திங்கள், 15 மே, 2023

Siddaramiah CM? கர்நாடக புதிய முதலமைச்சராக திரு .சித்தராமையாவுக்கே அதிக வாய்ப்பு

 மாலைமலர் : கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது.
ஆனால் முதல்-மந்திரி பதவியை பெறுவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இவர்களில் யாரை முதல்-மந்திரியாக தேர்வு செய்வது என்பது குறித்து நேற்று பெங்களூரில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். மாலை 6.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது.
5 நட்சத்திர ஓட்டலில் நடந்த அந்த ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் கலந்து கொண்டனர்.
அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் யாரை முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்று எழுத்து பூர்வமாக எழுதி தரும்படி கேட்கப்பட்டது.

மினி ஓட்டெடுப்பு போன்று இது நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் எழுதி கொடுத்த வாக்குகளுடன் மேலிட தலைவர்கள் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லியில் இன்று எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஆதரவாக முடிவு தெரிவித்துள்ளனர் என்பது ஆய்வு செய்யப்படும்.

அதன்பிறகு புதிய முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பார். கார்கேவுக்கு இந்த அதிகாரத்தை வழங்கி நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

135 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சுமார் 70 சதவீதம் பேர் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் மீண்டும் முதல்-மந்திரியாக தேர்வு பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயத்தில் டி.கே.சிவக்குமாருக்கு மேலிட தலைவர்களின் ஆதரவு இருக்கிறது. எனவே புதிய முதல்-மந்திரி யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கிடையே கர்நாடக புதிய முதல்-மந்திரி தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்பு விழா வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்களாக 33 பேர் தேர்வாக வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே தங்களுக்கு துணை முதல்-மந்திரி உள்பட 5 முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மந்திரிகள் பதவி வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் காங்கிரஸ் தலைவருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை: