வெள்ளி, 20 அக்டோபர், 2023

பங்காரு அடிகளார் காலமானார் . 82 வயது

மாலை மலர்  :மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனரான பங்காரு அடிகளார் (வயது 82) இன்று காலமானார். நெஞ்சு சளி பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் அதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை காலமானார்.
1941-ம் ஆண்டு மார்ச் 3-ல் பிறந்த அவர், பக்தர்களால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.
கோவில் மற்றும் ஆன்மீகத்தில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் கருவறைக்குள் பெண்கள் சென்று பூஜை செய்யும் வழக்கத்தை கொண்டு வந்தார்.
ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி, கலாசார அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தவர்.
இவரது சேவையை பாராட்டி 2019-ம் ஆண்டு இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் நேற்று மாலை காலமானார். அவரது மறைவு பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பங்காரு அடிகளார் மறைந்த செய்தியை கேட்டு வேதனையடைந்தேன் என வானதி சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

ஆன்மீக நிர்வாகத்தில் பெண்களை கொண்டு வந்தவர் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.
பங்காரு அடிகளாரின் மரணம் லட்சக்கணக்கான மக்களுக்கு பேரிழப்பு என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.

பக்தர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என பங்காரு அடிகளார் மறைவுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
பங்காரு அடிகளாரின் மறைவை அடுத்து பக்தர்கள் பலர் மேல்மருவத்தூரில் குவிந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: