ஞாயிறு, 18 நவம்பர், 2018

மீண்டும் வரும் 'படப்பெட்டி' இதழ்!.. சினிமா ஆர்வலர்களுக்கு நல்ல செய்தி.

சினிமா ஆர்வலர்களுக்கு நல்ல செய்தி... மீண்டும் வரும் 'படப்பெட்டி' இதழ்!.vikatan.com -pachonthi : ``நல்ல படங்கள் நிராகரிக்கப்படும் நிலையை மாத்த `படப்பெட்டி திரைப்பட இயக்கம்'; மீண்டும் வருகிறது `படப்பெட்டி' இதழ்!" - பரிசல்.சிவ.செந்தில்நாதன் 
``இப்போ ஒரு நல்ல சூழல் உருவாகியிருக்கு. நல்ல திரைப்படங்கள் வரத் தொடங்கியிருக்கிறது. ஆனால், `மேற்கு தொடர்ச்சி மலை' வெளியானபோது திரையரங்குகள் கிடைக்காத சூழல் இருந்தது. நல்ல படத்தைத் திரைப்பட ரசிகர்கள் பார்க்கமுடியாமல் போனதே... என்ற வருத்தம் ஏற்படவே, என்ன செய்யலாமென R.P.அமுதன், விஜய ஆனந்த், தயாளன், ஆனந்த குமரேசன் போன்ற சில நண்பர்கள் சேர்ந்து ஆலோசனை செய்தோம். எங்களோடு சிலரை சேர்த்துக்கலாம் என கொற்றவை, தி.பரமேஸ்வரி போன்றோரையும் இணைத்துக்கொண்டோம். இப்படியாக உருவானதுதான், `படப்பெட்டி திரைப்பட இயக்கம்'." என்று சொல்லும் பரிசல் சிவ.செந்தில்நாதன், `பரிசல்' புத்தகக் கடையை நடத்திவருகிறார். சமீபத்தில், படப்பெட்டி திரைப்பட இயக்கம் சார்பாக `மேற்குத் தொடர்ச்சி மலை', `ஒழிவுதிவசத்தே களி' போன்ற திரைப்படங்களைத் திரையிட்டு, படத்தின் இயக்குநருடன் ஓர் ஆரோக்கியமான கலந்துரையாடலையும் தன் குழுவினரோடு நடத்தியிருக்கிறார். அவருடன் பேசியதிலிருந்து...
``படப்பெட்டி திரையிடலுக்கான ஆர்வம் எப்போது, எப்படி வந்தது. அந்தப் பயணம் குறித்து..."
``அப்போது உலக சினிமா பார்ப்பதற்கு இடமே கிடையாது, DVD யும் கிடைக்காத காலகட்டம்கூட. அதனால அங்கங்க தேடியெடுத்து முக்கியமான திரைப்படங்கள் எல்லாம் போட ஆரம்பிச்சோம். அப்படி ஆரம்பிச்சதுதான் `மக்கள் திரைப்பட இயக்கம்'. 50 லிருந்து 100 பேர் வரை சினிமா பார்க்க வருவாங்க. உதவி இயக்குநர்கள், சினிமா ஆர்வலர்கள், மாணவர்கள், இயக்கம் சார்ந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் படம்பார்க்க வருவாங்க. ஒவ்வொரு மாதமும் திரையிடுவோம். நான் போகும் கூட்டங்களுக்கு, திரையிடலுக்கான ஜெராக்ஸ் காப்பி கொடுப்பேன். அப்படித்தான் இந்தப் பயணம் ஆரம்பித்தது. முதன்முதலாக திரையிடப்பட்ட படம் bicycle thieves. பிறகு children of heaven, The way home போன்ற உலக சினிமாக்களும். அதைத் தொடர்ந்து ஆவணப் படங்களுமாகத் தொடர்ச்சியாக நடத்தினோம். அப்போது மேற்கு வங்கத் தகவல் மையத்தில் நண்பர் கே.பி.பாலசந்தர், இப்போது பத்திரிகையாளராக இருக்கும் விஜய் ஆனந்த் எல்லாம் சேர்ந்து நடத்தினோம்."
``படப்பெட்டி இதழை எப்போது தொடங்கினீர்கள், எத்தனை இதழ்கள் வெளிவந்துள்ளன, படப்பெட்டி திரைப்பட இயக்கம் ஆரம்பித்ததின் நோக்கம் என்ன?"
``2004-ம் ஆண்டு படப்பெட்டி இதழ் தொடங்கப்பட்டது. இதுவரை ஒன்பது இதழ்கள் வெளிவந்துள்ளன. இடையில் நான்கைந்து வருடங்களாக இதழ் பணி தடைபட்டுக் கிடந்தது. உலக சினிமாவுக்கான சந்தை அகன்று விரிந்து கிடக்கிறது. ஆனால், இந்திய சினிமாவைக் காண, அதைப் பற்றி உரையாட சூழல் குறைவாக இருக்கிறது. இதற்காக எங்கள் குழுவோடு சேர்ந்து கலந்து பேசுகையில் குறைவான கட்டணத்தில் கோடம்பாக்கம் எம்.எம்.திரையரங்கில் திரையிடல் நடத்தலாம் என்று முடிவெடுத்தோம். முக்கியமாக, எந்தப் படத்தைத் திரையிடுகிறோமோ அப்படத்தின் இயக்குநரைப் பார்வையாளர்களோடு சேர்ந்து உரையாட வைக்க முடிவெடுத்தோம்." 

``முதல் திரையிடலுக்கு வரவேற்பு எப்படி இருந்தது?"
`` `மேற்குத் தொடர்ச்சி மலை' திரையிடலுக்கு இயக்குநர் லெனின் பாரதியும் ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியளித்தது. முதல் காட்சிக்குப் பலரும் வந்தாங்க. இருக்கை இல்லாமல் கூடுதல் இருக்கையை ஏற்பாடு செய்யவேண்டிய சூழல் உருவானது. அந்த வரவேற்பைத் தொடர்ந்து அதற்கடுத்த வாரங்களில் மூன்று காட்சிகளுக்கு அந்தப் படத்தைத் திரையிட்டோம். அந்த உற்சாகத்தில் மலையாளத்தில் வெளியாகி அதிக கவனம்பெற்ற இயக்குநர் சணல்குமாரின் `ஒழிவுதிவசத்தே களி' யையும் திரையிட முடிவெடுத்தோம்." 
பரிசல்.சிவ.செந்தில்நாதன்
`` `படப்பெட்டி' இதழை மீண்டும் கொண்டுவருவதற்கான காரணம், அதன் தவிர்க்க முடியாத பங்களிப்பாக எதைக் கருதுகிறீர்கள்?"
``சினிமாவின் செய்திகளைச் சொல்லத்தான் இதழ்கள் வெளிவந்தன. சினிமா குறித்த டெக்னிக்கலான விஷயங்கள் அதில் இடம்பெறுவதில்லை. மேலும், சென்னையில் உள்ள திரையங்குகள் சில மூடப்பட்டபோது, இடிக்கப்பட்டபோது ஏற்பட்ட பார்வையாளர்களின் அனுபவங்களை கட்டுரைகளாக வெளியிட்டோம். மேலும், பி.கே.நாயரைப் பற்றி முதன்முதலில் தமிழில் நேர்காணல் செய்தோம். கேமராமேன் செழியன் தமிழ் சினிமாவின் அருஞ்சொற்பொருள்களை இரண்டு மூன்று இதழ்களில் எழுதினார். எடிட்டிங் குறித்து சிறப்பிதழும் கொண்டுவந்திருக்கோம். சும்மா செய்திகளைச் சொல்லாமல், சினிமாவுக்குப் பின் உள்ள அரசியல், பின்னணி, தொழில்நுட்பம், வெவ்வேறு தளத்தில் உள்ள விஷயங்களைப் பதிவு செய்வதுதான் முக்கியமாகக் கருதுகிறோம். இப்போது அதற்கான தேவை இருப்பதால், மீண்டும் திரைப்பட இயக்கத்தோடு சேர்ந்து `படப்பெட்டி' இதழும் தயாராகிக்கொண்டிருக்கிறது. அடுத்த வாரத்தில் `படப்பெட்டி' இதழ் வெளியாவதற்கான சாத்தியம் இருக்கு."
`` `படப்பெட்டி' கொண்டுவருவதற்கு முன் திரைத்துறை தவிர்த்து சினிமாவுக்காக யார் யார் இயங்கினார்கள்?"  
``ஆரம்பத்தில் சென்னை ஃபிலிம் சொசைட்டி `சலனம்' என்ற பத்திரிகை நடத்திவந்தது. அது ஒரு முக்கியமான செயல்பாடாக கவனம் பெற்றது. எம்.சிவக்குமார், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, நாகார்ஜுனன், கல்யாண ராமன் போன்றோர் அதில் பெரும்பங்கு வகித்தனர். `நிழல்' திருநாவுக்கரசு தமிழ்நாடு முழுக்க ஆவணப்படம், குறும்படங்களைத் தொடர்ந்து திரையிட்டார். திருநெல்வேலியிலிருந்து `காஞ்சனை' திரைப்பட இயக்கமும், செல்வம் என்பவர் `குன்னா குன்னா குர்' என்ற அமைப்பின் மூலமும் ராஜபாளையத்தில் செயல்பட்டுவந்தார். இவர்கள் அனைவரும் தீவிரமாகச் செயல்பட்டுவந்தனர். சென்னையில் ஐசிஎப் தொடர்ந்து திரைப்பட விழாக்களை நடத்தியது. மாக்ஸ் முல்லர் பவன், அல்லையன்ஸ் பிரான்சிஸ் போன்றோர் சென்னையில் திரைப்படம் சார்ந்து இயங்கினார்கள்." 
``சினிமாவுக்காக இப்போது இயங்குபவர்களில் யார் யாரை முக்கியமானவர்களாகக் கருதுகிறீர்கள்?"    
``சினிமா சார்ந்த புத்தகங்கள் தொடர்ந்தும் புதிதாகவும் நிறைய வரத் தொடங்கியிருக்கு. குறிப்பாக, `நிழல்', `படச்சுருள்', `உலக சினிமா' போன்ற இதழ்கள் தொடர்ந்து வருகிறது. இயக்குநர் பா.இரஞ்சித் கூகை திரைப்பட இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார். திரைத்துறையில் சேர்ந்து பணியாற்ற விரும்பும் உதவி இயக்குநர்களுக்கான இடமாக கூகை இருக்கிறது. இவர்கள் எல்லோருமே முக்கியமானவர்கள்தான். இன்னும் ஏராளமானவர்கள் வரவேண்டும்."  
படப்பெட்டி இதழ்கள்
``படப்பெட்டி திரைப்பட இயக்கத்தின் எதிர்காலத் திட்டம் என்ன?"
``மக்கள் விரும்புற சினிமாக்களுக்குத் திரையரங்குகள் கிடைக்காத சூழலை, ஒதுக்கப்படுற சூழலை மாத்தணும். இந்திய அளவிலான சினிமாவை தமிழ் ரசிகர்களுக்குக் குறந்த கட்டணத்தில் திரையிடல் நிகழ்த்தணும். வரும் காலங்களில் இயக்குநர் நந்திதாதாஸ் இயக்கத்தில் வெளியான `மண்ட்டோ', நாகராஜ் மஞ்சுளேவின் 'ஃபன்றி', `சாய்ராட்' படங்களைத் திரையிட்டு, சம்பந்தப்பட்ட இயக்குநர்களையும் அழைக்கலாம் என்று இருக்கிறோம். அடுத்த மாதம் கன்னடத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற `திதி' திரையிடலாம் என்று இருக்கிறோம். retrospective என்ற வகையில் இயக்குநரின் முக்கியமான சினிமாக்களை ஆண்டுக்கு ஒருமுறை திரையிட்டு, அது குறித்து இயக்குநருடன் உரையாடலாம் என்று இருக்கிறோம். ரித்விக் நூற்றாண்டு விழா நடைபெறுவதால், அடுத்தகட்டமாக அவர் குறித்து யோசித்துக்கொண்டு இருக்கிறோம். மேலும் வரும் டிசம்பரில், தமிழ் சினிமாவுக்கு மிக முக்கியப் பங்காற்றிய ஓர் ஆளுமையை கௌரவிக்கும் விதமாக ஒரு முக்கியமான நிகழ்வு நடத்தலாம் என்ற எண்ணம் இருக்கு."

கருத்துகள் இல்லை: