வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

பிரிக்ஸ் கூட்டமைப்பு விரிவாக்கம் - அர்ஜென்டினா, எகிப்து, எதியோப்பியா, UAE , சவுதி அரேபியா மற்றும் ஈரான்

மாலை மலர்  : பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பாக 2009-இல் பிரிக்ஸ் (BRICS) உருவானது.
இதன் முதல் உச்சி மாநாடு 2009-இல் ரஷியாவில் நடைபெற்றது.
2023 ஆகஸ்ட் 22-ம் தொடங்கி இன்றுடன் 3-வது மற்றும் நிறைவு நாளாக இந்த அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகென்னஸ்பர்க் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.
2024-இல் அர்ஜென்டினா, எகிப்து, எதியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்த கூட்டமைப்பில் இணைய போகின்றன.
இது குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறும் போது,"கூட்டமைப்பின் விரிவாக்கம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம்," என தெரிவித்துள்ளார்.


"இது ஒரு மிக பெரிய தருணம். வளர்ச்சிக்கான ஒரு உலக கட்டமைப்பை உருவாக்க எத்தியோப்பியா துணை நிற்கும்" என புதிதாக இணையவுள்ள எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அகமது கூறியுள்ளார்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் மற்றும் எகிப்து ஆகியவை இணைவதன் மூலம் 'மெனா' எனப்படும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க (MENA) நாடுகளுக்கு ஒரு பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

ரஷியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் அமெரிக்க உட்பட மேற்கத்திய நாடுகளால் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் நலனை கருத்தில் கொண்டு அவை இந்த விரிவாக்கத்திற்கு பெரிதும் முனைந்துள்ளன.

"5 பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குதல் கடினம் என்பதால் இந்த கூட்டமைப்பு இதுவரை குறிப்பிட்டு சொல்லும் வகையில் எதையும் சாதிக்கவில்லை. எனவே இதன் விரிவாக்கம் மேலும் இப்பிரச்சனையை சிக்கலாக்கலாம். இருந்தாலும் அது இணைந்து கொள்ளும் நாடுகளின் கையில் உள்ளது" என தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழக பேராசிரியர் டேனி பிராட்லோ தெரிவித்துள்ளார்.
 

கருத்துகள் இல்லை: