வியாழன், 17 டிசம்பர், 2015

இடநாழியில் ஒரு காலோச்சா...... திருப்பங்களில் எல்லாம் ஒரு கவிதைத் தன்மை..


இந்த மலையாள திரைப்படம் மிக பெரிய வெற்றி படம் .
எனகென்னவோ இந்த படம் உரிய முறையில்  கவுரவிக்க படவில்லை என்றே கருதுகிறேன். தேசிய விருதுகள் பெற்றிருக்க வேண்டிய படம் ஏனோ பெறவில்லை.
ஜெயபாரதி,  சோமன், திலகன், கார்த்திகா, வினீத், நிழல்கள் ரவி, ஆடூர் பாசி மற்றும் பலர் நடித்த இதன் இயக்குனர் பத்ரன் ,
பழம்பெரும் இசையமைப்பாள தக்ஷணாமூர்த்தியின் மிக மிக அற்புதமான இசையில் இது உருவானது.
ஒரு படத்திற்கு பின்னணி இசை எவ்வளதூரம் உயிரை கொடுக்கும் என்பதை இந்திரைப்படம் எடுத்துக்காட்டுகிறது,

பதினைந்து வருஷங்களுக்கு முன்பு கோபித்து கொண்டு போய்விட்ட கணவன்.
மனசுக்குள்ளே வருஷங்களாக அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணின் சோகத்தை கண்களில் தேக்கி உணர்ச்சி பிழம்பாக ஆனால் மௌனமாக காட்சி தரும் ஜெயபாரதியின் முகம் யாராலும் மறக்கவே முடியாது ,

அவரது கண்களில் ஒரு  உயிர் அழுகின்ற ஓசை படம் பார்ப்பவர்கள்
எல்லோரினதும் மனதையும் நிச்சயம் ஊடுருவும் .
பிரிந்து போன கணவன் மகனை முதல் முதலாக கண்ட பொழுது அம்மைக்கு சுகமானு என்று கேட்டதை மகன் வினீத் மிக சாதரணமாக ஜெயபாரதியிடம் கூறும் காட்சி......
ஜெயபாரதியிடம் ஒரு எரிமலை பொங்கி எழுகிறது....அம்மைக்கு சுகமாணு?
ஓர் ஆயிரம் கேள்விகள் கேட்க துடிக்கும் கண்ணகி போல அவள் வெடிக்கிறாள்...

பதினைந்து வருஷங்களாக ஒரு தபால் கூட போடாத கணவன் இன்று தனது நலம் விசாரிப்பதை அவளால் தாங்கவே முடியவில்லை....
அமுங்கி போயிருந்த கோபம்.....
ஜெயபாரதியின் கண்களோடு போட்டி போடும் தக்ஷனாமூர்த்தியின் இசை. 
தக்ஷனாமூர்த்தியின் இசையில் எவ்வளவு தூரம் உணர்சிகள் பேசும் என்பதை என்னால் எழுதிக்காட்ட முடியவில்லை.
ஒற்றை காலில் சதங்கை அணிந்து ஜெயபாரதியின் கால்கள் கணவனை பேசும் காட்சி... அதற்கு உயிர் கொடுக்கும் இந்தோள ராகம்.


தந்தை கொடுத்த தங்க பேனாவை மகன் ரசிக்கும் பொழுது அதிர்ச்சி அடைந்து மகன் தந்தைக்கு பின்னால் சென்று விடுவானோ என்று பதட்டப்படும் தாய்..

இதில் மற்றுமொரு அற்புத படைப்பு இசைநாட்டம் கொண்ட ஒரு வித்தியாசமான பாதிரியார் திலகன்.
இதில் திலகனின்  நடிப்பு பெரும்பாலும் அடக்கியே வாசிக்கப்பட்டுள்ளது,
 ஜெயபாரதி முதல் முதலாக பாதிரியார் திலகனை பின்பக்கம் பார்க்கையில் அவர் தனது கைகளை அசைத்து எதோ ஒரு இசையை தனக்குள்  மீட்டு கொண்டிருக்கிறார்.
 எனவே அவர் இசைக்கலையில் தேர்ச்சி பெற்ற தன்மகனுக்கு கல்லூரியில் இடம்பெற்று தருவார் எனஎண்ணி அவரை நோக்கி செல்லும் காட்சி அற்புதம்.  ஏற்கனவே அனுமதி  நிராகரிக்கப்பட்ட அனுமதி பத்திரங்ககளோடு  அவரை நோக்கி ... அந்த இடத்தில் வரும் மேற்கு இசை அருமையோ அருமை,

இந்த காட்சி ஏனோ எனக்கு ஆங்கில ஐரோப்பிய படங்களில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை கொடுத்தது, அவ்வளவு நல்ல காட்சி.

இதில் ஒரே ஒரு சிறு விடயம் எனக்கு கொஞ்சம் சிக்கலாக இருந்தது, கார்த்திகா வயதில் கூடியவளாக இருந்தும் வினீத் அவளை காதலித்து பல சிக்கல்களை வாங்கி கொள்கிரான் , அதுவல்ல பிரச்சனை. கார்த்திகாவின் வசனங்களும் நடிப்பும் கொஞ்சம் சினிமா பாணியாக இருந்தது , இந்த படத்துக்கு அது தேவை இல்லை,
வினீத்தின் காதல் ஒரு விடலையின் சபலம் அல்லது காதல் என்று எதிலும் சேர்த்து விடமுடியாத ரகம். மிகவும் ரசிக்க கூடியதாக இருவரும் காட்டி உள்ளனர்,  உன்னை ஒரு தம்பி மாதிரி எண்ணித்தான் நான் பழகினேன் என்று கூறினாலும் அவரையும் மீறி அவர் வினீத்தை மெதுவாக காதலிக்கிறார், அது எப்போ ஆரம்பித்தது என்று நமக்கு விளங்க முதலே நாசூக்காக கதை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விடுகிறது.
பல இடங்களில் கதை அபசுரம் ஒலிக்ககூடிய இடங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் எவ்வளவு அற்புதமாக கடந்து இருக்கிறார் இயக்குனர் பத்ரன்.
இந்த  படத்தில்  எதை எழுதுவது  எதை விடுவது என்பது  பெரிய சிக்கல். என்னால் எதையும் இலகுவாக விடமுடியவில்லை ,

ஏனென்றால்  ஒரு  திரைப்படம் எப்படி  அழகாக இருக்க வேண்டும் என்று  இது காட்சிக்கு காட்சி எடுத்து காட்டுகிறது .
இது எமக்கெல்லாம்  உண்மையில் திரைப்பட  கலையை பற்றி  வகுப்பு  எடுக்கிறது என்றும் கூறலாம் .
இப்படம் ஒரு அதி உயர்ந்த கலைப்படைப்பு.
மனித வாழ்வின் ஏராளமான இருண்ட அல்லது வெளிச்சம் உள்ள பல பகுதிகளையும் கவிதை போல ஆனால் காரசாரமாக காட்டி உள்ளது.
இந்த மாதிரி ஒரு படம் இந்திய மொழிகள் எதிலும் இதுவரையில் வரவே இல்லை,

இந்த படம் எந்த ரகம் என்று இலகுவில் சொல்ல முடியாது,
காட்சிக்கு காட்சி ஆழமான கற்பனையுடன் பார்வைக்கு அழகாக செவிக்கு இனிமையாக  படமாக்கப்பட்டுள்ளது,
அதே சமயம் சமுகத்தின் புரையோடிப்போன பெரும் பிரச்சனைகள் பலவற்றை ஒரே திரைப்படத்தில் புகுத்திய ஒரு சாதனையை இதுவரையில் வேறு திரைப்படம் எதிலும் நான் காணவில்லை.
இதன் முக்கியமான சிறப்பாக கூறுவதாயின்,  கதையின் மிகவும் அழுத்தமான அல்லது பாரமான திருப்பங்களில் எல்லாம் ஒரு கவிதைத் தன்மையை புகுத்தி மனித வாழ்வு ஒரு அழகான கவிதை அல்லது இசை போன்றது என்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள்.
இன்னும் ஒரு முக்கியமான கலைஞர் இந்த படத்தின் எடிட்டர் மணியாகும். காட்சிகள் நகரும் வேகம் சலிப்பு தட்டவே இல்லை,
அடுக்கடுக்காக காட்சிகள் நகர்வது மிகவும்  திறமைசாலியான எடிட்டரால் தான் முடியும்.
சில காட்சிகள் முன்னே பின்னே மாறி வரும் கட்டு மானம் பாராட்டத் தகுந்தது,
படத்தில் எத்தனையோ பின்னணி இசைமெட்டுக்களும்  நல்ல பாடல்களும் பல வருஷங்களுக்கு மறக்கவே முடியாது , ஜெயபாரதிக்கும் பத்த்ரனுக்கும் மட்டுமல்ல தக்ஷனமூர்த்திக்கும் திலகனுக்கும் கூட இது ஒரு மைல் கல்தான்   cinepass.blogspot.com

கருத்துகள் இல்லை: