைவர்களிடம் பேசி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல்கள் அனைத்தையும் திரட்டி தேர்தல் ஆணையத்தில் நாளை அல்லது இன்னும் ஒரு சில தினங்களில், புகார் அளிக்க உள்ளோம்.
ஹரியானாவில் சூழ்ச்சி செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகத்திற்கு தோல்வி அளிக்கும் வகையிலும் மக்களின் நம்பிக்கையை தகர்க்கும் வகையிலும் அவர்களின் வெற்றியானது அமைந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக