செவ்வாய், 19 மார்ச், 2024

தேர்தல் விதியை காட்டி பெரியார் சிலையை மூடிய அதிகாரிகள் .. திராவிடர் கழகம் அதிரடி நடவடிக்கை

 nakkheeran.in :தேர்தல் நடத்தை விதிகள்; சமயோசிதமாகச் செயல்பட்ட திராவிடர் கழகத்தினர்
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.


அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணமாக வைத்து திண்டுக்கல்லில் தந்தை பெரியாரின் சிலையைத் துணியைக் கொண்டு மறைத்துள்ளனர். இத்தகைய செயலுக்கு திராவிடர் கழகத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் காஞ்சித்துரை ஆகியோர், கடந்த 2011 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெரியாரின் சிலையை மூடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவின் நகலைக் காண்பித்து சிலை மூடப்பட்ட அரை மணி நேரத்தில் பெரியார் சிலை மீண்டும் திறக்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

கருத்துகள் இல்லை: