செவ்வாய், 17 அக்டோபர், 2023

வாச்சாத்தி வழக்கு : ஐ.எப்.எஸ் அதிகாரிகள் சரணடைய உத்தரவு!

மின்னம்பலம் : கவி : வாச்சாத்தி வழக்கு : ஐ.எப்.எஸ் அதிகாரிகள் சரணடைய உத்தரவு!
வாச்சாத்தி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐ. எப். எஸ் அதிகாரிகள் 6 வாரத்தில் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 215 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 2011 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இவர்களில் 126 பேர் வனத்துறை அலுவலர்கள், 84 பேர் காவல்துறையினர் மீதமுள்ள ஐந்து பேர் வருவாய்த் துறை ஊழியர்கள்.
இதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 5 பேருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இந்த 17 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து   உத்தரவிட்டார்.

அதோடு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் குற்றம் புரிந்தவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டும் என்றும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த தண்டனையை எதிர்த்து ஐ. எப். எஸ் அதிகாரிகளான எல். நாதன், பாலாஜி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனு நீதிபதி கே. வி. விஸ்வநாதன் அமர்வு முன்பாக இன்று (அக்டோபர் 16) விசாரணைக்கு வந்த நிலையில், முதல் குற்றவாளியான ஐ. எப். எஸ் அதிகாரி எல். நாதன் மற்றும் பாலாஜி உள்ளிட்டோரது மனுக்களைத் தள்ளுபடி செய்து அவர்கள் ஆறு வாரத்திற்குள் சரணடைய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

பிரியா

கருத்துகள் இல்லை: