ஞாயிறு, 20 அக்டோபர், 2024

தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநராக வி.கே.சிங் பெயர் தீவிரமாக பரிசீலனையில்

மின்னம்பலம் - Selvam :   தஞ்சை தமிழ் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு தமிழ்த் தாய் வாழ்த்து பாடிய வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அக்டோபர் 18 ஆம் தேதி  (நேற்று) சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் இந்தி மொழி விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது திராவிட நல் திருநாடு என்ற வரி தவிர்க்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட விழாவில் இவ்வாறு நடந்ததால், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் ஆளுநர்.’


முதல் குரலாக முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு எதிரான மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார். மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். பாஜக தவிர அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆளுநருக்கு எதிராகவே இருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 19) தஞ்சை தமிழ் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார் ஆளுநர். நேற்றைய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டிய உயர் கல்வித்  துறை அமைச்சர் கோவி செழியன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.  முதல்வரின் அறிவுறுத்தலின் பேரிலேயே அவர்கள் இந்த  முடிவை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகை வட்டாரங்களில்,  ‘ இந்த சர்ச்சையால் ஆளுநர் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்.  ஆளுநர் மாளிகையிடம் டெல்லி இதுகுறித்து விளக்கம் கேட்டிருக்கிறது.  ஒரு ஒட்டுமொத்த  மாநிலத்தின் சென்டிமென்ட்டுக்கு எதிராக ஆளுநர் பேசியிருப்பதால் இது தமிழ்நாட்டில்  பாஜகவுக்கு பலத்த பின்னடைவையே  ஏற்படுத்தும் என்று மத்திய உளவுப் பிரிவும் டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், ஆளுநர் டெல்லிக்கு அனுப்பிய ரிப்போர்ட்டில், ‘ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்வுகளில் எல்லாம் தமிழ்த் தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவை தவறாமல் பாடப்படுகிறது. இதற்காக இசைக் கல்லூரி மாணவர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.

அவர்கள் ஒரு முறைக்கு இருமுறை ரிகர்சல் பார்த்து அதன் பின் மிக கவனமாகவே அரங்கேற்றம் செய்கிறார்கள். ஆனால், தூர்தர்ஷன் நிகழ்வை ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்யவில்லை. அது தூர்தர்ஷன் அதிகாரிகள் ஏற்பாடு செய்த நிகழ்வு. ஆளுநர் அங்கே சிறப்பு விருந்தினராகத்தான் சென்றார். அங்கே தமிழ் தாய் வாழ்த்து,  தேசிய கீதம் பாட தொழில் முறை  இசைப் பாடகர்களை அழைக்காமல், தூர்தர்ஷன் ஊழியர்களை வைத்தே செய்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த தடங்கல் ஏற்பட்டது. இதில் ஆளுநரை அரசியல் பகடையாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அரசியலாக்குகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் தமிழ்நாடு, கேரளா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட நீண்ட காலமாக ஒரே ஆளுநரைப் பெற்றிருக்கும் மாநிலங்களில் ஆளுநரை மாற்றிட மத்திய அரசு ஏற்கனவே ஆலோசித்து வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநராக முன்னாள் ராணுவத் தளபதியும்,  மோடியின்  முந்தைய ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவருமான வி.கே.சிங் பெயர் தீவிரமாக பரிசீலனையில் இருக்கிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில்.

வி.கே.சிங் கடந்த 2024 தேர்தலில் போட்டியிடவில்லை. அவராகவே தான் போட்டியிடவில்லை என்பதை அறிவித்தார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்  பாஜக மேலிட இணைப் பொறுப்பாளராக செயல்பட்டவர் வி.கே.சிங். 2021 ஆம் ஆண்டில் இருந்தே தமிழ்நாட்டில் பல்வேறு  பாஜக கட்சி நிகழ்வுகளுக்குத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பவர் வி.கே.சிங்.

2023 ஆம் ஆண்டு மதுரையில் பாஜகவின் முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநில மாநாட்டில் கலந்துகொண்ட வி.கே.சிங், ‘தேசப்பற்றுள்ள முன்னாள் ராணுவத்தினர் அனைவரும் பாஜகவில் சேர வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார்.  மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு பொறுப்பாளராக பாஜக மேலிடத்தின் சார்பில் நியமிக்கப்பட்டார்.’

வேலூர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளராக வி.கே.சிங் பணியாற்றினார். அதனால் அவருக்கு தமிழ்நாட்டின் அரசியல் நிலவரமும் நன்கு தெரியும். இந்த நிலையில் போலீஸ் பின்னணி கொண்ட ஆர்.என்.ரவிக்கு பதிலாக  ராணுவ பின்னணி கொண்ட  வி.கே. சிங் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி வட்டாரங்களில் ஆலோசனை நடக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: