வியாழன், 21 மார்ச், 2024

தமிழச்சி Vs தமிழிசை Vs ஜெயவர்தனன் தென்சென்னையில் சூடு பிடிக்கும் களம்!

மின்னம்பலம் - vivekanandhan : தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தர்ராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் பாஜகவில் இணைந்திருக்கிறார். அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
முதலில் தமிழிசை செளந்தர்ராஜன், தான் துணைநிலை ஆளுநராக இருந்த புதுச்சேரி தொகுதியில் தான் போட்டியிடுவதாக திட்டமிட்டிருந்தார். ஆனால், சமீப காலங்களில் புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்வுகள் அவரது முடிவினை மாற்றியிருக்கிறது.
சமீபத்தில் புதுச்சேரியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் கடும் அதிர்வை ஏற்படுத்தியதுடன் புதுச்சேரி அரசை நோக்கியும், ஆளுநரான தமிழிசையை நோக்கியும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆளுநர் மாளிகையை நோக்கி பல போராட்டங்களும் நடந்தன.

எனவே தமிழிசை செளந்தர்ராஜன் புதுச்சேரியில் போட்டியிட்டால், இந்த சிறுமி கொலை தொடர்பான மக்களின் கோபம் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் தமிழிசை புதுச்சேரியில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.

மேலும், தமிழிசை புதுச்சேரியில் போட்டியிடுவதை புதுச்சேரி முதல்வராக இருக்கக்கூடிய ரங்கசாமியும் விரும்பவில்லையாம். இதனால் தமிழிசை தமிழ்நாட்டின் பக்கம் நகர்ந்து தென்சென்னை தொகுதியில் போட்டியிட முயற்சி செய்துவருவதாக கமலாலய வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாஜக வேட்பாளராக தமிழிசை செளந்தர்ராஜன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுவதால், தென்சென்னையின் களம் தமிழச்சி vs தமிழிசை என்பதாக சூடுபிடித்திருக்கிறது. அதிமுக வேட்பாளராக ஜெயவர்தன் களத்தில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது

கருத்துகள் இல்லை: