சனி, 3 செப்டம்பர், 2022

கேரளாவில் தென்மண்டல கவுன்சில் கூட்டம்..அமித்ஷா தலைமை..ஸ்டாலின் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்கள் ஆலோசனை

tamil.oneindia.com  - -Mani Singh S  :  சென்னை: தென்மாநிலங்களில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக இன்று காலை கேரளாவில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்குகிறது.
 இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தென் மாநில முதல்வர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
 தற்போது நடப்பு ஆண்டுக்கான தென் மண்டல கவுன்சில் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இந்த கூட்டம் திருப்பதியில் நடந்தது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்! முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசனை! முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்! முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசனை!
தென்மண்டல கவுன்சில் கூட்டம்
தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்கள் கலந்துகொண்டு தங்கள் மாநிலம் மற்றும் மாநில எல்லைகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்யப்படும். மாநில எல்லை பிரச்சினை, நதிநீர் பங்கீடு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். இந்த கவுன்சில் கூட்டமான மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்படும்.

கேரளா சென்றார் மு.க ஸ்டாலின்
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கலந்துகொள்வார்கள். இதேபோல் அந்தந்த மாநில அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் உள்பட பல அரசு அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

கேரள முதல்வருடன் சந்திப்பு
இன்று காலை நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று பிற்பகலே கேரளா சென்றடைந்தார். அங்கு அவரை கேரள முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றார். தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு திராவிட மாடல் புத்தகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அமித்ஷா தலைமையில்
தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு தென் மண்டல கவுன்சில் கூட்டம் திருவனந்தபுரத்தில் தொடங்க உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இந்த கூட்டம் காலை தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் எல்லை தொடர்பான பிரச்சினைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், சாலை மற்றும் போக்குவரத்து, பாதுகாப்பு, எரிசக்தி, சுற்றுச்சூழல், வீட்டு வசதி உள்ளிட்ட பல விஷயங்களும் விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: