வியாழன், 15 ஆகஸ்ட், 2024

கலைஞர் உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழா! ராஜ்நாத் சிங் . அண்ணாமலை பங்கேற்கிறார்கள்

 tamil.oneindia.com -  சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞர்  உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழாவில் தான் பங்கேற்க இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த விழாவுக்கு வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தன்னை அழைத்ததாக அண்ணாமலை கூறி உள்ளார்.
வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி கலைஞர்  நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர்  நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.
இந்த நிகழ்வில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



கலைஞர்  உருவம் பொறித்த நாணயம்: தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்து மறைந்த கலைஞர்  நூற்றாண்டு விழா அரசு சார்பிலும், திமுக சார்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கலைஞர்  நூற்றாண்டை முன்னிட்டு, பல்வேறு திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், கலைஞர்  நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்து, கடந்த ஜூன் 12 12 ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிட்டது. இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.

அனைவருக்கும் அழைப்பு: இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜிகே வாசன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட உள்ளதால் இந்த நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினே, அண்ணாமலையை போனில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்திருக்கிறாராம்.

முதல்வரே போன் செய்து அழைப்பு: இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலமாக என்னை அழைத்திருந்தார்.
 நமது முன்னாள் முதல்வர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நாணயம் வெளியீட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.

முதல்வர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அன்போடு அழைத்தார். அலுவலகத்திற்கும் அழைப்பிதழ் கொடுத்து அனுப்பி உள்ளார். முதல்வரின் அன்பான அழைப்பை ஏற்று தமிழக பாஜக சார்பில் நானும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் கலந்து கொள்கிறோம். மத்திய அரசு இந்த நாணயத்துக்கு அனுமதி கொடுத்திருப்பதை தமிழகத்துக்கு கிடைத்த பெருமையாகவும், கலைஞருக்கு கிடைத்த பெருமையாகவும் நான் பார்க்கிறேன்.
எடப்பாடி, அண்ணாமலைக்கும் திமுக அரசு அழைப்பு.. ஆகஸ்ட் 18ஆம் தேதி வர்றாங்களா? பெரும் எதிர்பார்ப்பு!

நான் கண்டிப்பாக பங்கேற்பேன் - அண்ணாமலை: எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள், சித்தாந்த ரீதியாக, கட்சி அடிப்படையில் இருக்கலாம். அது வேறு. ஆனால் மாநிலத்தின் முதல்வராக ஐந்து முறை பொறுப்பில் இருந்தவர், தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல கட்டங்களில் உழைத்தவர். எனவே இந்த நிகழ்வில் தமிழக பாஜக கட்டாயம் பங்கேற்கும். எப்படி பெருந்தன்மையோடு ராஜ்நாத் சிங் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வருகிறாரோ, அதே பெருந்தன்மையை தமிழக அரசும் காட்டும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: