ஞாயிறு, 20 அக்டோபர், 2024

ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை.. முன்னாள் ஊழியர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

 tamil.oneindia.com - Shyamsundar : கோவை: ஈஷா மீதான ஆட்கொணர்வு மனு வழக்குகள் நேற்று முடித்து வைக்கப்பட்டன. அதன்படி ஈஷா மீது உள்ள மற்ற வழக்குகளை விசாரிக்க தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விசாரணை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை.
இரு பெண்களும் தங்கள் சுய விருப்பத்தின்பேரில் ஈஷா மையத்தில் தங்கி இருப்பதால் அவர்களை மீட்டுத் தர சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
இந்த வழக்கின் பரபரப்பு அடங்கும் முன்பே.. ஈஷா யோகா மையம் அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளது.



ஆந்திராவின் ராஜமுந்திரியைச் சேர்ந்த ஈஷா அறக்கட்டளையின் முன்னாள் தன்னார்வத் தொண்டர்கள் ஈஷா குறித்து அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டு உள்ளனர். ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகள் பாலியல் ரீதியாக தாக்கப்படுவதாக, பயன்படுத்தப்படுவதாக, ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய தம்பதியான சத்ய நரேந்திர ரகானி மற்றும் யாமினி ரகானி ஆகியோர் இது தொடர்பாக குற்றம் சாட்டி உள்ளனர். அதில், ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். ஈஷா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.

ஈஷா அறக்கட்டளையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் எந்த முறையையும் பின்பற்றாமல் தன்னிச்சையாக நடத்தப்படுகிறது. ஈஷா ஹோம் ஸ்கூலில் (ஐஎஸ்ஹெச்) சிறுவன் ஒருவன் மூன்று ஆண்டுகளாக எங்கள் மகனை பாலியல் வன்கொடுமை செய்தார். எங்களின் ஆண் குழந்தை மற்றும் எங்களின் நண்பரின் பெண் குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகினர்.

இந்த பிரச்சினையை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, ​​அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. அதே பள்ளியில் எட்டு வயது சிறுமி, உடற்கல்வி ஆசிரியர் மூலம் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளானார். தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கான ஈஷா அறக்கட்டளையின் குழு உறுப்பினராக நாங்கள் செயல்பட்டு வந்தோம். அப்போதுதான் இது போன்ற கொடுமைகள் நடந்தன.

ஈஷா சமஸ்கிருதி பள்ளியின் பால் பிரம்மச்சாரினிகள் என்று அழைக்கப்படும் இளம்பெண்கள் சில சடங்குகளில் வெறும் மார்போடு உடையின்றி பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்கள் செய்யும் தவறுகளால் குழந்தைகள் இறந்தாலும் அந்த விஷயங்கள் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டன,

பள்ளியில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாலும், அவர்கள் வெளியே சொல்லாமல் அதை மறைத்தனர் . ஈஷா நிறுவனர், சத்குரு, தான் ஒரு அமைதியான பரந்த ஆத்மா என்றும், இரக்கத்தால் நிரம்பியவர் என்றும் கூறுவார். ஆனால் ஈஷா வித்யா மையம், ஈஷா சங்கத்ரி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து தெரிந்தும் அவர் மௌனம் காக்கிறார். ஜூன் 21, 2024 அன்று 12 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் இறந்ததும் கூட அங்கே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா பள்ளியில் வீட்டுப் பள்ளி ஆசிரியரால் எங்கள் மகள் பலமுறை கற்பழிக்கப்பட்டாள். எங்கள் மகள் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள் நாங்கள் ஜக்கி பாபாவை கடவுளாக நம்பினோம், முழு நம்பிக்கையுடன் சேவை செய்தோம். ஆனால் அவர் கொடுமை செய்கிறார், என்று அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய தம்பதியான சத்ய நரேந்திர ரகானி மற்றும் யாமினி ரகானி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: