திங்கள், 11 ஏப்ரல், 2016

கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு உச்சநீதிமன்றம் சாவுமணி

வேல்முருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக் கையில், ’’அகில இந்திய மருத்துவ பொதுநுழைவுத் தேர்வுக்கு உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 2013-ம் ஆண்டு இதே உச்சநீதிமன்றம்தான் பொது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தடை விதித்திருந்தது. ஆனால் மக்கள் விரோத மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று பொது மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு அனுமதி அளித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த முடிவால் இந்த நாட்டின் கோடிக்கணக்கான கிராமப்புற, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மாணவர்களின் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவபடிப்பு என்பது எட்டாக்கனியாகிவிட்டது. ஐஐடி போன்ற உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தி கிராமப்புற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையை நசுக்கியது.
இப்போது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் மருத்துவ படிப்புகளுக்கான உரிமையும் பறிபோய்விட்டது. அண்மைக்காலமாக உச்சநீதிமன்றம் அளித்து வரும் தீர்ப்புகள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காததாக இருப்பது தொடர் கதையாகி வருகிறது. கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு அனுமதி, ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு தடை போன்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் தற்போது மருத்துவபொதுநுழைவுத் தேர்வுக்கு அனுமதி என்கிற பேரிடியும் விழுந்துள்ளது. ஆகையால் பொதுமருத்துவ நுழைவுத் தேர்வுக்கு அனுமதி அளிக்கும் இந்த தீர்ப்புக்கு எதிராக உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.  nakkhheran.in


கருத்துகள் இல்லை: