திங்கள், 21 அக்டோபர், 2024

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா Vs சத்யன் மோக்கேரி Vs நவ்யா.

 மின்னம்பலம் -Selvam : வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக இன்று (அக்டோபர் 19) அறிவிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி போட்டியிட்டார். மேலும், அவர் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார்.


இந்த இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால், அவர் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால், ராகுல் காந்தி வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில், வயநாடு தொகுதியில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. வாக்கு எண்ணிக்கையானது நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ராகுல் காந்தி ராஜினாமா செய்தபோதே, வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது.

இதனால், பிரியங்கா காந்தியை எதிர்த்து களமிறங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சத்யன் மோக்கேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக இன்று அறிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2007-ஆம் ஆண்டு நவ்யா ஹரிதாஸ் மெக்கானிக்கல் இன்ஜினியர் பட்டம் பெற்றார். இவர் ஏற்கனவே கோழிக்கோடு மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்துள்ளார். தற்போது கேரள பாஜக மகளிரணி பொதுச்செயலாளராக இருக்கிறார்.
செல்வம்

கருத்துகள் இல்லை: