வியாழன், 1 செப்டம்பர், 2022

எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மீண்டும் போராட்டம்...

தினமணி : எட்டு வழிச்சாலை: விவசாயிகள் மீண்டும் போராட்டம்
எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு,
தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் சென்னை இடையிலான பயண நேரத்தை குறைக்கும் வகையில் எட்டு வழிச்சாலை திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விவசாயிகளும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் அன்றைய அதிமுக அரசுக்கு தலைவலி ஏற்பட்டது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் வலுத்து வருவதை கருதி இந்த திட்டத்தை அதிமுக அரசு நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைத்தது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

மேலும், சட்டமன்ற தேர்தலின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எட்டு வழி சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என திமுக சார்பிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டதால் விவசாயிகள் திமுகவுக்கு ஆதரவாக கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தனர். இந்த நிலையில் 8 வழிச்சாலை திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  

இதற்கு தமிழக அரசும் இசைவு தெரிவித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகளின் கருத்து கேட்ட பின்பு இந்த திட்டத்தை துவக்கப்படும் என்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சாலை விரிவாக்கம் என்பது தவிர்க்க முடியாது என தமிழக அமைச்சர்  எ.வ.வேலு தெரிவித்தது விவசாயிகளை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த நிலையில் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு ஏதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை துவக்கி உள்ளனர் வீரபாண்டி அருகே உள்ள பூலாவரியில் ஒன்று கூடிய விவசாயிகள் கால்நடைகளுடன் எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பியதோடு தமிழக அரசைக் கண்டித்தும், அமைச்சரைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளுக்கு எதிரான எட்டு வழி சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் உடனடியாக இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் எனக்கூறி தமிழக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

இந்தப் போராட்டம் தமிழக முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் எட்டு வழி சாலை திட்டத்தை கைவிடும் வரை தங்கள் போராட்டம் ஓயாது என்றும் கடந்த அதிமுக அரசு 8 வழிச்சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்தியதால் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக அதனை கைவிட்டது தற்போது அதே விஷயத்தை திமுகவும் எடுத்துள்ளது வேதனையளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

எட்டு வழி சாலைக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் தற்போது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை: