Subashini Thf : தனிநாயகம் அடிகளாரை மறந்த தமிழ்ச் சமூகம்!
பிறந்த நாள்: 2.8.1913
சினிமா நடிகர்களைப் பற்றி மட்டுமல்ல- அவர்களது வரலாற்றையே கரைத்துக் குடித்து வைத்திருக்கும் நாம், தனிநாயகம் அடிகளார் என்ற பெயரையாவது அறிந்திருக்கின்றோமா? அவர் என்ன செய்தார் என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியிருக்கின்றோமா?
அவரைப் பற்றி இதுவரை நாம் தெரிந்து கொள்ளவில்லை என்றால் அதற்கு நாம் வெட்கப்படத்தான் வேண்டும். ஆயினும், இப்பதிவின் வழி ஓரளவேனும் அவரது பணிகளை அறிந்து கொண்டு இச்செய்தியை ஏனையோருக்கும் பகிர்ந்து உண்மையான தமிழ்த்தொண்டை ஆற்றுவோமா!
தனிநாயகம் அடிகளார் - தமிழின் இலக்கிய வளத்தை உலகறியச் செய்ய வேண்டும் எனத் தீவிரமாக சிந்தித்தவர்; அதற்காகத் தீவிரமாக உழைத்தவர்; தீவிரமாகப் பயணம் செய்து சாதித்தவர்.
1949 ஆம் ஆண்டு முதல் 1951 ஆம் ஆண்டு வரை ஈராண்டுகளுக்கு அன்றைய மலாயா, சீனா, ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடுகள், தென் அமெரிக்காவில் உள்ள பனாமா, எக்குவடோர், பெரு, சிலி, அர்ஜென்டினா, உருகுவே, பிரேசில், மெக்ஸிகோ, மேற்கத்திய தீவுகளான ட்ரினிடாட், ஜமைக்கா, மார்ட்டினிக், நடு ஆப்பிரிக்கா, வட ஆப்பிரிக்கா, இத்தாலி பாலஸ்தீன், எகிப்து ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து பல்வேறு கருத்தரங்குகளிலும் நிகழ்ச்சிகளிலும் தமிழ் மொழி, கலை, வரலாறு பற்றி உரையாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டுமே ஒரு ஆண்டில் 200க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தினார் என்பது வியக்க வைக்கின்றது. அவர் ஏற்படுத்திய தாக்கம் அறிவிப்புலத்தில் அன்று மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது.
ஜப்பானில் தங்கி இருந்த காலத்தில் ஜப்பானிய மொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றியும் அறிந்து கொண்டவர் என்பதோடு அவற்றைப் பற்றியும் எழுதியவர்.
1954 ஆம் ஆண்டில் தாய்லாந்துக்குச் சென்றிருந்தபோது அங்கு தாய்லாந்து மன்னரின் முடி சூட்டு விழாவில் கலந்து கொண்ட போது அங்கு அவர்கள் பாடும் பாடல்களுள் திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவையிலிருந்து எடுக்கப்பட்டவையும் உள்ளன என்பதை அறிந்து அச்செய்தியைப் பற்றி தமிழ் உலகத்திற்கு முதன் முதலாக தெரிவித்தவர்.
அடிகளாரின் ஆய்வுகளைப் பற்றி சுருங்கக் கூறுவதென்றால்:
1. தமிழ் மொழி, இனம், இலக்கியம், நாகரிகம், வரலாறு ஆகியவை பற்றி எதுவுமே அறியாமல் இந்தியா என்றாலே வடபுலம் தான் என்று மேல் நாட்டவர்கள் நினைத்து வந்த நிலையைத் தம் விரிவுரைகள் மூலமும் வானொலி, தொலைக்காட்சி செய்திகள், நேர்காணல்கள் வழியும் தெரியப்படுத்தியவர். தனிநாயகம் அடிகளாரின் இத்தகைய தீவிர செயல்பாடுகளினால் உலக அரங்கில் தமிழ் இடம் பெற்றது என்பதை நாம் மறுக்க முடியாது.
2. இந்திய மொழிக் குடும்பங்களைப் பற்றியும் வரலாறு பற்றியும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மேலைநாட்டு அறிஞர்களுக்குத் திராவிட மொழிக் குடும்பங்கள் பற்றியும், குறிப்பாகத் தமிழ் பற்றியும் அடிகளார் மூலம் அறிய வந்ததால் அவரது தூண்டுதல் காரணமாகத் திராவிட மொழிகளைப் பற்றிய, குறிப்பாகத் தமிழைப் பற்றிய ஆய்வுகள் மேலை நாடுகளில் பரவலாக்கம் பெற வழி வகுத்தார்.
3. தாய்லாந்து, கம்போடியா போன்ற கிழக்காசிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழகத்துக்கும் இடையே நிலவிய அரசியல், கலை, சமய, உறவுகளைத் தமிழருக்கும் வெளிப்படுத்தி அதன் வழி பல அறிஞர்கள் அத்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள வழி கோலினார்.
4. தமிழைப் பற்றிய ஆய்வுகள் தமிழில் மட்டும் நிகழ்வது தொடர்ந்தால் மேலைநாட்டவர் தமிழைப் பற்றி அறிந்திருக்க முடியாது என்பதால் தமிழைப் பற்றிய ஆய்வுகள் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளிலும் வெளிப்படுதல் வேண்டும் என்பதை வலியுறுத்தி செயல்பட்டார்.
தமது உலக தூதுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய போது அவர் கொண்டிருந்த கருத்து பின்வருமாறு:
"உலகின் மிகப்பெரிய மொழிகளில் ஒன்றும் உயர் தனிச் செம்மொழிகளில் ஒன்றுமாகிய தமிழ் மொழியோடு தொடர்புள்ள செய்திகளும் ஆய்வுக்கட்டுரைகளும் ஆங்கிலத்தில் வெளியிடப்பெற்றால் மட்டுமே உலக அரங்கில் தமிழ் இடம்பெற முடியும் என்பது அவர் கருத்தாக இருந்தது."
ஆகவே தன் பயணத்தை முடித்துக் கொண்டு தூத்துக்குடிக்குத் திரும்பிய தனிநாயகம் அடிகள் ஆங்கில முத்திங்கள் இதழ் ஒன்றினைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு Tamil Culture என்ற பெயரில் அதனைத் தொடங்கினார்.
மலேசியாவின் புகழ்மிக்க மலாயா பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறையில் வடமொழிக்கு முதன்மை வழங்கப்பட வேண்டும் என சிலர் பரிந்துரைத்த போது, திரு.கோ சாரங்கபாணியின் தலைமையில் தமிழர்கள் திரண்டு எழுந்து தமிழை முதன்மை படுத்த முயற்சி செய்த நிகழ்வில் தனிநாயகம் அடிகளாரின் பங்கும் இருந்தது என்பதை வரலாறு மறுக்காது. அதே மலாயா பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவராக தமிழ் வளர்க்கும் பணியை 10 ஆண்டுகள் செய்து இத்துறைக்குப் பெருமை சேர்த்தவர் தனிநாயகம் அடிகள்.
மலாயா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது திருக்குறள் மலாய் மொழியிலும், சீன மொழியிலும் மொழிபெயர்ப்பு நடைபெறுவதற்குத் தூண்டுதலாக இருந்து அதனை சாதித்து முடித்தவர்.
தனிநாயகம் அடிகள் தொடங்கிய Tamil Culture என்ற ஆங்கில ஆய்விதழ் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாகியது. 1964 இல் டில்லியில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் பிறந்தது. தனிநாயகம் அடிகளார் அவர்களும் முனைவர் வ.ஐ.சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் 26 பேர் ஒன்று கூடினர். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் பிறந்தது. அதன் தொடக்கம் முதல் தனது மறைவு வரை இந்த மன்றத்தின் தலைவராக இருந்து அளப்பரிய ஆய்வுப்பணிகளைச் செய்தார் தனிநாயக அடிகளார்.
21 உலக நாடுகளில் இருந்து கலந்து கொண்ட தமிழ் அறிஞர்கள் சிறப்பித்த முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற மாநாடு 1966 ஆம் ஆண்டு தனிநாயகம் அடிகளார் அவர்களது முயற்சியில் நடைபெற்றது. இது மாபெரும் சாதனை அல்லவா?
அப்படி என்ன செய்து விட்டார் தனிநாயகம் அடிகளார் எனக் கேட்போருக்கு....
1. முதல் ஐரோப்பிய தமிழ் அறிஞர் எனப் போற்றப்படும் ஹென்றீக்ஸ் ஹென்றீக்ஸ் அடிகளார் 1550 ஆம் ஆண்டில்
எழுதிய Arte de Grammatica da Lingua Malabar (தமிழ் மொழி இலக்கணக் கலை) என்னும் நூலை தனிநாயகம் அடிகளார் போர்த்துகல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரில் உள்ள தேசிய நூலகத்தில் 1954 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
2. தமிழ் மொழியில் எழுதப்படாத, ஆனால் போர்த்துக்கீசிய லத்தின் எழுத்துக்களுடன் கூடிய தமிழ் மொழி ஒலியில் எழுதப்பட்ட முதல் அச்சு நூலான கார்திலா - இதன் கையெழுத்து பிரதி போர்த்துகல் நாட்டு நூலகத்தில் இருந்ததை தனிநாயகம் அடிகளார் குறிப்பிடுகின்றார். இப்போது இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
3. 17-ம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தமிழ் போர்த்துகீசிய அகராதியை ஒளிப்பட பதிப்பு முறையில் அச்சிட்டு 1966 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிட்டார் தனிநாயகம் அடிகளார்.
4. தமிழ் மொழியில் கொல்லத்தில் 1578இல் அச்சிடப்பட்ட தம்பிரான் வணக்கம் என்ற நூல். இதுவே அச்சுப் பதிப்பாக வெளிவந்த முதல் தமிழ் நூல் மட்டுமல்ல; முதல் இந்திய நூல் என்பதோடு முதல் ஆசிய மொழிகளில் வெளிவந்த நூல் என்பதும் சிறப்பாகும். இந்த நூலையும் கண்டுபிடித்து இதைப் பற்றிய செய்திகளைத் தமிழ் உலகுக்கு வெளிப்படுத்தியவர் தனிநாயகம் அடிகளார்.
இப்படி ஆரம்பகால அச்சு நூல்கள் பலவற்றைத் தேடி கண்டுபிடித்து அவை பற்றி கட்டுரைகளாகவும், செய்திகளாகவும் மீண்டும் அச்சு பதிப்புகளாகவும் வெளிக் கொண்டு வந்து தமிழ் உலகத்திற்குப் பெருமை சேர்த்தவர் நம் தனிநாயகம் அடிகளார்.
இவ்வளவு பெருமைகளைத் தமிழுக்குச் சேர்த்த தனிநாயகம் அடிகளாரைப் பற்றி சிந்திக்கும் போது பல கேள்விகள் எனக்குள் எழுகின்றன.
1. தனிநாயகம் அடிகளார் பற்றிய செய்திகள் நமது பள்ளிக்கூட, கல்லூரி, பல்கலைக்கழக பாட நூல்களில் இடம்பெறுகின்றனவா?
2.தனிநாயகம் அடிகளாரைப் பற்றி அறிந்த தமிழ் ஆசிரியர்களும் பேராசிரியர்கள் எத்தனை பேர்?
3.தனிநாயகம் அடிகளாருக்கு நாம் சிலை வைத்திருக்கின்றோமா?
4.தனிநாயகம் அடிகளாரருக்கு நாம் கண்காட்சிகளையோ அல்லது நிகழ்ச்சிகளையோ ஏற்பாடு செய்து உலகத் தமிழ் மக்களுக்கு, குறிப்பாகப் புதிய தலைமுறையினருக்கு அவரை அறிமுகம் செய்கின்றோமா?
தனிநாயகம் அடிகளார் செய்த தொண்டை மறந்தால் தமிழை மறந்ததற்கு அது சமமாகும். தனிநாயகம் அடிகளார் அவர்களது பிறந்த நாளான ஆகஸ்டு 2ம் தேதி அவரது சிந்தனைகளை இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதோடு நாமும் அவரைப் பற்றி அறிந்து கொண்டு அவர் புகழை உலகெங்கும் கொண்டு சேர்ப்போம்.
அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 2ம் தேதி பள்ளி ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் தனிநாயகம் அடிகள் பற்றிய இப்பதிவை வாசித்துக் கலந்துரையாடுங்கள். பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளுக்கு இத்தமிழறிஞரை அறிமுகப்படுத்துங்கள்.
முனைவர் க.சுபாஷினி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை.
குறிப்பு: தனிநாயக அடிகள் தமிழ் ஆராய்ச்சி நிலையம் திருச்சியில் இயங்கி வருகின்றது. இதன் இயக்குநராக அமுதன் அடிகளார் இயங்கி வருகின்றார். இந்த ஆய்வு நிலையத்தைத் தமிழ் மக்கள் உங்கள் ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இப்பதிவில் உள்ள குறிப்புக்கள் சில அமுதன் அடிகள் எழுதிய `தனிநாயகம் என்னும் தமிழ் நாயகம்` என்ற நூலில் இருந்து பதியப்பட்டவையாகும்.
1 கருத்து:
தமிழ்ப் பணி செய்த தனிநாயகம் அடிகளார் பற்றி தந்தமைக்கு மிக்க நன்றி தமிழ் உலகம் அவரை பெரிது படுத்தாமல் இருப்பதும் கவலையே.
கருத்துரையிடுக