திங்கள், 15 மே, 2023

கர்நாடக முதல்வர் பதவிக்கு வரப்போவது யார்? காங்கிரஸ் தலைமை யாரை தேர்ந்தெடுக்கும்?

கர்நாடக தேர்தல்

BBC News - அபிநவ் கோயல்  ;  கர்நாடகாவில் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும் பான்மையை அளித்துள்ளனர். தற்போது காங்கிரஸ் முழு பெரும் பான்மையுடன் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.
முடிவுகள் வந்துவிட்டபோதிலும் முதல்வர் நாற்காலியில் யார் அமர்வார்கள் என்ற ஒரு கேள்வி இப்போது எல்லோர் மனதிலும் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்தப் பந்தயத்தில் மூன்று பெயர்கள் அடிபடுகின்றன.
அவர்கள் முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.


வெற்றிக்குப் பிறகு காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்கள் முன் வந்து, உணர்ச்சிவசப்பட்டுப் பேசினர். முதல்வர் பதவி தொடர்பாக கர்நாடகாவில் இரு தலைவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையே போஸ்டர் போர் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

சித்தராமையா ஒருமுறை கர்நாடக முதலமைச்சராக இருந்தவர். டி.கே.சிவகுமாரின் இந்த ஆசை நீண்ட நாட்களாக நிறைவேறாமல் உள்ளது. இந்த முறை அதை நிறைவேற்றிக் கொள்ள அவர் விரும்புகிறார்.

கர்நாடக முதல்வராக வரப்போவது யார்?

இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறிய, பல ஆண்டுகளாக கர்நாடக அரசியலை உன்னிப்பாகக் கவனித்து செய்திகளை அளித்து வரும் மூத்த செய்தியாளர்களிடம் பேசினோம்.

டி கே சிவகுமார்

முதலில் டி.கே.சிவகுமார் பற்றிப் பேசுவோம்.

2020ஆம் ஆண்டில், கர்நாடக மாநில தலைவர் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாநிலத்தில் காங்கிரஸ் மிக மோசமான நிலைமையில் இருந்த நேரம் அது. சித்தராமையா அமைச்சரவையில் இருந்த பல அமைச்சர்கள்கூட தேர்தலில் தோல்வியைத் தழுவினர்.

டிகே சிவக்குமார் காங்கிரஸ் கட்சியின் பழைய விசுவாசி. அவர் மாநிலத்தில் வொக்கலிகா சமூகத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

1989ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு காங்கிரஸை விட்டு அவர் வேறு எங்கும் செல்லவில்லை.

கனகபுரா தொகுதியில் எட்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றுள்ளார்.

2019ஆம் ஆண்டில் பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் டெல்லியின் திகார் சிறையில் அவர் சுமார் இரண்டு மாதங்கள் கழிக்க வேண்டியிருந்தது.

டி.கே.சிவகுமார் முதல்வராகும் வாய்ப்பு குறித்துப் பேசிய மூத்த செய்தியாளர் எம்.கே.பாஸ்கர் ராவ், அந்த வாய்ப்பு 60-40 என்ற விகிதத்தில் உள்ளது என்றார்.

"இந்த 60 சதவிகித ஆதரவு ஹைகமாண்டின் ஆதரவு. காங்கிரஸ் தலைமையில், கார்கே, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் அவரை விரும்புகிறார்கள். மேலும் அவரது ஆதரவிலும் காணப்படுகிறார்கள். அவர் கட்சித் தலைவராக ஆன பிறகு இரவும் பகலும் கடினமாக உழைத்தார்,” என்று அவர் கூறினார்.

”இக்கட்டான காலங்களில் அடிமட்டத் தொண்டர்களில் இருந்து உயர் தலைமை வரை காங்கிரஸில் நம்பிக்கையை வளர்க்கும் பணியை அவர் செய்துள்ளார்."

காங்கிரஸ் மேலிடத்துடன் அவருடைய நெருக்கம் பற்றி மூத்த செய்தியாளர் ஹேமந்த் அத்ரியும் பேசுகிறார்.

"ராஜஸ்தானில் மாநில தலைவர் சச்சின் பைலட் தலைமையில் தேர்தல் நடந்தது. ஆனால் ஆட்சி அமைக்கும் நிலை வந்தவுடன் அஷோக் கேலாட்டுக்கு முதல்வர் நாற்காலி வழங்கப்பட்டது. கர்நாடகாவிலும் இது போன்ற ஏதாவது நடக்கலாம்," என்று ஹேமந்த் அத்ரி கூறுகிறார்.

“கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தை டி.கே.சிவகுமார் முன்னின்று நடத்தினார் என்று கூறலாம். நிதியளித்ததுடன் கூடவே நீண்ட நாட்களாக உழைத்தார். ஆனால் 2024க்கு முன் எந்த ரிஸ்கையும் எடுக்க காங்கிரஸ் விரும்பவில்லை. ஏனென்றால் முன்பு ஆபரேஷன் லோட்டஸ், ஜே.டி.எஸ் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை உடைத்துவிட்டது. எனவே இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்க்க அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்."

கர்நாடகாவின் மக்கள் தீர்ப்பை மக்களவை இடங்களாக மாற்ற காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. எனவே மாநிலத் தலைமைக்கு இடையே சண்டையை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் அது எடுக்காது என்று அவர் கூறினார்.

சிவகுமார் மீது அமலாக்கத்துறையின் வழக்கு இருக்கிறது. இது அவரது வாய்ப்பை பலவீனப்படுத்துகிறது என்று ஹேமந்த் அத்ரி குறிப்பிட்டார். அவர் மிகவும் திறமைசாலி மற்றும் போராடும் ஆற்றல் கொண்டவர் என்பதால் அவர் முதல்வர் ஆவதை பாஜக ஒருபோதும் விரும்பாது.

பட மூலாதாரம், Getty Images

சித்தராமையா

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மீண்டும் முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளராகக் கருதப்படுகிறார்.

1983ஆம் ஆண்டு முதல்முறையாக கர்நாடக சட்டப்பேரவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994இல் ஜனதா தளம் ஆட்சியில் இருந்தபோது கர்நாடகாவின் துணை முதல்வரானார். எச்.டி.தேவே கெளடாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு சமய சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகி 2008இல் காங்கிரஸில் இணைந்தார்.

2013 முதல் 2018 வரை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். இதுவரை 12 தேர்தல்களில் போட்டியிட்டுள்ள அவர் ஒன்பது முறை வெற்றி பெற்றுள்ளார்.

முதலமைச்சராக இருந்தபோது ஏழைகளின் நலனுக்கான அவரது பல திட்டங்கள் மிகவும் பாராட்டப்பட்டன. ஏழு கிலோ அரிசி வழங்கிய அன்ன பாக்ய யோஜனா, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு 150 கிராம் பால், இந்திரா கேன்டீன் ஆகியவை இவற்றில் அடங்கும்.

லிங்காயத் மற்றும் இந்து வாக்காளர்கள் மத்தியில் டி.கே.சிவகுமாரை விட குறைவான பிரபலமாக அவர் கருதப்படுகிறார். மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானின் பிறந்தநாளை பிரமாதமாகக் கொண்டாடியது, பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்புகளின் உறுப்பினர்களை சிறையில் இருந்து விடுவித்தது போன்றவை இதற்கான காரணங்கள்.

சித்தராமையாவின் வாய்ப்பு சிவகுமாரைவிட பலவீனமானது என்று மூத்த செய்தியாளர் எம்.கே.பாஸ்கர் ராவ் கூறினார். கடந்த ஐந்தாண்டுகளில் சிவகுமார் செய்த கடின உழைப்புக்கான வெகுமதியை அவர் இந்த முறை பெறக்கூடும் என்றார் அவர்.

"இருவருக்கும் இடையே ஏற்கெனவே பனிப்போர் நடந்து வருகிறது, அது வருங்காலத்திலும் தொடரும். சித்தராமையா ஐந்து ஆண்டுகள் முதல்வராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். கடந்த 35 ஆண்டுகளாக சித்தராமையாவை எனக்குத் தெரியும். டி.கே.சிவகுமார் அமைச்சரவையில் துணை முதலமைச்சர் பதவியை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்,” என்றார் அவர்.

"சித்தராமையா அமைதியாக இருக்க மாட்டார். சிவகுமாருக்கு எதிராக நிச்சயம் ஏதாவது செய்வார்," என்கிறார் எம்.கே.பாஸ்கர் ராவ்.

மறுபுறம் மூத்த செய்தியாளர் ஹேமந்த் அத்ரி, முதல்வர் பதவிக்கான மிகப்பெரிய போட்டியாளராக சித்தராமையாவை கருதுகிறார்.

”இதற்கு முன் சித்தராமையா முதலமைச்சராக இருந்தவர். காங்கிரஸ் தலைமையுடன் நல்ல அரசியல் தொடர்பு உள்ளவர். இது தனக்கு கடைசி தேர்தல் என்று அவரே கூறியிருப்பதால் அவருக்கு முதல் வாய்ப்பை காங்கிரஸ் தரலாம்,” என்கிறார் அவர்.

‘‘கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகள் ஃபார்முலாவை காங்கிரஸ் கொண்டுவரக்கூடும். இதன்கீழ் சித்தராமையாவுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்படலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் காங்கிரஸின் இந்த ஃபார்முலா சத்தீஸ்கரில் வெற்றி பெறவில்லை

இந்த இரு தலைவர்களைத் தவிர, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளது.

தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வர் பதவியை ஏற்பீர்களா என்று தேர்தலுக்கு முன் பல சந்தர்ப்பங்களில் அவரிடம் கேட்கப்பட்டது.

நீலம் சஞ்சீவ ரெட்டியை போல தான் முதல்வர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று ஏப்ரல் மாதம் கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தெளிவாகக் கூறியிருந்தார்.

1962இல் நீலம் சஞ்சீவ ரெட்டி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது ஆந்திர பிரதேச முதல்வர் பதவிக்கான போட்டியில் ஈடுபட்டார்.

முதலமைச்சராக வர முடியவில்லையே என்ற வேதனை கார்கேவின் உள்ளத்தில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். கர்நாடக முதல்வர் பதவி அவரிடமிருந்து மூன்று முறை கை நழுவிப்போனது.

1999இல் ஹை கமாண்ட், எஸ்.எம்.கிருஷ்ணாவை முதல்வராக்கியது இரண்டாவது முறையாக ஜேடிஎஸ் தலைவர் எச்டி தேவகெளடா, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி அரசை வழிநடத்த கார்கேவைவிட தரம் சிங் பொருத்தமானவர் என்று நினைத்தார். மூன்றாவது முறையாக 2013இல் சித்தராமையா தனக்கு ஆதரவாக எம்எல்ஏக்களை வளைத்து கார்கேவை ஓரங்கட்டினார்.

ஆனால் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கார்கேவுக்காக முதல்வர் நாற்காலியை தியாகம் செய்வதாக டி.கே.சிவகுமார் பேசியுள்ளார்.

அரசியல் ஆய்வாளர் டி. உமாபதி, ஏப்ரல் மாதம் பிபிசி இந்தி இணை செய்திகையாளர் இம்ரான் குரேஷியிடம் பேசுகையில், "கார்கே முதல்வர் நாற்காலியில் அமர விரும்பினார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இப்போது காங்கிரஸ் தலைவராக அவர், முதல்வர் பதவிக்கு மேலே உயர்ந்துவிட்டார்,” என்றார்.

"அவர் அதிலிருந்து கீழே வர விரும்பமாட்டார். அவரது சுயமரியாதை அதை அனுமதிக்காது. குலாம் நபி ஆசாத் மற்றும் காங்கிரஸ் தலைவர் கபில் சிப்பலை சந்திக்க கார்கே காத்திருக்க வேண்டிய காலம் இருந்தது. இன்று அவரைச் சந்திக்க பல தலைவர்கள் காத்திருக்கிறார்கள்."

மல்லிகார்ஜுன கார்கே முதல்வர் பதவியை ஏற்க மறுப்பதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. தமிழகம், தெலங்கானா அரசியல் போல கர்நாடக அரசியல் இல்லை என்று மூத்த செய்தியாளர் எம்.கே.பாஸ்கர் ராவ் கூறுகிறார்.

“கர்நாடகா அரசியலுக்கு அவர் திரும்பினால் மகனின் அரசியல் எதிர்காலத்தை அவர் பணயம் வைக்க வேண்டியிருக்கும். அவர் ஸ்டாலின் செய்தது போல் மகனை தன் அமைச்சரவையில் அமைச்சராக்க முடியாது. தனது மகனை காங்கிரஸ் கட்சியில் முன்னே கொண்டு வருவதே அவரது லட்சியம்,” என்கிறார் அவர்.

காங்கிரஸ் தலைவர் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே சித்தபூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக சித்தராமையா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். இம்முறையும் அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்கிறார் எம்.கே.பாஸ்கர்.

”சமீபத்தில்தான் கார்கே காங்கிரஸ் தலைவராகியுள்ளார். இம்முறை கர்நாடகாவில் நிறைய உழைத்துள்ளார். அதன் பலன் நம் அனைவரின் கண் முன்னால் உள்ளது. இந்த வயதிலும் அவரது உழைப்பு சிறப்பாக உள்ளது,” என்று ஹேமந்த் அத்ரி கூறினார்.

"காங்கிரஸ் கட்சி பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளது. தலித் தலைவர் மற்றும் ஓபிசி கொடியுடன் காங்கிரஸ் முன்னேறுகிறது. சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி கட்சி பேசுகிறது. இந்த உத்தி பாஜகவின் இந்துத்துவ பேச்சை முறிக்கும் வேலையைச் செய்கிறது. காங்கிரஸ் இதையே மற்ற தேர்தல்களிலும் பயன்படுத்தப் போகிறது,” என்று ஹேமந்த் அத்ரி குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

கருத்துகள் இல்லை: