வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

சமஸ்கிருத மொழியில் ஒரு சொல் எப்படிப் பொருள் உணர்த்துகிறது? கௌராவ் ஷா என்ற ஒரு ஆய்வாளன் எழுதிய கட்டுரை

 திரு. கௌரவ் ஷா எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு!
Thanam Vettivelu  :   நண்பா்களே!
தமிழ், சமஸ்கிருதம் என்பவைகளில் ஒரு சொல் எப்படிப் பொருள் உணர்த்துகிறது என்பதை ஆராய்வது இன்பமானது.
இங்கு  சமஸ்கிருத மொழியில் ஒரு சொல் எப்படிப் பொருள் உணர்த்துகிறது என்பது பற்றி கௌராவ் ஷா என்ற ஒரு ஆய்வாளன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில் தமிழாக்கம் தரப்பட்டுள்ளது. படியுங்கள். ஆராயுங்கள்!
சமஸ்க்ருதம் ஒரு அசாதாரண மொழி
திரு. கௌரவ் ஷா எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு.
ஏனைய மற்ற மொழிகளிலிருந்து  சமஸ்க்ருதம் எவ்வாறு வேறுபடுகிறது என்று எடுத்துக் காட்டும் வகையில் எழுதப்படும் இந்த கட்டுரை தொகுப்பில் இது முதல் பாகம்.


 நவீன மொழிகள் என்று பெயரளவில் கருதப்படும் பல மொழிகள், உண்மையில் முழுமையற்று, பிற்போக்குத் தனத்துடன், அநாவசியமான பகுதிகளைக் கொண்டுள்ளன என்பது இதைப் படிக்கும் போது உங்களுக்கே புரியும். சரி, துவங்குவோம்.
நவீன மொழிகளினுள் (ஆங்கிலம், இந்தி, ஜெர்மன் போன்றவை) நுழைந்து விடும் முதல் குறைபாடு, அவைகளுக்கு அடிப்படையாக  உள்ள கொள்கையில் இருந்தே உருவாகிறது.
அந்த கொள்கை: சொற்கள் உலகில் உள்ள பொருட்களை நேரடியாகக் குறிக்கும்.
இது சாதாரணமாக, கவனத்தில் கொள்ளத் தேவை இல்லாத, குழப்பம் தராத ஒரு சிறிய விஷயமாகப்படும். ஆனால், நவீன கால பேச்சு முறைகளில் உள்ள பல குறைபாடுகளுக்கு இந்த அடிப்படை கொள்கைதான் முக்கிய காரணம் என்பதை மேற்கொண்டு பார்ப்போம்.
இதே சமயத்தில், சமஸ்க்ருதம் இந்த கொள்கையின் அடிப்படையில் அமைந்தது அன்று. சொல்லப் போனால், சமஸ்க்ருதத்தில், சொற்கள் – உலகில் உள்ள பொருட்கள்/குழுக்கள் ஆகியவற்றின் பண்பை அல்லது இயல்பை குறிக்கிறதே தவிர எந்த சொற்களும் பொருட்களையோ/குழுக்களையோ தாமே நேரடியாக குறிப்பதில்லை.
இதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி பதில் முறையில் சில உதாரணங்களுடன் காணலாம்.
கேள்வி: ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் மரம் என்பதை எப்படி சொல்வது?
பதில்: ஆங்கிலத்தில் மரத்துக்கு Tree என்று சொல்ல வேண்டும். ஹிந்தியில் மரத்துக்கு  पेड़ என்று சொல்ல வேண்டும்.
கேள்வி: சமஸ்க்ருத மொழியில் மரம் என்பதை எப்படி சொல்வது?
பதில்: சமஸ்க்ருதத்தில் மரத்துக்கு என்று சொல் எதுவும் இல்லை.
கேள்வி: என்ன, விளையாட்டாக இருக்கிறதே!
பதில்: இல்லை, விரிவாக விளக்குகிறேன். மேலே சொன்னது போல, சமஸ்க்ருதத்தில் சொற்கள் பொருட்கள்/குழுக்கள் ஆகியவற்றின் பண்பை அல்லது இயல்பை மட்டுமே குறிக்கின்றன. எந்த சொற்களும் பொருட்களையோ/குழுக்களையோ தாமே நேரடியாக குறிப்பதில்லை. ஆகையால் “மரம்” என்று நேரடியாக மரத்தைக் குறிக்கும் சொல் எதுவுமே சமஸ்க்ருதத்தில் இல்லை. உண்மையில் எந்த உலகில் காணும் எந்த பொருளுக்குமே சமஸ்க்ருதத்தில் வார்த்தைகள் இல்லை (சில குறைவான எண்ணிக்கையிலான வார்த்தைகளை தவிர).
கேள்வி: அப்படியானால் வ்ருக்ஷ: என்பது என்ன? நான் வ்ருக்ஷம் என்பது மரம் என்றல்லவா கேள்விப் பட்டேன்!
பதில்: ஆம், சரியான கேள்வி. வ்ருக்ஷ என்கிற சம்ஸ்க்ருத வார்த்தையை மரத்தைக் குறிக்க உபயோகப் படுத்தலாம். நான் முன்னரே குறிப்பிட்ட படி, சொற்கள் பொருட்கள்/குழுக்கள் ஆகியவற்றின் பண்பை மட்டுமே குறிக்கின்றன. அந்த வகையில் வ்ருக்ஷ: என்னும் இந்த வார்த்தை மரத்தின் ஒரு பண்பை குறிக்கிறது.
வ்ருக்ஷ (वृक्ष) = வெட்டப்பட்டு கீழே தள்ளப் படும் ஒன்று.
இந்த பண்பை உடைய எந்தப் பொருளையும் குறிக்க வ்ருக்ஷ என்ற வார்த்தையை உபயோகப் படுத்தலாம். ஒரு பொருள் பொதுவாக, வெட்டப்பட்டு கீழே தள்ளப்படும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அதை குறிக்க வ்ருக்ஷ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். வ்ருக்ஷ என்பது மரமாகத் தான் இருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை.
இதே போல சம்ஸ்க்ருதத்தில் மரம் என்பதற்கு பல வார்த்தைகள் உண்டு. உதாரணமாக தரு (तरु), பாத³ப (पादप)  ஆகியவையும் மரத்தையே குறிக்கும். ஆனால் இவையும் கூட நேரடியாகக் குறிப்பதல்ல.
தரு ((तरु)) – மிதக்கும் தன்மை உடையது
பாத³ப (पादप) –  காலால் பருகுவது
மரத்துக்கு இத்தகைய பண்புகள் இருப்பதால், அதாவது மரம் நீரில் மிதக்கக் கூடியது, அதே போல நீரை தன்னுடைய வேர்களால் (காலால்) உறிஞ்சிப் பருகுவதால், மரத்தைக் குறிக்க இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். ஏனெனில் மரத்துக்கு இந்த பண்புகள் உண்டு அல்லவா.
 இதே பண்புகள் உள்ள வேறு பொருட்கள் இருந்தால் அவற்றைக் குறிக்கவும் இந்த சொற்களைப் பயன்படுத்தலாம் என்று சொல்லத் தேவை இல்லை.
கேள்வி: ஓ.. இப்போது புரிகிறது. அப்படியானால் மரத்தின் கிளையைக் கூட வ்ருக்ஷ என்று அழைக்கலாம் தானே… மரத்தைப் போல கிளையும் வெட்டப் பட்டு கீழே தள்ளப் படும் ஒன்று அல்லவா.
பதில்: நிச்சயமாக. நீங்கள் ஒரு புத்திசாலி.
கேள்வி: எனக்கு எல்லாவற்றையும் சுருக்கமாக முடிவாகக் கூற முடியுமா..ஷ
பதில்:  சரி, நவீன கருத்துப் பரிமாற்றத்தில், சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் ஒன்றுக்கு ஒன்று நேரடியாக இணைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் சம்ஸ்க்ருதத்தில் சொல்லும் அது குறிக்கும் பொருளுடைய பண்புகளுமே இணைக்கப் பட்டுள்ளன.
கேள்வி: நல்ல ஆராய்ச்சி. இருந்தும் எனக்கு ஒன்று புரியவில்லை. நீங்கள் சொன்னது சுவையாக இருந்தாலும், இதனால் என்ன பயன்?
என்ன சொல்கிறேன் என்றால், ஏன் சொற்கள் பொருட்களின் பண்பை குறிப்பதாக சிக்கல் படுத்திக்கொள்ள வேண்டும், சாதாரணமாக சொல் நேரடியாக பொருட்களை குறித்தால் என்ன? இதனால் எல்லாம் என்ன பயன்?
பதில்: இதற்காகத் தான் காத்திருந்தேன். இதோ பதில். உதாரணமாக ஆங்கிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் சுமார் ஐந்து லட்சம் வார்த்தைகள் (ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியில் உள்ளபடி) உள்ளன. இதில் பெரும்பாலும் மற்ற மொழிகளில் இருந்து பெறப்பட்டவை.
கார் (car) என்ற ஒரு வாகனம் கண்டுபிடிப்பதற்கு முன், கார் (car) என்ற சொல்  டிக்ஷனரியில் இருக்கவில்லை. ஆனால் கார் கண்டுபிடிக்கப் பட்டவுடன், யாரோ “கார்” என்ற சொல்லை உருவாக்க அன்றிலிருந்து நாமும் மகிழ்ச்சியாக “கார்” என்ற சொல்லை உபயோகப்படுத்தி வருகிறோம். ஒரு புதிய வார்த்தை உருவானவுடன் அது அகராதியில் சேர்க்கப்பட்டாக வேண்டும். ஏனெனில் அப்போதுதான் புதியவர்கள் அகராதியைப் பார்த்து அந்த வார்த்தையையும் அதன் பொருளையும் படித்து தெரிந்து கொள்ள முடியும். இது எதனால் என்றால், கார் என்பது ஒரு பொருளைக் குறிக்கிறது.
வருங்காலத்தில்  புதியவகை  வாகனம் ஒன்று கண்டுபிடிக்கும் போது, புது வார்த்தை ஒன்றை நாம்   உருவாக்குவோம். அப்போது கார் என்னும் வாகனம் உபயோகத்தில் இல்லாமல் போகும், அதோடு கார் என்ற சொல்லும் வழக்கொழிந்து போகும் (ஏனெனில் கார்களே வழக்கொழிந்து விட்டனவே!).  மறுபடி அந்த புதியவகை வாகனத்துக்கான வார்த்தை அகராதியில் சேர்த்தாக வேண்டும்.   ஏனெனில் ஆங்கிலத்தில் ஒரு சொல் உலகில் உள்ள ஒரு பொருளை நேரடியாகக் குறிக்கிறது.
சமஸ்க்ருதத்திலோ ஒரு சொல் உருவாக்கப்பட்டாலும் அதனை அகராதியில் சேர்க்கத் தேவை இல்லை.  சமஸ்க்ருத இலக்கணம் தெரிந்த ஒருவர் ஒரு சொல்லின் அர்த்தத்தை அகராதியைப் பார்க்காமலேயே ஏறக்குறைய சரியாகச் சொல்லி விட முடியும். ஏனெனில் புதியதாக சமஸ்க்ருதத்தில் கார்களைக் குறிக்க உருவாக்கப்பட்ட சொல், கார் என்ற வாகனத்தின் ஒரு பண்பை, இயல்பை  குறிப்பதாக இருக்கும்.  சமஸ்க்ருத இலக்கண சூத்திரங்களை வைத்து (வ்யாகரணம்), ஒரு வார்த்தை ஒரு பொருளின் எந்த இயல்பைக் குறிக்கிறது என்று கண்டுபிடித்து விட முடியும். ஆகையால், சமஸ்க்ருத இலக்கணம் தெரிந்த ஒருவருக்கு (பெரும்பாலும்) அகராதியே தேவை இல்லை.
கேள்வி: ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியானால் சமஸ்க்ருத இலக்கணம் தெரிந்த ஒருவருக்கு வார்த்தைகளின் அர்த்தங்களை தெரிந்து கொள்ள அகராதி தேவைப் படாது என்கிறீர்கள். வேறு ஏதேனும் நன்மை உண்டா?
பதில்: ஆம், வேறு நன்மைகளும் உண்டு. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், ஆங்கிலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவுள்ள வார்த்தைகளே இருக்கும். இப்போது ஐந்து லட்சம் இருக்கிறது. ஆனால் சம்ஸ்க்ருதத்திலோ, இந்த பிரபஞ்சத்தில் எத்தனை இயல்புகள், பண்புகள் உண்டோ, அத்தனை வார்த்தைகள் உண்டு. இந்த பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களும், அதன் பண்புகளும் எண்ணமுடியாத அளவு இருக்குமெனில், சம்ஸ்க்ருதத்திலும் எண்ணவே முடியாத, எண்ணிக்கையில் அடங்காத அளவு வார்த்தைகள் உண்டு. உலகில் இன்னும் கண்டுபிடிக்கப் படாத பொருட்களுக்கும் சம்ஸ்க்ருதத்தில் வார்த்தைகள் உண்டு. ஏனெனில் புதியதாக கண்டுபிடிக்கப் படும் பொருட்களுடைய பண்புகள் புதியதல்ல. உதாரணமாக மின்விசிரிக்கு சில பண்புகள் உண்டு, அது சுற்றுகிறது, காற்றை வீசுகிறது, காற்றை தள்ள இலை போன்ற அமைப்புகள் இருக்கின்றன. மின்விசிறி கண்டுபிடிக்கப்பட்ட போது, அது புதிய பொருள் என்றாலும், இந்த பண்புகள் புதியது அல்ல. ஆகவே ஒரு பொருள் புதியதாக உருவாக்கப் பட்டாலோ/கண்டுபிடிக்கப் பட்டாலோ, சம்ஸ்க்ருத இலக்கணம் தெரிந்த யாரும் அதன் இயல்பை வைத்து அதற்கு ஒரு பெயரை சூட்ட முடியும், அதே போல சம்ஸ்க்ருத இலக்கணம் தெரிந்த வேறு யாரும், அந்த பெயர் எதனைக் குறிக்கிறது என்று கண்டுகொண்டு விட முடியும்.
கேள்வி: அற்புதம். ஆனால் புரிந்து கொள்ள சற்றுக் கடினமாகத் தான் இருக்கிறது. சுருக்கமாக இது வரை சொன்னதை திரும்ப ஒருமுறை கூற முடியுமா…
பதில்: சரி, சமஸ்க்ருதத்தில் எண்ணிலடங்காத அளவு சொற்கள், அதன் அடிப்படைக் கொள்கையின் காரணமாகவே அமைந்துள்ளன (இதில் பெரும்பாலும் உள்ள சொற்களை புரிந்து கொள்ள அகராதியே தேவைப் படாது!). சமஸ்க்ருத இலக்கண அறிஞர்கள், இலக்கணத்தையும் (Grammar), சொற்பொருளியலையும் (semantics) வேறு வேறாக கருதாமல், இணையான – முரண்பாடுகள் அற்ற ஒரே விஷயமாக கருதினர். ஏனைய மற்ற மொழிகளில் இலக்கணமும், சொற்பொருளியலும் வேறு வேறாக உள்ளன – சமஸ்க்ருதத்தில் அப்படி இல்லை.
நீங்கள் உலகில் ஒரு பொருளைப் பற்றி  எண்ணும் போது, அதன் இயல்பைக் கொண்டே சிந்திக்கிறீர்கள்; ஏனெனில் ஒரு பொருளின் இயல்பே அதனை மற்றதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. ஆகையால் ஒரு சாதாரணமாக ஒரு பொருளைப் பற்றி எண்ணும் போது, அதன் இயல்பு நினைவுக்கு வரும், அதனால் நீங்களே அந்த பொருளின் பெயர் முன்பே தெரியாவிட்டாலும் அதன்  இயல்புக் கேற்ப ஒரு பெயரை சூட்ட முடியும்.
இது வெறும் ஆரம்பம்தான்.  இந்த தொடரில் வரும் பகுதிகளில் சமஸ்க்ருதம் எவ்வளவு சுருக்கமான,  அழகான, ஒழுங்கான முறையில் அமைந்த, உலகமே வியக்கும் வகையில் அமைந்த ஒரு மொழி என்று பார்ப்போம். ஒரு பொருளின் இயல்பை வைத்து எப்படி அதற்கு பெயரை உருவாக்க முடியும் என்றும் பார்ப்போம்.
இந்தப் பகுதியை ஒரு “சுபாஷித”த்துடன் முடிப்போம்.
भाषासु मधुरा मुख्या दिव्या गीर्वाण भारती
तस्माद्धि काव्यं मधुरं तस्मादपी सुभाषितम
பா⁴ஷாஸு மது⁴ரா முக்²யா தி³வ்யா கீ³ர்வாண பா⁴ரதீ
தஸ்மாத்³தி⁴ காவ்யம்ʼ மது⁴ரம்ʼ தஸ்மாத³பீ ஸுபா⁴ஷிதம்
அதாவது, சம்ஸ்க்ருத மொழி இந்திய மொழிகளில் முதன்மையானது, இனிமையானது, தெய்வீகமானது. இதனால் கவிதையும் அழகாகிறது. நன்மொழிகளும் இனிமையாகின்றன.
– திரு. கௌரவ் ஷா எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு.
________________________________________
குறிப்புகள்:
 இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ள சிறப்பு பண்புகள் சமஸ்க்ருத மொழியில் மட்டுமே இருக்கின்றன என்று சொல்ல இயலாது. வேறு சில மொழிகளிலும் இச்சிறப்பு இயல்புகள் உண்டு. எனினும் இம்மொழிகளில் இத்தகைய இயல்புகள் மிகவும் அடிப்படை நிலையில் மேலதிக வளர்ச்சி இன்றி உள்ளன. ஆனால் சம்ஸ்க்ருதத்தில் இந்த இயல்புகள் முற்றிலும் வளர்ச்சி கண்டு மொழியின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன.

 சம்ஸ்க்ருத எழுத்தாளர் திரு.ஜகந்நாதன் அவர்கள் இது குறித்து எழுதிய குறிப்பு: பொதுவாக மொழிகளின் சொல்லமைப்பு நடைமுறை உபயோகத்தைப் பொறுத்த வரை மூன்று வகையாக அமையும்.

1. யோக(योग) என்ற முறையில் இலக்கண விதிகளின் படி அமையும் சொற்கள். உதாரணமாக கும்ப⁴கார: கும்ப⁴ம்ʼ கரோதி இதி கும்ப⁴கார: (कुम्भकारः कुम्भं करोति इति कुम्भकारः) – உழுபவன் உழவன் என்பது போல.
ரூட⁴ (रूढ) = இதற்கு உதாரணம் நூபுரம் (नूपुरम्) – கைவளை. இந்த சொல் எதிலிருந்தும் உருவானதல்ல. எந்த பண்பையும் குறிப்பதல்ல. இந்த சொல்லை பிரிக்கவும் முடியாது.
2. योगरूढ= पङ्के जायते इति पङ्कजम् யோக³ரூட⁴= பங்கே ஜாயதே இதி பங்கஜம் – சேற்றில் இருப்பது. இது போன்ற வார்த்தைகளில் பிரித்து அர்த்தம் சொல்ல முடிந்தாலும், உபயோகத்தில் அவ்வாறு செய்வதில்லை. அதாவது சேற்றில் இருக்கும் புழு பூச்சி ஆகியவையும் பங்கஜம் என்று அழைக்கப் படமாட்டாது. பங்கஜம் என்றால் தாமரையை மட்டுமே குறிக்கும்.

கருத்துகள் இல்லை: