வெள்ளி, 15 ஏப்ரல், 2016

அழகிரி வந்தால்தான் திமுக மீண்டும் வெற்றி? சொல்ல வேண்டியவங்ககிட்ட சொல்லுங்க அல்லது நீங்களே எழுதுங்க ..அழகிரி அதிரடி!

அழகிரி அதிரடி:உண்மையான விசுவாசிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை! தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியலை கடந்த 13-ம் தேதி அன்று, தி.மு.க-வினர் மட்டுமல்லாமல், அ.தி.மு.க-வினரும் ஆவலோடு எதிர்பார்த்தனர். இந்தப் பட்டியலைப் பார்த்து அ.தி.மு.க வேட்பாளர்களில் மாற்றங்கள் நடக்கும் என்றும் சிலர் சொல்லி வந்தனர். இன்னொருபுறம், தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்து அழகிரி ஆதரவாளர்கள் அப்செட் ஆனார்கள், அவர்களிடம் விருப்பமனுக்கள் வாங்கப்படவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், வேட்பாளர்கள் தேர்வில் அழகிரியின் பங்களிப்பு எதுவும் இல்லை என்பது இந்தத் தரப்பினருக்கு பெரும் வருத்தம்.


சீட் கிடைக்காவிட்டாலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுப் பேர் வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த அழகிரியின் ஆதரவாளர்கள், தற்போது நொந்துபோய் இருக்கிறார்கள். சமீபத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதியை அழகிரி சந்தித்து சமாதானம் ஆகிவிட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், வேட்பாளர் தேர்வில் அழகிரியின் கருத்தைக் கேட்காமல் புறக்கணித்ததற்கு என்ன காரணம்? தற்போது வெளியிடப்பட்டு உள்ள வேட்பாளர் பட்டியல் பற்றி அழகிரியின் மனநிலை என்ன என்பதை அறிவதற்காக, சென்னையில் முகாமிட்டிருந்த அழகிரியை அலைபேசியில் தொடர்புகொண்டோம்.

எடுத்த எடுப்பில், “வேட்பாளர் அறிவிப்புப் பற்றி நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை’’ என்றார். இருந்தபோதிலும் சில கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
“உங்கள் ஆதரவாளர்கள் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லையே?’’

“என் ஆதரவாளர் என்றில்லை. உண்மையான கட்சி விசுவாசிகள் யாருக்கும் சீட் வழங்கப்படவில்லை.’’

“தி.மு.க-வில் மீண்டும் இணைந்து செயல்படத்தான் சமீபத்தில் நீங்கள் கலைஞரை பார்த்ததாகச் சொல்லப்பட்டது. உங்கள் ஆதரவாளர்களும் தி.மு.க-வுக்கு வேலை பார்க்க ஆவலுடன் இருப்பதாகச் சொன்னார்களே?’’

“நான் தலைவரைப் பார்க்கச் சென்றது உண்மைதான். அதற்்கும் கட்சியில் இணைவதற்கும் தொடர்பில்லை. என் ஆதரவாளர்கள் யாரும் கட்சி வேலை செய்யவில்லை.’’

“அப்படி என்றால், கலைஞரை விமர்சித்து வைகோ பேசியதற்கு உங்கள் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி, கொடும்பாவி கொளுத்தினார்களே?’’

“என் அப்பாவை விமர்சித்ததால் போராட்டம் நடத்தினார்கள். அது வேறு. நான் சொன்னால் என் ஆதரவாளர்கள் எதையும் செய்வார்கள். அந்தப் போராட்டத்துக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை.’’ 

“அழகிரி மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்றினால்தான், தி.மு.க-வால் அ.தி.மு.க-வைத் தோற்கடிக்க முடியும் என்று சிலர் சொல்கிறார்களே?’’

“அதை என்னிடம் சொல்லாதீர்கள். சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லுங்கள். அல்லது நீங்களே எழுதுங்கள்.’’

“அப்படியென்றால் உங்களை நம்பியிருக்கும் உங்கள் விசுவாசிகள் தி.மு.க-வுக்கு வேலைசெய்ய வாய்ப்பே இல்லையா?’’

“இல்லை. இதுவரை யாரும் எந்த வேலையும் செய்யவில்லை.’’

“தி.மு.க வேட்பாளர் பட்டியல் பற்றி உங்கள் கருத்து என்ன?’’

“இப்போதைக்கு அதைப்பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அடுத்தது என்ன என்பதை ஊருக்கு  வந்ததும் உங்களிடம் பேசுகிறேன்.’’

- செ.சல்மான்
படம்: பா.காளிமுத்து


அழகிரி சஸ்பென்ஸ்

‘தி.மு.க-வில் என்னை இணைத்துக்கொள்ள கலைஞருக்கு விருப்பம் என்றாலும், அங்குள்ள சிலருக்கு விருப்பம் இல்லை’ என்று முன்பு  நம்மிடம் அழகிரி பேசியியிருந்தார். இப்போது அவரும், அவருடைய ஆதரவாளர்களும் தேர்தல் வேலைசெய்யத் தயாராக இருந்தனர். ஆதரவாளர்களுக்கு சீட் எதுவும் அழகிரி எதிர்பார்க்கவில்லை. கட்சிப் பொறுப்பைத்தான் எதிர்பார்த்தார். அதற்காகத்தான் சென்னைக்கு அடிக்கடி சென்றுவந்தார். இருந்தும் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. வேட்பாளர் பட்டியலில் அவரின் முன்னாள் ஆதரவாளர்கள் பி.மூர்த்தி, கோ.தளபதி, ப.தியாகராஜன், ரகுபதி ஆகியோருக்கு  சீட் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அழகிரிக்கு அதில் மகிழ்ச்சி இருப்பதாகத் தெரியவில்லை. 

கடந்த ஐந்து ஆண்டுகளில் தன் ஆதரவாளர்களுக்கு அழகிரி பெரிய அளவில் ஏதும் செய்யவில்லை. இப்போதாவது அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் அவர், விரைவில் அதற்கான வழியைக் கண்டுபிடிப்பார் என்கிறார்கள். அது தேர்தலுக்கு முன்பாகவா, பிறகா என்பதுதான் சஸ்பென்ஸ்!

கருத்துகள் இல்லை: