திங்கள், 21 அக்டோபர், 2024

அந்தரங்கங்களை கூறுபோட்டு விற்கும் யூ டியூபர்கள் .. இர்பான் வகையறாக்கள்

May be an image of 5 people, hospital and text

 LR Jagadheesan :  ஒருபக்கம் உங்கள் அந்தரங்கத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நீங்களே கூவிக்கூவி கூறுபோட்டு விற்று காசாக்குகிறீர்கள்.
மறுபக்கம் என் தனிப்பட்ட வாழ்வு பற்றி கருத்துசொல்லவோ விமர்சிக்கவோ அடுத்தவருக்கு உரிமை இல்லை என்கிறீர்கள். அது எப்படி எடுபடும்?
பொதுச்சந்தையில் உங்களை நீங்களே அதிக விலைக்கு விற்கத்தானே உங்கள் வாழ்வின் அந்தரங்கமான ஒவ்வொன்றையும் தினம் தினம் காட்சிப்படுத்துகிறீர்கள்?
உங்கள் வாழ்வை காட்சிச்சந்தையின் கடைச்சரக்காக்கி விற்றபின் அதன்மீது கருத்துசொல்லும்/விமர்சிக்கும் உரிமை உங்களுக்கேது?
அதை காட்சிச்சந்தையில் தம் கண்களால் வாங்கிய பார்வையாளர்கள் தானே அதன் உரிமையாளர்கள்? அவர்களை எப்படி நீங்கள் தடுக்கமுடியும்?


எது அந்தரங்கம்? ஒது ஒருவரின் தனிப்பட்ட வாழ்வு?  
என்று இதுவரை இருந்த எல்லா எல்லைக்கோடுகளையும் காசுக்காக நீங்கள் அழிப்பதும் மீறுவதும் உங்கள் உரிமையென்றால் காட்சிச்சந்தையின் முதலாளியான பார்வையாளர்கள் எது கருத்துச்சுதந்திரம்? எது அடுத்தவர் தனிப்பட்ட சொந்தவாழ்வு? அதில் எதுவரை ஒருவர் கருத்துசொல்லலாம்? அல்லது விமர்சிக்கலாம் என்கிற ஏற்கப்பட்ட சமூக நாகரீக எல்லைக்கோடுகளை ஏன் மதிக்கவேண்டும்; அவற்றையெல்லாம் அவர்கள் மீறக்கூடாது என்று எப்படி நீங்கள் வாதிட முடியும்? அல்லது எதிர்பார்க்கமுடியும்?
ஏற்கத்தக்க சமூகநாகரீக எல்லைக்கோடுகளை முதலில் அழித்தவர்கள் நீங்கள். அதை நீங்கள் சமூகத்தை முன்னேற்றவோ மூடத்தனத்தை எதிர்க்கவோ சமூகநீதிக்காவோ அல்லது பகுத்தறிவை பரப்பவோ செய்யவில்லை. முற்று முழுதாக காசுக்காக செய்தீர்கள். அப்புறம் அடுத்தவர் மட்டும் அந்த எல்லைக்கோடுகளை மதிக்கவேண்டும் என்பது எப்படி சரி? அதென்ன எனக்குவந்தா ரத்தம். அடுத்தவருக்கு வந்தால் தக்காளி sauce?
கட்டிய மனைவி முதல் வீட்டின் முதியோர்வரை ஒருவர் விடாமல் எல்லோரையும் content ஆக்கி காசுபார்த்தவர்கள் பிறந்த சிசுவின் தொப்புள்கொடியையும் காட்சிப்படுத்தி காசாக்க முனைந்தபின் அவற்றையெல்லாம் காட்சிச்சந்தையில் தங்களின் கண்களால் வாங்கிய வாடிக்கையாளர்கள் comment செய்யக்கூடாது என்றால் எப்படி? உங்களைப்பொறுத்தவரை அதிக comments, அதிக  காசுதானே? Be happy

கருத்துகள் இல்லை: