வியாழன், 15 ஆகஸ்ட், 2024

1000 ‘முதல்வர் மருந்தகங்கள்’ தமிழ்நாட்டில் முதற்கட்டமாக திறக்கப்படும்

 கலைஞர் செய்திகள் Chennamani : நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்று (15.08.2024) தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
விடுதலை திருநாள் நிகழ்வில், சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்தியிருக்கக் கூடிய நம்முடைய முதலமைச்சர் அறிவித்திருக்கக்கூடிய மிக முக்கியமான அறிவிப்புக்களில் ஒன்று
“முதல்வர் மருந்தகம்” என்கின்ற பெயரில் தமிழ்நாட்டில் மருந்தாளுநர்கள் பயன்பெறத்தக்க அளவில், கூட்டுறவு அமைப்புகள் பயன்பெறத்தக்க அளவில்,
1000 மருந்தகங்கள் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக திறக்கப்படும்.



குறிப்பாக, நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்று இருக்கக்கூடிய நோய்களால் பாதிக்கப்படக்கூடிய பொதுமக்கள் அவற்றிற்கு உரிய மருந்துகளை பெறுவதில் அதிகளவில் அவர்களுக்கு பணச் செலவு ஏற்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு, அவர்களின் சுமையைக் குறைக்கக்கூடிய வகையில், மிகக்குறைந்த விலையில், அந்த மருந்துகள் பொதுப்பெயர் வகையில் அதாவது ஜென்ரிக் மருந்துகள் என்கின்ற வகையில் பிராண்டடாக இல்லாமல் ஜென்ரிக் மருந்துகள் என்கின்ற வகையில் அந்த மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதில் உறுதி செய்யக்கூடிய வகையில் இந்த மருந்தகங்கள் அமைப்பதற்கு அவர்கள் இன்றைக்கு அறிவிப்பினை செய்திருக்கிறார்கள்.

இது பொது மக்களுக்குப் பயன்படக்கூடிய அதேவேளையில் பலருக்கும் வேலை வாய்ப்பினை உருவாக்கக்கூடிய ஒரு மிகச்சிறந்த அறிவிப்பாக அமைந்திருக்கிறது.

அதுபோல, “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் அடிப்படையில் தாய்நாட்டிற்காக தங்களுடைய இளம் வயது முழுவதும் ராணுவச் சேவையில் கழித்து நம்முடைய நாட்டை காக்கக் கூடிய பணியில் ஈடுபட்டிருக்கக்கூடிய முன்னாள் படைவீரர்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யக்கூடிய வகையில், “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்கின்ற ஒரு புதிய திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்குவதற்காக ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலமாக கடனுதவி பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இந்தக் கடன் தொகையில் 30% அதற்கு மூலதன மானியமாக அதற்கு வழங்கப்படும்.

3 சதவீத வட்டி மானியமாக வழங்கப்படும் என்கின்ற சிறப்பான அறிவிப்பையும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் தொழிலை தொடங்குவதற்கு நம்முடைய முன்னாள் படைவீரர்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்குவதற்கும், அவர்களுக்கான மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதற்கும், உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், 400 முன்னாள் ராணுவ படைவீரர்கள் பயன்பெறத்தக்க வகையில், 400 கோடி ரூபாய் மதிப்பில், ஏறத்தாழ 120 கோடி ரூபாய் மூலதன மானியம்; அதைப்போல, மூன்று விழுக்காடு வட்டி மானியம் சேர்த்து இதற்கு வழங்கப்படும் என்பதையும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்கள்.

அதுபோல, தியாகிகளின் ஓய்வூதியம் வழங்குவதில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய் 20 ஆயிரத்திலிருந்து 21 ஆயிரம் ரூபாயாக வழங்கக்கூடிய சிறப்பான அறிவிப்பு.

விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கக்கூடிய மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 11 ஆயிரம் ரூபாயிலிருந்து, 11 ஆயிரத்து 500 ரூபாய்.

வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்கள், ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி போன்ற மிகப்பெரிய விடுதலைப் போராட்ட வீரர்களின் வழித் தோன்றலுக்கு வழங்கக்கூடிய மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரத்து 500 ரூபாயாக வழங்கப்படும் என்பதை அறிவித்திருக்கிறார்கள்.

அண்மையில் நடந்த கேரள மாநில பேரழிவு நாமெல்லாம் அறிந்ததே. அதையொட்டி தமிழ்நாட்டினுடைய மலைப் பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் ஆகிய மலை நிலப்பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் குறித்த ஒரு முழுமையான ஆய்வுகளை செய்வதற்கு முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு மிக முக்கியமான அறிவிப்பினை அவர்கள் வழங்கியிருக்கிறார்கள்.

ஆகவே, மிகச் சிறப்பான அறிவிப்புகளை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய இன்றைய விடுதலைத் திருநாள் உரையில் தெரிவித்திருக்கிறார்கள் என்பதை நான் உங்களிடத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

கருத்துகள் இல்லை: