புதன், 17 மே, 2023

கர்நாடக முதல்வராக சித்ராமய்யாவுக்கே வாய்ப்பு அதிகம்! ஏன்? எப்படி?

 tamil.oneindia.com -    noorul Ahamed Jahaber Ali  : பெங்களூரு: கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையாவை காங்கிரஸ் கட்சி மீண்டும் தேர்வு செய்து இருப்பதற்கான காரணம் என்ன? டிகே சிவக்குமாரை விட சித்தராமையாவிடம் இருக்கும் பிளஸ் என்ன என்று விரிவாக பார்ப்போம்.
கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் கடந்த மே 10 ஆம் தேதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபையில் 113 இடங்களில் பிடிக்கும் கட்சி பெரும்பான்மை பலத்து ஆட்சியை பிடிக்கும்.
கடந்த மே 13 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றாலும் யார் முதலமைச்சர் என்ற குழப்பம் தொடர்ந்து வருகிறது. அதற்கு காரணமாக அம்மாநில காங்கிரஸ் கட்சியில் பெரும் தலைகளாக இருக்கும் மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமாரும் இடையே நிலவி வரும் போட்டி.

இது தொடர்பாக இரு தலைவர்களையும் அழைத்தே காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டார்கள். தேர்தல் முடிவு வெளியாகி 4 நாட்கள் கடந்த பிறகு முதலமைச்சரை இறுதி செய்வதில் குழப்பங்கள் தொடர்ந்து வந்தன.

இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதலமைச்சரை தேர்வு செய்யும் அதிகாரத்தை தேசிய தலைமையிடம் எம்.எல்.ஏக்கள் வழங்கி இருக்கின்றனர். அதை தொடர்ந்து இரு தலைவர்களும் டெல்லிக்கு அழைக்கப்பட்டு 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இதில் டிகே சிவக்குமார் தனக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தால் ஏற்பதாகவும், இல்லாவிட்டால் துணை முதலமைச்சர், அமைச்சர் என எந்த பதவியும் வேண்டாம் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் முதலமைச்சர் சித்தராமையா என்றும், துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் எனவும் குறிப்பிட்டு கர்நாடகா மாநில உத்தேச அமைச்சரவை பட்டியல் ஒன்றும் வெளியானது.

இந்த நிலையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தற்போது சித்தராமையாவை கர்நாடகா மாநில முதலமைச்சராக மீண்டும் ராகுல் காந்தி தேர்வு செய்து உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் - மஜக ஆட்சி கவிழ்ப்பு தொடர்ங்கி, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, 2023 சட்டசபைத் தேர்தல் என அனைத்திலும் காங்கிரஸ் கட்சி சார்பில் சித்தராமையாவை விட அதிக பங்களிப்பு செய்தவர் டிகே சிவக்குமார்.

இவரது கடின உழைப்பாலேயே இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றதாக கூறப்படும் நிலையில், சித்தராமையாவையே மீண்டும் காங்கிரஸ் தலைமை தேர்வு செய்து இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. அதை பார்ப்போம். முன்னாள் முதலமைச்சரான சித்தராமையா மாநிலம் முழுவதற்குமான மாஸ் லீடராக விளங்கி வருகிறார். ஆனால், டிகே சிவக்குமார் தென் கர்நாடகாவிற்கான தலைவராக மட்டுமே உள்ளார்.

அதேபோல் சித்தராமையா தலித், இஸ்லாமியர், குருபர் ஆகிய சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக செல்வாக்கை பெற்று இருக்கிறார். இதற்காக அகிந்தா என்ற அமைப்பையே நடத்தியவர் சித்தராமையா. இந்த முறை இந்த ஓட்டுகள் மொத்தமாக காங்கிரசுக்கு வந்தன. ஆனால் டிகே சிவக்குமாருக்கு வொக்கலிகர்களின் ஆதரவே அதிகம் உள்ளது.

அதுமட்டுமின்றி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் சித்தராமையாவிற்கே அதிக ஆதரவு இருக்கிறது. அதேபோல் ஏற்கனவே 5 ஆண்டுகள் கர்நாடகா முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்த அனுபவம் உள்ளவர் சித்தராமையா. கர்நாடக மாநில நிதியமைச்சராக 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் சித்தராமையா.

இது அல்லாமல் டிகே சிவகுமாரை கர்நாடக முதலமைச்சராக்க காங்கிரஸ் தயங்குவதற்கான முக்கிய காரணம் அவர் மீது இருக்கும் சிபிஐ வழக்குகள். 2024 லோக் சபா தேர்தலுக்கு முன்பாக டிகே சிவகுமார் மத்திய புலனாய்வு நிறுவனங்களிடம் சிக்கினால் தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என்பது காங்கிரஸ் மேலிடத்தின் அச்சம்.

English summary
Reason for the Congress party re-elected Siddaramaiah as the Chief Minister of Karnataka. Let us see in detail what are the advantages of Siddaramaiah over DK Sivakumar.

கருத்துகள் இல்லை: