சனி, 26 ஆகஸ்ட், 2023

பல ஆண்களுடன் தொடர்பு; பெற்ற மகளை கொன்று வீசிய தந்தை - திருச்சியில்

tamil.asianetnews.com - Velmurugan s  : பல ஆண்களுடன் தொடர்பு; பெற்ற மகளை கொன்று வீசிய தந்தை - திருச்சியில் பரபரப்பு
திருச்சி அருகே கடந்த சில தினங்களுக்கு முன் இளம் பெண் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது தந்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
திருச்சி மாவட்டம், துறையூர் - நாமக்கல் செல்லும் சாலையில்  தா.பேட்டை அருகே தேவரப்பம்பட்டி வனப்பகுதியில் கடந்த 22ம் தேதி சாலையின்  அருகே உள்ள முட்புதரில் இளம்பெண் சடலமாக கிடப்பதாக ஜெம்புநாதபுரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் முசிறி காவல் துணை சூப்பிரண்டு யாஸ்மின், தா.பேட்டை காவல் ஆய்வாளர் பொன்ராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றினர்.


சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மற்றும்  தடயவியல் துறையினர்  தடயங்களை சேகரித்தனர்.  இதையடுத்து காவல் துறையினர் இளம்பெண் பிரியங்கா உடலை பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சடலத்தின் அருகே அந்த பெண்ணின் துணிகள், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் வைத்திருந்த லெதர் பை கிடந்தது. சடலமாக கிடந்த இளம்பெண் தா.பேட்டை அடுத்த ஊரக்கரை கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் மகள் பிரியங்கா (வயது 20) என்பதும், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு மகாதேவி மலையப்ப நகர் பகுதியை சேர்ந்த சீனுபிரசாத் (24) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரியவந்தது.


பிரியங்கா வனப்பகுதிக்கு  எவ்வாறு வந்தார்? கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சடலமாக கிடந்த இளம்பெண் பிரியங்காவின் தந்தை அறிவழகன் (50) நேற்று ஊரக்கரை கிராம நிர்வாக அதிகாரி முத்துச்செல்வன் முன்னிலையில் சரணடைந்தார். பின்னர் தா.பேட்டை காவல் ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் காவல் துறையினர் அறிவழகனை கைது செய்தனர்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், தனது  மகள் பிரியங்கா ஒழுங்கீனமாக நடந்து கொள்வதுடன் நிறைய ஆண் நண்பர்களுடன் பேசி பழகி வந்தார். பெற்றோர்கள், உறவினர்கள் பேச்சை மதிக்காமல் சுற்றி திரிந்துள்ளார். பலமுறை கண்டித்தும் பிரியங்கா தனது பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ளவில்லை. உறவினர்கள், நண்பர்களிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். பிரியங்காவிற்கு ஒரு சகோதரனும், சகோதரியும் உள்ள நிலையில் அவர்களின் வாழ்க்கை பிரியங்காவின் நடத்தையினால் பாழாகி விடுமோ என பயந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

இதனால் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் பிரியங்காவை கொலை செய்ய முடிவு செய்தேன். கடந்த 21ம் தேதி நாமக்கலில் இருந்து பிரியங்கா என்னை செல்போனில் பேசி தனக்கு பணம் வேண்டும் என்று கேட்டார். பின்னர் நாமக்கல் சென்று உறவினரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி கொண்டு பிரியங்காவை ஏற்றி கொண்டு பவித்திரம், மகாதேவி, வேலம்பட்டி, மேட்டுப்பாளையம், எரகுடி வழியாக தேரப்பம்பட்டி வனப்பகுதி வழியாக சென்றேன்.

இயற்கை உபாதை கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றபோது பிரியங்கா தன்னை மரியாதை குறைவாக பேசியதால் ஆத்திரம் ஏற்பட்டது. இவளால் நமக்கு அவமானமாக உள்ளது என எண்ணி பிரியங்காவை அடித்து வனப்பகுதிக்குள் இழுத்து சென்று காலால் கழுத்தை மிதித்தும், கையால் நெறித்தும் கொலை செய்தேன். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று விட்டேன். காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து தன்னை தேடுவதை அறிந்தும், குற்ற உணர்ச்சி ஏற்பட்டதாலும் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்தேன் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: