வெள்ளி, 2 செப்டம்பர், 2022

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு தாலிபான் மதகுரு உட்பட 18 பேர் உயிரிழப்பு

hindutamil.in  :  முஜிப்  ரஹ்மான் அன்சாரி  :  காபூல்: ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் மதகுரு உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஹெராத் மாகாணத்தின் ஆளுநர் ஹமிதுல்லா கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் ஹெராத் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) மசூதியில் எதிர்பாராத விதமாக குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் தலிபான் ஆதரவு மதகுரு உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். 23 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவித்தார்.
இந்தக் குண்டுவெடிப்பில் தலிபான் ஆதரவு மதகுரு முஜிப் ரஹ்மான் அன்சாரியும் கொல்லப்பட்டதாக தலிபன்களின் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நாட்டின் தைரியான மதகுருவை இழந்து விட்டோம் என்று தலிபன்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை தீவிரமாக நடந்து வருவதாக தலிபான் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்களும், ஐஎஸ் தீவிரவாதிகளும் அவ்வப்போது குண்டுவெடிப்புகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் இந்த தாக்குதலையும் ஐஎஸ் அமைப்பு, கிளர்ச்சியாளர்கள் நடத்தி இருக்கலாம் என்று தலிபான்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி வந்தது முதல் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களை முடக்கும் நடவடிக்கையில் தலிபான் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: