சனி, 27 மே, 2023

நேபாளத்தை ஆள்வது கம்யூனிஸ்ட்களா அல்லது பிராமணர்களா?

நேபாளம்

   BBC News தமிழ் - குமார் : நேபாளத்தின் போக்ராவில் சுற்றியபோது ஒரு உணவகத்தைக் கண்டேன். ஏரிக்கரையில் அமைந்துள்ள இந்த உணவகத்தின் பெயர் ககாகோ சுலோ.

ககாகோ சுலோவுக்கு வெளியே மெனு பலகை போடப்பட்டுள்ளது.

இந்த மெனுவில் கொடுக்கப்பட்டுள்ள உணவு அல்லது தாலிகளின் (முழு சாப்பாடு) பெயர்கள் மிகவும் சுவாரசியமானவை.

மெனுவில் முதல் எண்ணில் பண்டிட் உணவு, இரண்டாவது எண்ணில் ஜனநாயக உணவு, மூன்றாவது எண்ணில் குடியரசு உணவு மற்றும் நான்காவது எண்ணில் ஒருமித்த கருத்து உணவு என்றும் எழுதப்பட்டுள்ளது.


அதை கீழே உள்ள படத்தில் காணலாம்.

நான் நின்று இந்த பலகையைப் பார்த்துக் கொண்டிருந்தேன், என் நேபாளி நண்பர் ஒருவர், "நீங்கள் எழுதப்போகும் கட்டுரைக்கான விஷயம் இந்த மெனுவிலும் பிரதிபலிக்கிறது என்றார். நான் எப்படி என்று கேட்டேன். மெனுவை கவனமாகப் படியுங்கள். எல்லாவற்றுக்கும் மேலே பண்டிட் உள்ளது. அதற்குப்பிறகு ஜனநாயகம், பின்னர் குடியரசு உள்ளது என்று அவர் சொன்னார்.

மன்னராட்சி ஒழிந்துவிட்டது. ஆனால் ஜனநாயகம் அல்லது குடியரசு, பண்டிட் அதாவது பிராமணர்களுக்கு மேலே வர முடியவில்லை என்பதை அவர் சொல்ல நினைத்தார்.

நேபாளத்தின் தற்போதைய அரசு மற்றும் நிர்வாக அமைப்பைப் பார்த்தால், எல்லாத் துறைகளிலும் பிராமணர்களின் ஆதிக்கம் உள்ளது. நேபாளத்தில் பிராமணர்கள், ’பஹுன்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

நேபாளத்தின் மக்கள் தொகையில் பிராமணர்களின் என்ணிக்கை 12.2 சதவிகிதம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் நேபாளத்தின் மலையக பிராமணர்கள் மற்றும் எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நேபாளத்தில் உள்ள மிகப்பெரிய சாதிக் குழுவான சேத்ரி, இந்தியாவில் க்ஷத்திரியர்கள் அல்லது ராஜ்புத் என்று அழைக்கப்படுகிறார்கள்.

நேபாளத்தில் சேத்ரி சமூகத்தினரின் எண்ணிக்கை 16.6 சதவிகிதம். நேபாளத்தில் பிராமணர் மற்றும் சேத்ரிகள் மட்டுமே கஸ் ஆர்யா என்று அழைக்கப்படுகிறார்கள். நேபாளத்தில் கஸ் ஆர்யாவின் மொத்த மக்கள் தொகை சுமார் 29 சதவிகிதம்.

நேபாளத்தின் தற்போதைய ஜனநாயகத்தைப் பார்த்தால், எல்லா உயர் பதவிகளும் பிராமணர்களால் வகிக்கப்படுகின்றன.

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா ஒரு பிராமணர். நேபாள அதிபர் ராம்சந்திர பவுடேல் ஒரு பிராமணர். நேபாள ராணுவ தளபதி பிரபுராம் ஷர்மாவும் பிராமணர். நேபாள நாடாளுமன்ற சபாநாயகர் தேவ்ராஜ் திமிரேவும் பிராமணர்.

நேபாள உச்ச நீதிமன்றத்தில் இப்போது நிரந்தர தலைமை நீதிபதி இல்லை. நீதிபதி ஹரிகிருஷ்ண கார்க்கி தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சேத்ரி அதாவது க்ஷத்ரியர்.

நேபாளத்தின் காவல்துறைத் தலைவர் பசந்த் பகதூர் குன்வரும் சேத்ரி சமூகத்தை சேர்ந்தவர்.

பிரசண்டாவின் அமைச்சரவை முழுவதையும் பார்த்தால் முக்கியமான அமைச்சகங்கள் அனைத்தும் கஸ் ஆரியர்களிடம்தான் உள்ளன.

நாடாளுமன்றத்தில் பிராமண-சேத்ரிகளின் ஆதிக்கம்

நேபாளத்தின் நாடாளுமனறத்தை பார்த்தால், இங்கும் கஸ் ஆர்யர்களின் ஆதிக்கம் உள்ளது. நாடாளுமன்றத்திற்கு 164 உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இவர்களில் 95 உறுப்பினர்கள் கஸ் ஆர்யா. அதாவது 57 சதவிகித உறுப்பினர்கள் பிராமணர்கள் அல்லது சேத்திரியர்கள்.

நேபாளத்தில் நான்கு சதவிகித முஸ்லிம்கள் உள்ளனர், ஆனால் எந்த உறுப்பினரும் நேரடித் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் சபைக்கு வரவில்லை.

எந்த ஷெர்பாவும் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தை அடையவில்லை, நேபாளத்தின் 13% தலித்துகளில் ஒரு உறுப்பினர் மட்டுமே நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தை அடைந்துள்ளார்.

41 உறுப்பினர்கள் (25 சதவிகிதம்) பழங்குடி சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதிநிதிகள் சபையை அடைந்துள்ளனர். மக்கள் தொகையில் அவர்களின் விகிதம் 35 சதவிகிதம் ஆகும்.

நேபாளத்தில் மொத்தம் ஏழு மாகாணங்கள் உள்ளன. கோசி, மதேஸ், பாக்மதி, கண்டகி, லும்பினி, கர்னாலி மற்றும் சுதூர் பஷ்சிம். இந்த ஏழு மாகாணங்களில் நான்கின் முதல்வர்கள் பிராமணர்கள்.

பாக்மதி பிரதேசத்தின் முதலமைச்சர் ஷாலிக்ராம் ஜம்குட்டேல், கர்னாலி பிரதேசத்தின் முதலமைச்சர் ராஜ்குமார் ஷர்மா மற்றும் கண்டகி பிரதேசத்தின் முதலமைச்சர் சுரேந்திரராஜ் பாண்டே ஆகிய அனைவரும் பிராமணர்கள். சுதூர் பஷ்சிம் பிரதேசத்தின் முதலமைச்சர் கமல் பகதூர் ஷா ஒரு சேத்ரியர்.

மதேஷ் பிரதேசத்தின் முதலமைச்சரான சரோஜ் குமார், யாதவ சமூகத்தையும், கோசி பிரதேசத்தின் முதலமைச்சரான ஹிக்மத் குமார் கார்க்கி, சேத்ரி சமூகத்தையும் மற்றும் லும்பினி பிரதேசத்தின் முதலமைச்சர் டில்லி பகதூர் சௌத்ரி, தாரு சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.

கோசி, கர்னாலி மற்றும் பாக்மதியில் கம்யூனிஸ்ட் அரசு உள்ளது மற்றும் எல்லா முதல்வர்களுமே கஸ் ஆரியர்கள்.

நேபாளத்தில் 239 ஆண்டுகால மன்னராட்சி முறை 2008ல் முடிவுக்கு வந்த பிறகு அங்கு ஜனநாயகம் மலர்ந்தது.

ஜனநாயகம் வந்த பிறகு இந்த 15 ஆண்டுகளில் ஒன்பது பிரதமர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் எட்டு பேர் பிராமணர்கள் மற்றும் ஒருவர் சேத்ரி.




இந்த 15 ஆண்டுகளில் பிரதமர் பதவி வகித்த அந்த ஒன்பது பேர்- கிரிஜாபிரசாத் கொய்ராலா, பிரசண்டா (மூன்றாவது முறையாக தற்போது பிரதமராக உள்ளார்), மாதவ் குமார் நேபால், ஜல்நாத் கனால், பாபுராம் பட்டராய், கில்ராஜ் ரேக்மி, சுஷீல் கொய்ராலா, கேபி ஷர்மா ஒலி மற்றும் ஷேர் பகதூர் தேவுவா.

அவர்களில் எட்டு பேர் பிராமணர்கள் மற்றும் ஷேர் பகதூர் தேவ்பா, சேத்ரி சமூகத்தை சேர்ந்தவர். நேபாளத்தில் ஜனநாயகம் வருவதற்கு முன்பு பஞ்சாயத்து முறையிலும் எல்லா பிரதமர்களும் பிராமணர்களாகவே இருந்தனர்.

நேபாளத்தின் மதேஸ் பகுதியிலும் பிராமணர்கள் உள்ளனர். ஆனால் அவர்களின் அந்தஸ்து மலையக பிராமணர்களைப் போல் இல்லை.

"மதேஸ் பகுதியிலும் பிராமணர்கள் மற்றும் ராஜபுத்திரர்கள் உள்ளனர். ஆனால் மலையக பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்கள் மட்டுமே ஆட்சியிலும் அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மலையகத்தில் உள்ள பிராமணர்கள், மதேசி தலித்துகளையும் யாதவர்களையும் எப்படிப் பார்க்கிறார்களோ, அதுபோலத்தான் இங்குள்ள பிராமணர்களையும் பார்க்கிறார்கள். மலையக பிராமணர்கள் மற்றும் மதேஸ் பிராமணர்களுக்கு இடையே பாரம்பரியமாக நெருக்கமான உறவு இல்லை. திருமணம் நடந்தாலும் அது கலப்பு திருமணமாகவே பார்க்கப்படுகிறது,” என்று நேபாளி காங்கிரஸ் தலைவர் கஞ்சன் ஜா கூறினார்.

"நேபாளத்தில் 71 சதவிகித மக்கள் மீது 29 சதவிகித கஸ் ஆரியர்களின் ஆதிக்கம் முடியாட்சி காலத்திலும் இருந்தது. ஜனநாயகம் வந்தபோதும் கூட அது நீடித்தது. இப்போது மதேசிகள், பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு அரசியலமைப்புச் சட்டமாக்கப்பட்டுள்ளது. நேபாளி மொழி கஸ் ஆரிய மொழியாகும். ஆனால் அது முடியாட்சியின்போதும், ஜனநாயக நேபாளத்திலும் திணிக்கப்பட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.

“இமயமலை பழங்குடியினருக்கு அவர்களின் சொந்த மொழி உள்ளது. மதேசிகளுக்கு அவர்களின் சொந்த மொழி உள்ளது, ஆனால் அதிகாரப்பூர்வ மொழி நேபாளியாக ஆக்கப்பட்டது. 30 சதவிகித மக்களின் மொழி 70 சதவிகித மக்கள் மீது திணிக்கப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில் கஸ் ஆரியர்கள் அல்லாதவர்கள் அரசுத் துறையில் நேபாளி மொழியில் தேர்ச்சி பெற்றவர்களை விட பின்தங்கிவிட்டனர்.”

நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து அங்கு கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. நேபாளி காங்கிரஸாக இருந்தாலும் அது கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடுதான் ஆட்சி அமைத்தது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரும் பிராமணர்கள்.

பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட் பிரிவு) அல்லது கேபி ஷர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி( மாக்ஸிஸ்ட் லெனினிஸ்ட் பிரிவு) என்று எதுவாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலும் இதே நிலைதான்.

நேபாளி காங்கிரஸின் அதிகாரமும் பிராமணர்களிடம் இருந்துள்ளது. இப்போது ஷேர் பகதூர் தேவ்பா அதன் தலைவராக உள்ளார். அவர் ஒரு சேத்ரி.

பட மூலாதாரம், Getty Images

நேபாளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியா அல்லது பிராமண ஆட்சியா?

கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் நேபாளி காங்கிரஸிலும் கஸ் ஆர்யாவின் ஆதிக்கம் முடிவுக்கு வராத வரை, நேபாளத்தின் அதிகாரம் உள்ளடக்கியதாக இருக்க முடியாது என்று நேபாளத்தின் பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

நேபாளத்தில் இருப்பது கம்யூனிஸ்ட் ஆட்சியா பிராமண ஆட்சியா? நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பிராமணர்களின் கட்சியா? என்று நேபாளத்தின் முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டராயிடம் கேட்டேன்.

“நான் பிராமண குடும்பத்தில் பிறந்தது என் தவறல்ல. சாதியை நான் விட்டுவிட்டேன். சாதிக்கு வெளியேதான் திருமணமும் செய்துகொண்டேன். உயர் சாதியில் பிறந்தவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். படிப்புக்கு பிறகு அவர்கள் அறிவியல் அணுகுமுறையைப் பெறுகிறார்கள். எந்தவொரு புரட்சிகர இயக்கத்தையும் அவர்கள்தான் வழிநடத்துகிறார்கள்,” என்று பாபுராம் பட்டராய் கூறினார்.

“மார்க்ஸிலிருந்து காந்தி, நேரு வரை, உலகின் கம்யூனிஸ்ட் அல்லது தேசியவாத இயக்கத்தைப் பார்த்தால், அதன் தலைவர்கள் உயர் சாதி அல்லது உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். விளிம்புநிலை சாதியினருக்காக அரசியலமைப்பில் பல ஏற்பாடுகளை செய்துள்ளோம். நேபாள பிராமணர்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள். நேபாள அரசியல் இன்னும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதற்கு நேரம் எடுக்கும்,” என்று அவர் கூறினார்.

“நேபாளத்தில் அரசியல் கட்சிகள் ஒரு நபர் மையமாகிவிட்டன. குறிப்பாக இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருவரால் நடத்தப்படுகிறது. அதனால்தான் முடிவுகள் உள்ளடக்கியதாக இல்லை. பிரசண்டா கடந்த 30 ஆண்டுகளாக தனது கட்சியை வழிநடத்தி வருகிறார். ஒலி மற்றும் தேவ்பாவும் அதையேதான் செய்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளால் பழைய வழக்கத்தைத் தாண்டிச் செல்ல முடியவில்லை,” என்று பட்டராய் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

இந்திய கம்யூனிஸ்டுகள் vs நேபாள கம்யூனிஸ்டுகள்

“நேபாளத்தின் கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகவும் மையப்படுத்தப்பட்டவை. பிராமணர்களிலும் செல்வந்தர்கள் மற்றும் ஆண்களுக்கு அதிகாரம் இருக்கிறது. இங்கும் ஏழைகள் மற்றும் பெண்களை காணவில்லை. பழைய கம்யூனிச சிந்தனை உலகம் முழுவதும் சிதைந்து வருகிறது. அதனால்தான் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளன. இதில் சாதியும் முக்கியமான பிரச்னை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை விட நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகள் முற்போக்கானவை என நினைக்கிறேன்,” என்றார் அவர்.

டென்மார்க்கில் நேபாள தூதராக விஜயகாந்த் கர்ணா இருந்துள்ளார். அவர் காத்மாண்டுவில் 'சமூக உள்ளடக்கம் மற்றும் கூட்டாட்சி மையம்' (CEISF) என்ற பெயரில் ஒரு சிந்தனைக் குழுவை நடத்தி வருகிறார்.

பாபுராம் பட்டராய் கூறியதை கர்ணா ஏற்கவில்லை.

“நேபாள பிராமணர்களோ அல்லது அவர்கள் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிகளோ இந்தியாவில் உள்ளவர்களை விட முற்போக்கானவர்கள் என்பதில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலித்துகள், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் மதச்சார்பின்மைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் நேபாளத்தின் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இது இல்லை. நேபாளத்தின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அதிகாரம் பணக்கார பிராமணர்களின் கைகளில் உள்ளது அவர்களின் நோக்கம் எப்படியாவது அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதுதான்,” என்று அவர் கூறினார்.

“1990-களில் நேபாளத்தில் மாவோயிஸ்ட் மக்கள் போர் நடந்து கொண்டிருந்த போது இதே தலைவர்கள் தலித்துகள், மதேசிகள், பெண்கள், மதச்சார்பின்மை என்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அனைவரும் இந்த விஷயங்களை ஒதுக்கி விட்டனர். பிரசண்டாவின் கட்சியைச் சேர்ந்த ஒரு மதேசி அல்லது பழங்குடியினர் ஏன் பிரதமராக முடியாது? பிரசண்டா அல்லது பாபுராம் பட்டராயை அவ்வாறு செய்யவிடாமல் யார் தடுத்தார்கள்,” என்று விஜயகாந்த் கர்ணா வினவினார்.

முக்கிய அமைச்சகங்களை ஆக்கிரமித்துள்ள கஸ் ஆர்யாக்கள்

“பிரசண்டா அமைச்சரவையில் இப்போது மகேந்திர ராய் என்ற பெயரில் ஒரு மதேசி அமைச்சர் உள்ளார். அவருக்கும் முக்கியமான அமைச்சகம் எதுவும் கிடைக்கவில்லை. மதேசி இயக்கத்தை எந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரிக்கவில்லை. ஏன் அப்படி? ஏழைகளின் உரிமைக்கான இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்க்கின்றனவா? அப்படி ஒரு விஷயத்தை நான் பார்த்ததில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் அதிகாரமும் பிராமணர்களிடம் இருந்தது, ஆனால் அவர்கள் எப்போதும் தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் மதச்சார்பின்மைக்கு ஆதரவாக நின்றார்கள். நேபாளத்தின் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இது இல்லை,” என்று கர்ணா கூறினார்.

நேபாளத்தில் உள்ள சாதி அமைப்பு குறித்துப்பேசிய பாபுராம் பட்டராய், "நேபாளம் வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முற்றிலும் மாறுபட்ட நாடு. நான் சண்டிகர் மற்றும் இந்தியாவின் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 13 ஆண்டுகள் படித்துள்ளேன். மேலும் இந்திய மக்கள் நேபாளத்தை பெரிய இந்தியாவின் ஒரு பகுதியாக கருதுகிறார்கள் என்பதை நான் அறிவேன். புவியியல் இடத்திலிருந்து நேபாளத்தின் மக்கள்தொகையைப் பார்த்தால், அது தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியாவில் பாதி பாதியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேபாளம் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தம் என்று டெல்லி நினைக்கிறது,” என்றார்.

“நேபாளம் ஒரு பன்முக கலாசார மற்றும் பல மத நாடு. இங்கு இந்துக்கள் மட்டும் வாழவில்லை. கஸ் ஆரியர்கள் இந்து மதத்தை பின்னாளில் திணித்தனர். நேபாளத்தில் பிராமணர்கள் மற்றும் சேத்திரிகள் என்று அழைக்கப்படும் இந்த கஸ் ஆரியர்கள் இந்தியாவிலிருந்து ஓடி வந்தவர்கள். இவர்கள்தான் நேபாளத்தில் சாதி அமைப்பை வலுப்படுத்தினார்கள். நான் ஒரு இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தேன். என் தந்தை இன்னும் ஒரு பக்தியுள்ள இந்து. ஆனால் நான் ஒரு நாத்திகன். நேபாளம் முற்றிலும் வேறுபட்டது என்று நான் கூற விரும்புகிறேன். நேபாளத்தின் சமூகம் இந்தியாவைப் போல் இல்லை. நேபாளத்திற்கு அதன் சொந்த வரலாறு உண்டு. இங்குள்ள பிராமணர்கள் இந்திய பிராமணர்களைப் போல் தீண்டாமையை கடைப்பிடிப்பதில்லை,”என்று அவர் குறிப்பிட்டார்.




கருத்தியல் குழு

ஆஹுதி நேபாளத்தைச் சேர்ந்த பிரபல கவிஞர் மற்றும் தலித் சிந்தனையாளர் ஆவார். அவர் சயிண்டிஃபிக் ஸோஷியலிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்.

நேபாளத்தில் பிராமணர்களின் மேலாதிக்கத்திற்கு சித்தாந்த மந்தநிலை ஒரு முக்கிய காரணம் என்று ஆஹுதி கருதுகிறார்.

“முதலாளித்துவம் தோன்றிய இடத்தில் சாதி அமைப்பு இருக்கவில்லை. நார்வேயில் இருந்து முதலாளித்துவம் தொடங்கியதாக நம்பப்படுகிறது. முதலாளித்துவம் என்ற போர்வையில் நடந்த எல்லா மாற்றங்களிலும் சாதி அமைப்பு பற்றிய சிந்தனையோ கவலையோ இல்லை. இந்தியாவிலும் முதலாளித்துவம் மறுமலர்ச்சி வடிவத்தில் வரவில்லை. அது காலனித்துவ வடிவில் வந்தது. காலனித்துவம் சாதிக்கு எதிராக எந்தப் போரையும் நடத்த வேண்டியிருக்கவில்லை. இந்தியாவைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்,” என்று ஆஹூதி குறிப்பிட்டார்.

“காலனித்துவ வடிவில் இந்தியாவிற்கு வந்த முதலாளித்துவ சித்தாந்தம் தனது நலன்களை நிறைவேற்ற சாதி அமைப்பை பயன்படுத்தியது. ஆங்கிலேயர்கள் சாதியை அமைப்பிலிருந்து விலக்காமல் அதை அதன் ஒரு பகுதியாக மாற்றினர். முதலாளித்துவம் மூலதனத்தை உருவாக்க ஒவ்வொரு பாரம்பரிய பழக்கங்களையும் பயன்படுத்தியது, அதை தடுக்கவில்லை. சாதி அமைப்பு முதலாளித்துவத்திற்கு சவாலாக இருக்கவில்லை. ஆனால் சாதி அமைப்பு மார்க்ஸியத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆனால் மார்க்ஸியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் சாதியை உயிருடன் வைத்து அதை செய்ய முடியாது,” என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images

முதலாளித்துவம் vs மார்க்ஸியம்

“இதே முதலாளித்துவம் நேபாளத்திற்கு வந்தது. நேபாளத்தில் தரகு முதலாளித்துவம் வந்தது. இங்கு நமக்கென்று ஒரு முதலாளியும் இல்லை. இந்தியாவில் இருந்து முதலாளித்துவம் பன்னாட்டு நிறுவனங்களின் தரகு வடிவில் நேபாளத்திற்கு வந்தது. இந்தியாவில் தொழில்துறை மற்றும் முற்போக்கான முதலாளித்துவம் இல்லாததைப் போலவே, நேபாளத்திலும் முதலாளித்துவம் தரகு வடிவில் வந்தது. இந்த முதலாளித்துவத்திற்கு சாதியை எதிர்த்து போராட எந்த எண்ணமும் இல்லை. இந்த விஷயத்தில் அம்பேத்கரின் புரிதலையும் நான் சந்தேகிக்கிறேன். மதம் மாறினால் சாதி பாகுபாடு ஒழிந்துவிடும் என்று அம்பேத்கர் நினைத்தார். இது முற்றிலும் தவறான புரிதல். அம்பேத்கரின் அரசியல் கொள்கை முற்றிலுமாக தோல்வியடைந்தது,”என்று ஆஹூதி கூறினார்.

“முதலாளித்துவம் தோன்றிய இடத்தில், சாதி அமைப்பு இருக்கவில்லை. அதே போல் மார்க்ஸியம் தோன்றிய இடத்திலும் சாதி அமைப்பு இல்லை. மார்க்ஸ் கூட சாதி அமைப்பு பற்றி எதுவும் சொல்லவில்லை. சோவியத் யூனியனில் மார்க்ஸிய சித்தாந்தத்தின் அடிப்படையில் புரட்சி நடந்தது, ஆனால் அங்கு சாதி இல்லை. இந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் சீனாவிலும் புரட்சி ஏற்பட்டது, அங்கேயும் சாதி அமைப்பு இல்லை.” என்றார் அவர்.

"ருமேனியாவில் இருந்து செக்கோஸ்லோவாக்கியா வரை புரட்சி நடந்தது. ஆனால் அங்கு சாதி இல்லை. மார்க்ஸியம் நேபாளத்திற்கு வந்தது. ஆனால் சாதி அமைப்பை ஒழிப்பதற்கான மருந்து எதுவும் அதனிடம் இருக்கவில்லை. அதன் முன்னுரிமை ’வர்க்கம்’ மீது இருந்தது. சாதியை அது கவனிக்கவில்லை. வர்க்கம் என்பது சாதியுடன் தொடர்புடையது என்று அவர்களுக்குத்தெரியும். ஆயினும் அவர்கள் அதைப் புறக்கணித்து வந்தனர்,” என்று ஆஹூதி சுட்டிக்காட்டினார்.

பட மூலாதாரம், Getty Images

கருத்தியல் அர்ப்பணிப்பு

பிராமணர்களிடம் தலைமை பொறுப்பு இருப்பதில் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் முற்போக்கு சிந்தனை கொண்ட பிராமணர்கள் இல்லாததுதான் பிரச்னை என்கிறார் ஆஹுதி.

நேபாள முன்னாள் வெளியுறவு அமைச்சர் உபேந்திர யாதவ் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்து ஜனநாயகம் மலர்ந்த போது நேபாளத்தின் ஆட்சிமுறையில் அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அவரிடம் கேட்டேன்.

"மன்னராட்சியில் க்ஷத்திரியர்கள் ஆட்சியில் இருந்தனர். ஜனநாயகம் வந்த பிறகு அது பிராமணர்களின் கைகளுக்கு மாறிவிட்டது. இந்த இருவருக்கும் இடையே ஆட்சி கைமாறிக்கொண்டிருந்தது. அரசு, ராணுவம், போலீஸ், நிர்வாகம் மற்றும் முழு கல்வி முறையிலும் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்,” என்று அவர் பதில் அளித்தார்.

“நேபாளத்தில் முதன்முறையாக ஒரு பிராமணர் ராணுவ தளபதியாக ஆகியுள்ளார். மன்னராட்சி முறையில் ராணுவத் தலைவர்கள் அனைவரும் சேத்ரிகளாக இருந்தனர். நேபாளத்தின் எந்தவொரு ராணுவத் தலைவரும், யாதவ், மஹதோ அல்லது பழங்குடியின சமூகத்திலிருந்து வருவார் என்று கற்பனை செய்வது கூட இப்போது கடினம். நான்கு பிராமணர்களும் ஒரு சேத்ரியும் சேர்ந்துதான் அரசியலமைப்பை உருவாக்கினார்கள்.

அரசியலமைப்பு அனைவரையும் உள்ளடக்கியதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் அனுமதிக்கவில்லை. மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை, மாவோயிஸ்ட் மக்கள் போராட்டத்திற்கு அளிக்கப்படுகிறது. ஆனால் அதில் துப்பாக்கியை கையில் எடுத்தது யார்? அது பிராமணர்கள் இல்லை என்பது வெளிப்படை. தாரு, மகர், ஷெர்பா, யாதவ் மற்றும் மஹ்தோ ஆகியோர் துப்பாக்கியை கையில் எடுத்தனர்.

போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களும் இந்த சாதியினரே. ஆனால் தலைமைத்துவம் அன்றும் பிராமணர்களிடம் இருந்தது இன்றும் அவர்களிடமே உள்ளது,” என்று உபேந்திர யாதவ் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள நேபாள தூதர்களில் 90% பேர் பிராமணர்கள் என்று விஜயகாந்த் கர்ணா கூறுகிறார்.

நேபாளத்தில் சாதி மேலாதிக்கத்தின் வேர்கள் மிகவும் ஆழமானவை என்றும் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவர தங்கள் உயிரை பணயம் வைத்தவர்கள் இன்றைய தேதியில் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள் என்றும் கர்ணா தெரிவித்தார்.

நிபா ஷா நேபாளத்தின் புகழ்பெற்ற கவிஞர். இந்த அவநம்பிக்கையை அவர் தனது 'ஆக் ததக் ரஹி ஹை மன்சரா' என்ற கவிதையில் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த கவிதை நேபாளி மொழியில் உள்ளது. அதன் தமிழ் மொழியாக்கம் இதோ…

வியர்வை சிந்துவதால்

உலகம் மாறும் என்றால்

கூலி உலகம்

வெகு காலத்திற்கு முன்பே மாறியிருக்கும்

ரத்தம் சிந்துவதன் மூலம்

உலகம் மாறும் என்றால்

பொதுமக்களின் உலகம்

வெகு காலத்திற்கு முன்பே மாறியிருக்கும்

உண்மையில் ரத்தம் மற்றும் வியர்வையால்தான்

உலகம் மாறும்

உலகம் உருவாகும்

ஆனால் சிந்திய வியர்வை மற்றும் ரத்தத்தால் உலகம் மாறவில்லை

ஏன் மாறவில்லை?

கொழுந்துவிட்டெரியும் நெருப்பின் ஒலியை

கேட்டிருக்கிறீர்களா?

நெருப்பு எரிகிறது

ஆனால் நம் விறகை

வேறு யாராவது எரித்தால்

நெருப்பு நம்முடையது அல்ல

அதன் ஒளியும் நம்முடையது அல்ல

ஒளி நம்முடையது இல்லையென்றால்

உலகம் மாறவே மாறாது.

கருத்துகள் இல்லை: