திங்கள், 17 ஜனவரி, 2022

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி கிடையாது! பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

 நக்கீரன் செய்திப்பிரிவு  : குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/01/2022) கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "வ.உ.சி., பாரதி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் படங்கள் அடங்கிய அலங்கார ஊர்த்தி மறுக்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது.
விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். குடியரசு தின அணி வகுப்பில் தமிழக ஊர்தி இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அலங்கார ஊர்தி தொடர்பாக, மாநில அதிகாரிகள் மூன்று முறை குழுவிடம் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

திருத்தங்கள் செய்து சமர்ப்பிக்கப்பட்ட 7 மாதிரிகளையும் மத்திய அரசின் குழுவினர் நிராகரித்திருப்பதை ஏற்க முடியவில்லை. நான்காவது சுற்றுக் கூட்டத்திற்கு தமிழக அதிகாரிகளை அழைக்காமலேயே, குடியரசுத் தின அணிவகுப்பு பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 News18 Tamil : வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது என கனிமொழி தெரிவித்துள்ளார்.
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரை மட்டுமே தங்களுக்கு தெரிவதாகவும், உலக தலைவர்களுக்கு வ.உ.சி, வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் ஆகிய தலைவர்களை தெரியாது.

மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்திகளை மட்டும் தான் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: பொங்கல் விடுமுறைக்கு பிறகு கொரோனா அதிகரிக்க வாய்ப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்த அணிவகுப்பு ஊர்திகளில் தென்மாநிலங்களில் கர்நாடக ஊர்திகள் மட்டும் தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் மட்டுமல்லாமல் மேற்கு வங்கம், கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசுக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கனிமொழி அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது.

இவர்களை பற்றிய மத்திய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. மத்ததிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: