வெள்ளி, 2 செப்டம்பர், 2022

திராவிட மாதக் கொண்டாட்டம் ஏன்? டி.ஆர்.பி.ராஜா

மின்னம்பலம் : ”செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்” என்பது அலை பாயுதே படத்துக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய  பாடல் வரிகள் இவை.
காதலுக்காகவும்  சூழலுக்காகவும் எழுதப்பட்டதாக இருந்தாலும்,   திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி இப்போது செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாகக்  கொண்டாடுவதற்கு ஒரு வகையில்  22 ஆண்டுகளுக்கு முன்பே வைரமுத்து வழிகோலியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
தமிழர்கள் தங்கள் துன்பங்களைத் தொலைத்து உரிமை இன்பங்களை அனுபவிப்பதற்கு அடித்தளமிட்ட மாதம் செப்டம்பர் மாதம்தான் என்கிறார்கள் திமுகவினர்.
திமுகவை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15 ஆம் தேதி, திமுகவின் தாய் கழகமான திராவிடர் கழக நிறுவனர்  தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17 ஆம் தேதி, திமுகவை 1949 ஆம் ஆண்டு அண்ணா உருவாக்கிய நாள் செப்டம்பர் 17 இப்படி தமிழ்நாட்டின் தமிழ் இனத்தின் மூன்று முக்கிய நிகழ்வுகள்  நடந்தது செப்டம்பர் மாதத்தில் என்பதால் செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக கொண்டாட முடிவு செய்தது திமுக ஐடி விங்.

கடந்த ஆகஸ்டு 21 ஆம் தேதி சென்னை அன்பகத்தில் நடைபெற்ற திமுக ஐடி விங் நிர்வாகிகள் கூட்டம் மாநில செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடைபெற்றது. அந்த  கூட்டத்தில்தான் செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி செப்டம்பர் 1 ஆம் தேதியான இன்று முதல் திமுக ஐடி விங் களத்தில் இறங்கிவிட்டது. ’முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன் மாதத்தில்’ என்று வைரமுத்து எழுதிய இன்னொரு பாடல் போலவே, செப்டம்பர் மாதத்தின் முப்பது நாட்களும் திராவிட முகூர்த்தம்தான்.

திராவிட மாதத்தின் முதல் நாள் நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 1) இரவு 8 மணிக்குத் தொடங்க இருக்கிறது.

இதுகுறித்து திமுக ஐடி விங்கின் மாநில செயலாளர் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ.விடம் பேசினோம்.

 “செப்டம்பர் மாதம் என்றாலே திமுகவில் முப்பெரும் விழாதான்.  தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, திமுக ஆகிய தமிழ்நாட்டின் திருப்பு முனைகள்   பிறந்த நாள் இந்த செப்டம்பரில்தான் வருகிறது.

ஒரே நாளில் இவற்றைக் கொண்டாடுவதை விட மாதம் முழுதும் கொண்டாடி அதன் மூலம் திராவிட சிந்தனைகளை தமிழகத்தின் இளைய தலைமுறையினருக்கும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க  விரும்பினோம். அதன் அடிப்படையிலான ஆலோசனையில் விளைந்ததுதான் திராவிட மாதம்.

இதன்படி முப்பது நாட்களும் திராவிடத்தின் சாதனைகள், திராவிட இயக்கத்தின் ஆளுமைகள், திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் அடைந்த நன்மைகள், இன்று ஒட்டு மொத்த மக்களும் அனுபவிக்கும் உரிமைகளுக்கு திராவிட இயக்கம் அன்று நடத்திய போராட்டங்கள் என திராவிட இயக்கம் பற்றிய முழுமையான பரிமாணத்தை முப்பது நாட்களும் ட்விட்டர் ஸ்பேஸ் சமூக தளங்களில்  விவாதிக்க இருக்கிறோம்.
Why Dravidian Month Celebration?

ஒவ்வொரு நாளும் மாலை முக்கியமான திராவிட இயக்க ஆளுமைகள், அமைச்சர்கள்,ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.  அமைச்சர் பெருமக்களும் கலந்துகொள்கிறார்கள்.

தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஆகியோரும் இந்த முப்பது நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்கள். முதல்வரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது.

இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்தாலும்  இன்றைய திராவிட மாடல் ஆட்சியின் பற்பல சாதனைகளுக்கு வித்திட்ட அறிஞர் அண்ணாவின் ஆட்சி, அவரைத் தொடர்ந்து நீண்ட ஆண்டுகள்  கலைஞரின் ஆட்சி, அதைத் தொடர்ந்து இன்றைய தலைவர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி  பற்றி தெளிவான புரிதலை ஏற்படுத்துவதுதான் முப்பது நாட்களும் நடக்கும் நிகழ்வுகளின் நோக்கம்.

தொடர்ந்து முப்பது நாட்களும் திராவிட இயக்கம் பற்றிய வரலாற்றை பொதுவெளியில் வைத்து விவாதிக்கும்போது திராவிட இயக்கத்தின் மீது ஆண்டாண்டு காலமாக திட்டமிட்டு வைக்கப்பட்டுள்ள அவதூறுகள் உடையும்.

இன்னமும் திராவிட இயக்கம் பற்றி தவறான புரிதலைக் கொண்டுள்ளவர்களுக்கும் உண்மைகள் சென்று சேரும். இனி ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் என்பது திராவிட மாதம் என்ற   அடையாளம் அழுத்தமாக இருக்கும்” என்றார் டி.ஆர்.பி.ராஜா.
Why Dravidian Month Celebration?

திராவிட மாதத்தின் முதல் நாளான இன்று (செப்டம்பர் 1) இரவு 8 மணிக்கு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுத் துணைத் தலைவரும் பொருளாதார ஆய்வாளருமான ஜெயரஞ்சன் திராவிட மாடல் என்ற தலைப்பில் ட்விட்டர் ஸ்பேசில் உரையாற்றுகிறார்

–வேந்தன்

கருத்துகள் இல்லை: