வியாழன், 25 மே, 2023

இலங்கை எம்பி அலி சபரி 3.5 கி.கி. (3.397kg) தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிடிபட்டார்

ilakkiyainfo.com : அலி சப்ரி ரஹீம் எம்.பி. அபராதத்துடன் விடுவிப்பு; ரூ. 8 கோடி பொருட்களும் அரசுடமை
சுமார் 3.5 கி.கி. (3.397kg) தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்கவில் சுங்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் அனைத்து ரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக, பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


கணக்கில் காட்டப்படாத குறித்த தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ரூ. 74 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள பேச்சாளரும் அதன் பணிப்பாளருமான சுதத்த சில்வா குறிப்பிட்டார்

குறித்த பணத்தை சந்தேகநபர் செலுத்தியதைத் தொடர்ந்து அவர் இன்று (24) காலை விடுவிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று (23) காலை ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயிலிருந்து Fly Dubai விமானம் FZ547 இலிருந்து இலங்கைக்கு வந்த, விசேட நபர்களுக்காக ஒதுக்கப்பட்ட வாயில் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கத்தின் வருமான கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டார்.

இதன்போது, அவரது பயணத் பொதிகளை சோதனையிட்ட போது, ​​அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 74 மில்லியன் (ரூ. 7.4 கோடி) பெறுமதியான 3 கிலோ 397 கிராம் நிறை கொண்ட தங்க பிஸ்கட்கள் மற்றும் நகைகள் ரூ. 4.2 மில்லியன் (ரூ. 42 இலட்சம்) பெறுமதியான 91 ஸ்மார்ட் போன்கள் மீட்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த பொருட்களின் மொத்த சந்தைப் பெறுமதி ரூ. 78.2 மில்லியன் (ரூ. 782 இலட்சம்/ சுமார் ரூ. 8 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள பேச்சாளரும் அதன் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை: