வியாழன், 20 ஜனவரி, 2022

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக (Hana Horka) இருந்த செக் நாட்டின் புகழ் பெற்ற பாடகி கொரோனாவில் உயிரிழப்பு

 Rishvin Ismath:   Conspiracy Theory (சதிக் கோட்பாடு) பரிசளித்த மரணம்!
ஹனா ஹோர்கா (Hana Horka) செக் நாட்டின் (Czech Republic) Asonance எனும் இசைக்குழுவின் பிரதான பாடகியாக இருந்து வந்தார்.
 சதிக் கோட்பாடுகளை (Conspiracy Theories) உண்மை என்று முட்டாள்தனமாக நம்புகின்றவர்களில் ஒருவராக இருந்தார்.
அதன் காரணமாக கொவிட் 19 தடுப்பூசிகளுக்கு எதிரானவராக செயற்பட்டவர்,
கொவிட் 19 இற்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தவர்.
அவர் மட்டுமல்ல, அவரது Asonance இசைக்குழுவினரும் கொவிட் 19 தடுப்பூசிக்கு எதிரானவர்கள் (anti-vaxxers).
சதிக் கோட்பாடுகளை நம்பியதன் உச்ச கட்ட விளைவாக சில நாட்களுக்கு முன்னர் வேண்டுமென்றே, அதாவது வலிந்தே தனக்கு கொவிட் 19 தொற்றை ஏற்படுத்திக் கொண்டார்.


வேலியில் போன ஓணானைப் பிடித்து மடியில் வைத்த கதையாக அவரே வலிந்து வரவழைத்த விருந்தாளியான கொவிட் 19 இன் காரணமாக தனது 57 ஆவது வயதில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இறந்து போனார்.

அவரது மகன் ஜன் ரெக் தனது தாயின் மரணம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் தானும் தனது தந்தையும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்றும், தமக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டு இருந்ததாகவும், தடுப்பூசி எதுவுமே செலுத்திக் கொள்ளாத தாயார் தம்மிடமிருந்து கொவிட் 19 வைரசை தனக்குத் தொற்ற வைத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். கொவிட் தொற்றுக்கு உள்ளான ஹனா ஹோர்கா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கோ, வைத்தியசாலைக்கோ செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்,
இந்த நிலையில் ஐந்து நாட்கள் சுகவீனத்தின் பின்னர் வீட்டிலேயே மரணித்துள்ளார்.
சுமார் 63% ஆனா மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள செக் நாட்டில், கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி சுகமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் குறிப்பிட்ட காலம் வரை பொது நிகழ்வுகளில் பங்குபற்ற அனுமதி உள்ளது. அந்த அனுமதியைப் பயன்படுத்தி பொது நிகழ்வுகளில் பங்கேற்பதே ஹனா ஹோர்காவின் நோக்கமாக இருந்துள்ளது. சதிக் கோட்பாடுகளை நம்பி குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்த பாடகியை வாழ்க்கை நிராகரித்துவிட்டது, பரிதாபமாக இறந்து போனார் ஹனா ஹோர்கா.

'சதிக் கோட்பாடுகளை' நம்ப ஆரம்பிக்கும் பொழுது அவை உங்களை பெரிய அறிவாளி என்று நம்ப வைக்கும், ஆனால் கடைசியில் தோற்றுப் போகப் போவது நீங்களே. கொவிட் 19 தொடர்பில் மட்டுமல்ல, பல விடயங்கள் தொடர்பிலும் சதிக் கோட்பாடுகள் உள்ளன, நம்பி ஏமாந்து தோற்றுப் போகாதீர்கள்.

சதிக் கோட்பாடுகளை நம்புவதனால் நீங்கள் அறிவாளி ஆக முடியாது. இலுமினாட்டி என்பது கூட பிரபலமான ஒரு சதிக் கோட்பாடே. சதிக் கோட்பாடுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், முறையான மருத்துவ, அறிவியல் மற்றும் அவ்வத் துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று அவற்றைப் பின்பற்றுங்கள். மாறாக சதிக் கோட்பாட்டாளர்களின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி மாண்டு போகாதீர்கள். கொவிட் 19 உண்மையானது, ஆபத்தானது ஆகவே தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுங்கள், பாதுகாப்பாக இருங்கள். ஹனா ஹோர்காவிற்கு ஏற்பட்டது போன்ற பரிதாப நிலைமை யாருக்கும் எந்த விடயத்திலும் ஏற்படாமல் இருக்கட்டும்.
ஹனா ஹோர்கா தனது Asonance இசைக்குழுவுடன் இணைந்து பாடும் ஒரு பாடல் :

கருத்துகள் இல்லை: