வெள்ளி, 26 மே, 2023

திராவிடப் பண்பாட்டுப் பாதுகாப்புக் கூட்டணி உருவாகிறது ஆசிரியர் கி.வீரமணி

 tamil.samayam.com :  திராவிடப் பண்பாட்டுப் பாதுகாப்புக் கூட்டணியை திராவிடர் கழகம் உருவாக்கும் என திமுகவின் தாய் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திராவிடர் கழகத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 ‘‘சிந்துவெளி நாகரிகம், பண்பாடு என்பது இன்று, நேற்று தோன்றியதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றிய காலத்தால் மூத்த நாகரிகம், பண்பால் பழுத்த நாகரிகம்! சில காவிகள் - சரியான ஆய்வறிவு இல்லா அறிவு சூன்யர்கள்,
'வெள்ளைக்கார கிறிஸ்துவப் பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் போன்றவர்களால் திராவிடம் உருவாக்கப்பட்டது' என்று கூறியும் எழுதியும் தங்களது கட்டை அறிவை உலகத்தாருக்குப் பறைசாற்றுகிறார்கள்.


அவர்களது மனுதர்மம் வேதத்தின் விழுது 'ஸ்மிருதி' என்றும், அது 'சுருதி'யிலிருந்து மாறுபட்டது என்றும் கூறுவோர் அதில் திராவிடம் பற்றி (அத்தியாயம் - 10 சுலோகம் - 22, 44) இடம் பெற்றிருப்பது கால்டுவெல் காலத்திற்கு முன்பா? பின்பா? பாகவத புராணத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக் கிறதே - அதை எந்த வெள்ளைக்காரன் எழுதினான் என்ற தந்தை பெரியாரின் கேள்விக்கு இன்றுவரை பதில் உண்டா?

சர். ஜான் மார்ஷல் என்ற வெளிநாட்டு தொல் பொருள் ஆய்வாளர் 100 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி நாகரிகத்தை பழைய முன்னோடியான திராவிட நாகரிகம் என்றார்; அத்தகைய புதை பொருள் ஆய்வில் ஈர்ப்பு கொண்ட (பாதர்) ஹீராஸ் பாதிரியார் 1945-இல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பேசியபோது, "நான் கிரேக்கத்திலிருந்து வந்த திராவிடன் பேசுகிறேன்" என்று தனது அறிமுக உரையைத் துவக்கியபோது மாணவர்கள் கைத்தட்டல் வானைப் பிளந்தது!

சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் அங்கு பேசப்பட்ட மொழி தமிழ் என்பதை பல தரவுகள் மூலம் ஒடிசா அரசின் மேனாள் தலைமைச் செயலாளரும், சிறந்த ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன் சிறப்பாக ஏறத்தாழ, சுமார் 1000 பக்கங்கள் கொண்ட நூலை முன்பு ஆங்கிலத்தில் எழுதி பிறகு தமிழிலும் கொண்டு வந்துள்ளார்கள்! வருகிற 2024இல் திராவிட நாகரிகம் பிரகடன அறிவிப்பின் நூற்றாண்டு விழா தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில் பண்பாட்டுப் படையெடுப்பைத் திட்டமிட்டு நடத்தும் ஆர்.எஸ்.எஸ். ஆரியம், முன்பு அமெரிக்காவில் சில போலி ஆய்வாளர்களை கூலிக்கு அமர்த்தியோ என்னவோ, சிந்துவெளி மொஹஞ்சதாரா, ஹரப்பா அகழ்வாய்வில் கிடைத்த (திராவிடர்களின்) காளை மாட்டுச் சின்னத்தை அப்படியே மாற்றி (ஆரியர்களின்) குதிரைச் சின்னமாக மாற்றியது அம்பலப்படுத்தப்பட்டது.

இப்போது அங்குள்ள கறுப்பான ஒரு சிலையை வெள்ளையடித்து (இல்லாத) சரஸ்வதி நாகரிகம் என்று இட்டுக்கட்டி ஒரு புதிய புரட்டினை ஆய்வுச் சரக்குபோல் வெளியே விட்டுள்ளனர்! இதைக் கண்டித்து எதிர்த்து மதுரை (மார்க்சிஸ்ட் கட்சி) எம்.பி. வெங்கடேசன் உடனடியாக இந்தப் புரட்டினைச் சுட்டிக் காட்டியுள்ளார். செத்தமொழி சமஸ்கிருதத்தை சிம்மாசனத்தில் ஏற்றவே இப்படி இடையறாத 'பம்மாத்து' வேலைகளைக் கூச்ச நாச்சமின்றி செய்வது ஆரியத்துக்கு கைவந்த கலை!

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் பணிகளில் முக்கியமானது தத்துவங்களை மதமாக மாற்றுவதாகும். ஆன்மீகப் புராணங்களை வரலாறு என்றும், போலி அறிவியலை (Pseudo Science) உண்மை அறிவியல் போல புனைவதும் இதுபோல பண்பாடுகளைத் தமதாக்கி இல்லாதவைகளை முந்தைய காலக் கணக்கீடுகளைப் போன்றும் புரட்டி விடுவார்கள்.
செங்கோல்.. ஒரே ஒரு கேள்வியால் அமித் ஷாவை அலறவிட்ட தமிழ் நிருபர்.. இப்படி பண்ணிட்டாரே..
இதனை எதிர்த்து ஒரு மாபெரும் பண்பாட்டுப் பாதுகாப்பு புரட்சி இயக்கத்தை, பிரச்சாரம் - கிளர்ச்சி இருமுனை இயக்கமாக ஆக்கிட அனைத்து முற்போக்காளர்களையும் சுற்றுச் சூழல் பாதுகாவலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் - தொல்லியல் ஆர்வலர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து விரைவில் ஒரு திராவிடப் பண்பாட்டுப் பாதுகாப்புக் கூட்டணியை திராவிடர் கழகம் உருவாக்கும். ஒத்த கருத்துள்ள அனைவரும் ஆதரவு தாரீர்! தாரீர்!!’’ என அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: